
உறுதியான தலைமுடிக்கு நாம் நிறைய கவனம் செலுத்தி பராமரிக்கிறோம். தலைமுடி உதிர்வுக்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஒருவரின் பாரம்பரியத்தில் தொடங்கி, ஊட்டசத்து குறைபாடு, சுற்றுச்சுழல், ஹார்மோன் கோளாறுகள், மன உளைச்சல், மருந்து மாத்திரைகளின் பின் விளைவுகள், அலோபேசியா உள்ளிட்ட ஏராளமான காரணங்களை கூறலாம். இந்த காரணங்களை எல்லாம் தாண்டி தலைமுடியை உறுதியாக வளர்க்க இந்த ஒரு ஹேர்பேக் போதுமானது.
ஹேர் பேக்கிற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
ஒரு கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை விட்டு இரவு முழுக்க ஊற வைக்கவும்.
இரண்டு கப் அளவிற்கு முருங்கை இலைகளை நிழலில் இரண்டு நாள் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் அளவிற்கு கற்றாழை மடல்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், காய்ந்த முருங்கை இலைகள், நறுக்கிய கற்றாழை மடல்கள் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெந்தயத்திலும், கற்றாலையிலும் ஈரப்பதம் இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவை இருக்காது.
பயன்படுத்தும் முறை:
அரைத்து எடுக்கப்பட்ட இந்த ஹேர் பேக்கை தலையில் தடவுவதற்கு ஒரு நாள் முன்னரே, தலைக்கு குளித்து முடியினை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். சுத்தமான தலைமுடியில் இந்த ஹேர்பேக்கை முடியின் வேர் வரை செல்லும் அளவிற்கு தடவி மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் அரை மணி நேரம் அளவிற்கு ஹேர் பேக்கை தலையில் ஊற வைக்கவும். அரைமணி நேரம் கழித்த பின்னர் தலைக்கு குளிக்கவும். குளிக்கும் போது தலைக்கு ஷாம்பு உபயோகிக்க கூடாது, குளித்த பின்னர் வேதிப் பொருள் மிகுந்த கண்டினர் எதுவும் போடக் கூடாது.
ஒரு நாள் கழித்து வழக்கம் போல தேங்காய் எண்ணெயை தலையில் தடவி வரலாம். வாரம் ஒரு முறையாவது முடியினை வளர்க்கும் இந்த ஹேர் பேக்கினை பயன்படுத்தி வந்தால், உங்கள் தலைமுடி மிகவும் அடர்த்தியாகவும் தேர் வடம் பிடிக்கும் கயிற்றை போல மிகவும் உறுதியாகவும் இருக்கும்.
வெந்தயத்தின் பண்புகள்:
வெந்தயம் உடல் சூட்டினை குறைத்து குளிர்விக்கும் பண்பினை கொண்டுள்ளதால், உடல் சூட்டினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சினைகளை குறைக்கும். வெந்தயத்தில் உள்ள வழுவழுப்பான தன்மை கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. இதில் உள்ள போலிக் ஆசிட் முடியின் ஊட்டச்சத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள ஃப்ளவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் என்னும் தாவர வேதியியல் கலவைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் பண்புகளை கொண்டுள்ளதால் தலையில் உள்ள பொடுகு மற்றும் தொற்று பிரச்சினைகளை முற்றிலும் குறைக்கிறது.
முருங்கை இலையின் குணங்கள்:
முருங்கை இலையில் இரும்பு சத்தும் ஏராளமான வைட்டமின்களும் இருப்பது நாம் ஏற்கனவே அறிந்தது தான். உச்சந்தலையில் உள்ள செபாசியஸ் சுரப்பிகளில் , வறட்சி காரணமாக அடைப்பு ஏற்பட்டு முடியின் வேர்கள் பலவீனமடைகின்றன. முருங்கை இலையில் உள்ள துத்தநாகம் செபாசியஸ் சுரப்பிகளின் அடைப்புகளை நீக்கி, முடியின் வேர்களில் வளர்ச்சிக்கு தூண்டுகிறது. இதனால் மந்தமான முடி வளர்ச்சி மீண்டும் வேகமாக வளரத் தொடங்கும்.
கற்றாழையின் மருத்துவ பண்புகள்:
கற்றாழையில் முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. மேலும் கற்றாழையில் வைட்டமின் ஏ மற்றும் சி யும் உள்ளது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து முடியைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. வறண்ட தலையை ஈரப்பதமாக்கும் கற்றாழை பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளை நீக்கி முடியினை ஊட்டமாக வளர வைக்கிறது.
தனித்தனியாக வெந்தயம், முருங்கை இலை மற்றும் கற்றாழை ஆகியவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் ஆக பயன்படுத்தும் போது அதன் மருத்துவ குணங்கள் இன்னும் அதிகமாவதோடு, அதனால் தலைமுடிக்கு கிடைக்கும் பயன்களும் அதிகமாகிறது.