பெரும்பாலான ஆண்களுக்கு தாடி, மீசையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முடி வளராமல் இருக்கும். பெரும்பாலும் இந்த பிரச்சனை தலையில் ஏற்படும். இதை நாம் வழுக்கை என்று கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி வளராமல் இருந்தால் அது புழுவெட்டு அல்லது பூச்சி வெட்டு ஆகும். ஒருவருக்கு புழுவெட்டு ஏற்பட்டுள்ள இடத்தில் மீண்டும் முடி வளர்வது சிக்கலான ஒன்றாக இருக்கும். நாம் இந்த பதிவில் புழுவெட்டு ஏன் ஏற்படுகிறது; புழுவெட்டு உள்ள இடத்தில் மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
புழுவெட்டு:
புழுவெட்டு ஆங்கிலத்தில் Alopecia Areata என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோ இம்யூன் நோயால் முடியின் வேர்க்காலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை மரபணு, நீரிழிவு நோய், தைராய்டு, இரத்த சோகை, தோல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படும். புழுவெட்டு பூஞ்சை காரணமாக ஏற்படுகிறது.
இதை ட்ரை பண்ணுங்க:
சின்ன வெங்காயத்தின் சாறு எடுத்து பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தேய்த்தால் முடி விரைவில் வளரும். வெங்காய சாறு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் ஏற்றதாழ்வு மற்றும் ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அரைத்து பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் நாளடைவில் முடி வளர்ச்சி ஏற்படும்.
ஆமணக்கு எண்ணெயை சூடாக்கி பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து மறுநாள் தலை குளித்து வந்தால் முடி வளர்ச்சி ஏற்படும். இதில் உள்ள ரிசினோலின் அமிலம் அழற்சி எதிர்ப்பாக செயல்படுகிறது.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தேய்த்தால் நாளடைவில் முடி வளர்ச்சி ஏற்படும்.
கற்றாழை ஜெல் முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. எனவே கற்றாழை ஜெல்லை பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தேய்த்தால் சிறந்த தீர்வாக இருக்கும்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கலிங்காதி தைலத்தை புழுவெட்டு உள்ள இடத்தில் பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக வளரும்.
குமட்டிக்காய் சாற்றை பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தேய்த்தால் விரைவில் முடி வளர்ச்சி உண்டாகும்.
தாடி, மீசை மற்றும் தலைமுடியை பராமரிப்பதற்கு சந்தையில் கிடைக்கும் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தும் போது கவனமாக கையாள வேண்டும். ஏனெனில் ஒவ்வாமை காரணமாக பூச்சி வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இரத்த சோகை உள்ளவர்களுக்கு புழுவெட்டு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது. இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் உடலில் தேவையான அளவு இரும்புச்சத்து இருந்து, புழுவெட்டு பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
குறிப்பு: பூச்சி வெட்டு உள்ள இடத்தில் மருந்துகள் தேய்க்கும் போது அழுத்தி தேய்க்க கூடாது. தழும்பாக மாறிவிட்டால் பிறகு முடி வளர வாய்ப்பில்லாமல் போய்விடும்.