

குங்குமப்பூ சமையல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகு பராமரிப்பிற்கும் ஏற்றது. சிவப்பு தங்கம் என்று போற்றப்படும் குங்குமப்பூ 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டது. இது சரும நிறத்தை மேம்படுத்தவும் சருமத்தின் இயற்கையான பொலிவை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இதன் மென்மையான நறுமணம் மற்றும் பளிச்சிடும் வண்ணத்திற்காக அனைவராலும் விரும்பப்படுகிறது.
1. சருமம் பளபளக்க ஃபேஸ் பேக்:
ரெண்டு குங்குமப்பூ இழைகளை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் ஊறவைத்து அதனுடன் சிறிது சந்தனம் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்த பின்பு கழுவவும். இது சருமத்திற்கு உடனடி பொலிவைத்தரும்.
2. உதடுகளுக்கு:
குங்குமப்பூவை சிறிது பாலில் ஊற வைத்து வெண்ணெய் கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
3. சரும நிறத்தைக் கூட்ட:
குங்குமாதித் தைலம் மிகவும் தொன்மையானது. இது சரும செல்களைப் புத்துணர்ச்சியூட்டவும், சரும நிறத்தைப் பிரகாசமாக்கவும், இளமையான தோற்றத்தை அளிக்கவும் செய்யும்.
4. முகப்பரு மற்றும் தழும்புகளை நீக்க:
3-4 குங்குமப்பூ இதழ்கள், சிறிதளவு வேப்பிலை அல்லது துளசி இலை பேஸ்ட் இரண்டையும் நன்றாகக் கலந்து முகப்பரு உள்ள இடங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ குங்குமப்பூவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்களை குணமாக்கவும் தழும்புகளை நீக்கவும் உதவும்.
5. டோனராகப் பயன்படுத்த:
ரோஸ் வாட்டர், நாலைந்து குங்குமப்பூ இதழ்கள் இரண்டையும் எடுத்து ஒரு சிறிய பாட்டிலில் சேர்த்து நன்கு ஊற விடவும். ரோஸ் வாட்டர் லேசான மஞ்சள் நிறமாக மாறும். பிறகு இதனை தினமும் இரவில் முகத்தைக் கழுவிய பின் பஞ்சைப் பயன்படுத்தி முகம் முழுவதும் டோனர் போலத் தடவி வரலாம்.
6. வறண்ட சருமத்திற்கு:
ஒரு ஸ்பூன் தேன் மற்றும் மூன்று நான்கு குங்குமப்பூ இதழ்கள் இரண்டையும் நன்கு கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு கழுவவும். இது சருமத்தின் வறட்சியைப் போக்கி மென்மையாக்கும்.
அதேபோல் குங்குமப்பூவை சிறிது பாலாடையுடன் நன்கு கலந்து முகத்தில் மசாஜ் செய்துவர சரும வறட்சி நீங்கி முகம் மென்மையாக பளபளக்கும்.
7. சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்த:
கற்றாழை ஜெல்லுடன் குங்குமப்பூவைக் கலந்து இரவு தூங்கும் முன்பு ஃபேஸ் சீரம் போல பயன்படுத்தலாம். இது சருமத்திற்குத் தேவையான ஆழமான ஈரப்பதத்தைக் கொடுத்து சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
8. வயதாவதற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்த:
குங்குமப் பூவை நேரடியாக பயன்படுத்தாமல் பால், தேன் அல்லது தண்ணீரில் ஊறவைத்து முகம் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.
குங்குமப்பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் சருமத்தை இளமையாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் பராமரிக்கின்றன. குங்குமப்பூ சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது. இதில் உள்ள குரோசின் என்ற கலவை, சருமம் முன்கூட்டியே முதிர்ச்சி அடைவதைத் தடுத்து சுருக்கங்களைக் குறைக்கிறது.
9. சீரான நிறமுள்ள சருமத்தைப் பெற:
குங்குமப்பூ சருமத்தில் உள்ள மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை குறைப்பதன் மூலம் சீரான மற்றும் பொலிவான சரும நிறத்தைப் பெற உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சரும சேதங்களைச் சரிசெய்து இயற்கை ஒளிர்வைத் தருகின்றன.
இரண்டு மூன்று குங்குமப்பூ இழைகள் கலந்த வெதுவெதுப்பான பாலைத் தினமும் தவறாமல் அருந்த சீரான நிறமுள்ள சருமத்தைப் பெறலாம்.
10. ஆழ்ந்த தூக்கத்திற்கு:
இரவில் உறங்குவதற்கு முன்பு குங்குமப்பூ கலந்த பாலைப் பருகுவது குங்குமப்பூவில் உள்ள இயற்கையான அமைதிப்படுத்தும் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் பண்புகளால் மனதை ஆசுவாசப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை ஊக்குவிக்கும். இது இரவு நேர சருமப் பழுதுபார்ப்புக்கு உதவவும் செய்யும். சருமத்தின் இயற்கையான பொலிவை உள்ளிருந்து மேம்படுத்த உதவும்.
11. கருவளையங்கள் போக:
கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை ஐந்தாறு எடுத்து குளிர்ந்த பாலில் ஊற விடவும். பிறகு இந்தக் கலவையை ஒரு பஞ்சில் நனைத்து கண்களைச் சுற்றி கருவளையம் உள்ள பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறைந்து விடும்.
1 ஸ்பூன் பாதாம் எண்ணெயில் 4 ஸ்பூன் குங்குமப்பூ இழைகளை சேர்த்து சில நிமிடங்கள் ஊற விட்டு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த எண்ணையை ஒரு சொட்டு எடுத்து கண்களுக்கு கீழே மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவ பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ கருவளையங்களை மிக விரைவாக போக்கச் செய்யும்.
இரசாயனப் பொருட்கள் இல்லாமல் இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரித்து, பல வருடங்களாகப் பின்பற்றப்படும் பாரம்பரிய வழிகள் மூலம் பொலிவான முகத்தைப் பெறுவதற்கான எளிய வழிகாட்டி.