இரவு அளவுக்கு அதிகமாக தூங்கினாலோ, அல்லது வெகு நேரம் தூங்காமல் ஒரே அடியாக தூங்கும்போது காலையில் முகம் வீங்கியிருக்கும். குறிப்பாக கண்களுக்கு கீழ் அதிகமாகவே இருக்கும். இப்படியான முக வீக்கத்தை சரிசெய்ய சில வழிகளைப் பார்ப்போம்.
முகம் காலையில் வீங்கியிருப்பது, அல்லது முகத்தின் வடிவம் வழக்கத்திற்கு மாறாக இருப்பது போன்ற பிரச்னைகளைக்கு முக்கிய காரணம் உப்பும் சர்க்கரையும்தான். உடலில் ஏற்படும் நீர்த் தேக்கம் மற்றும் சரும அழற்சி ஆகிய இரண்டுக்கும் இந்த இரண்டே முக்கியக் காரணமாக அமைகின்றன. எனவே, முகத்தை மெலிதாக்கவும், எடுப்பான தாடையைப் பெறவும், உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை மாற்றுவதே மிகச் சிறந்த வழியாகும்.
உடலில் உள்ள நீர்ச் சத்தின் அளவை சமன் செய்வதில் சோடியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் அதிக உப்புள்ள உணவுகளை ( ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ், துரித உணவுகள்) உண்ணும்போது, சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது.
உடலில் சோடியம் அதிகரிக்கும்போது, அதைச் சமன் செய்ய உடல் அதிக தண்ணீரைச் சேமிக்கத் தொடங்குகிறது. இந்த அதிகப்படியான நீர் முகத்தின் திசுக்களிலும், கண்ணுக்குக் கீழும் தேங்கி நிற்பதால், முகம் வீங்கியது போல (Puffy Face) தோன்றுகிறது. குறிப்பாக இரவில் அதிக உப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டு படுத்தால், காலையில் முகம் வீங்குவது உறுதி.
உப்பை விட ஆபத்தானது, சர்க்கரை. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்புகள் மற்றும் வெள்ளை நிற மாவுப் பொருட்கள் ஆகியவை உடலில் தீவிர அழற்சியை ஏற்படுத்துகின்றன. அதிக சர்க்கரை உட்கொள்ளல் உடலில் உள்ள கொலாஜன் (Collagen) மற்றும் எலாஸ்டின் (Elastin) போன்றவற்றை சேதப்படுத்தி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கிறது.
மேலும், இது முகத்தில் கொழுப்பு சேர்வதையும் தூண்டி, வீக்கம் மற்றும் சோர்வான தோற்றத்தை அளிக்கிறது. சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம், சில நாட்களில் முக வீக்கம் குறைந்து, முகம் பொலிவுடன் காட்சியளிக்கத் தொடங்கும்.
டயட் ரகசியங்கள்
முக வீக்கத்தைக் குறைத்து, முக அமைப்பை மேம்படுத்த சில எளிய உணவு ரகசியங்களைப் பின்பற்றலாம்:
நிறைய தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது நீர்த் தேக்கத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த வழி.
வாழைப்பழம், அவகேடோ, கீரைகள் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம், சோடியத்தின் எதிர்ச் செயல்பாட்டைச் செய்து, உடலில் நீரின் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது வீக்கத்தைக் குறைக்க உதவும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ்கள், சோடா பானங்கள் மற்றும் இனிப்புகளை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் அழற்சியைக் குறைக்கலாம்.
இந்த எளிய உணவு முறை மாற்றங்கள் மூலம், முகத்தில் உள்ள தேவையற்ற வீக்கம் நீங்கி, இயற்கையாகவே கூர்மையான, இளமையான தோற்றத்தைப் பெற முடியும்.