
சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க சில எளிய குறிப்புகளை பயன்படுத்துவது அவசியம். விரைவான சரும பராமரிப்பிற்கு முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது சருமத்தை சுத்தப் படுத்துவதும், ஈரப்பதமாக்குவதும், சருமத்தை பாதுகாப்பதுமாகும். குறிப்பாக வியர்வை அல்லது மேக்கப் போட்ட பின்பு, தினமும் இரண்டு முறை லேசான க்ளென்சரைப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வது அவசியம்.
சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க சருமத்தின் தன்மைக்கேற்ப கிரீம்களை பயன்படுத்துதல் நல்லது. எண்ணெய் பசை சருமமாக இருந்தாலும், வறண்ட சருமமாக இருந்தாலும் அதற்கேற்ற மாய்ஸ்சரைசர் களையும், கிரீம்களையும் ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தலாம்.
சருமத்தை சுத்தம் செய்வது அழுக்கு, தூசி மற்றும் எண்ணெய் பசையை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை கையாளும் பொழுது அவற்றை கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. இது சருமத்தில் தழும்புகளை ஏற்படுத்தும்.
வெளியில் செல்லும்போது சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்க SPF 30 சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.
வாரத்திற்கு இரண்டு மூன்று முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் இறந்த சரும செல்களை நீக்கி பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
சருமத்தை மீட்டெடுப்பதில் போதுமான தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் பழுது பார்க்கப்பட்டு புத்துணர்ச்சி பெற 7-8 மணி நேர சீரான துக்கம் அவசியம்.
மன அழுத்தம் சருமத்தை பாதிக்கலாம். எனவே அதை நிர்வகிக்க தியானம் அல்லது யோகா போன்ற ஆரோக்கியமான பயிற்சி வழிமுறைகளைக் கண்டறியவும்.
சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்வது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதமாக்க உதவும்.
சருமத் துளைகள் அடைபடாமல் இருக்க படுக்கைக்கு செல்வதற்கு முன்பு க்ளென்சிங் ஜெல் மூலம் மேக்கப்பை அகற்றிவிடவும். இது சருமத்தை வெடிப்புகள் இல்லாமலும், அழுக்குகள் படிவதை தடுத்து சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்துடன் பப்பாளி, வாழைப்பழம் போன்ற பழங்களின் தோல்களை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விட முகம் பளிச்சென்று மின்னும்.
ஜங்க் ஃபுட், எண்ணெயில் பொரித்த, வறுத்த, அதிக மசாலாக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சருமம் பொலிவிழந்து விரைவில் முதிர்ச்சியான தன்மை பெறும். எனவே இவற்றை தவிர்த்துவிடுதல் நல்லது.
சருமத்திற்கு விட்டமின் டி மிகவும் அவசியம். காலை மாலை வேளைகளில் இளம் வெயிலில் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்களாவது 15 நிமிடங்கள் நிற்பதை வழக்கமாக்கிக் கொண்டால் சருமம் வறண்டு, தொய்ந்து போகாமல் பளிச்சென்று இருக்கும்.
நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான சருமத்திற்கு நல்லது.
சரும ஆரோக்கியம் என்பது முகம் மட்டும் அழகாக இருப்பதல்ல. உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்காக சிறிது மெனக்கிட வேண்டியது மிகவும் அவசியம்.