
நவநாகரீக பழக்கங்களில் பெண்களின் அழகை மேம்படுத்தும் வெளி சாதனங்களில் ஒன்றாகி விட்டது ஹை ஹீல்ஸ் எனப்படும் குதி உயர்ந்த காலணி. கல்லூரிப் பெண்கள் முதல் பணிக்குச் செல்லும் பெண்கள் வரை ஹை ஹீல்ஸ் அணியாத பெண்கள் இல்லை எனலாம். ஆனால், இந்த ஹை ஹீல்ஸ் நமது பெண்களுக்கு ஏற்றதா இல்லையா எனும் வாதங்கள் இன்றும் இருந்து வருகிறது.
சில சூழ்நிலைகளில் கால் ஆரோக்கியத்திற்கு ஹைஹீல்ஸ் பொருத்தமானதாகத் தெரியலாம். ஆனால், அவை சாத்தியமான குறைபாடுகளையும் கொண்டுள்ளதாக மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கே ஒரு சமநிலையான பார்வையில் ஹை ஹீல்ஸ் குறித்து அலசலாம்.
ஹை ஹீல்ஸ் தரும் நன்மைகள்
ஹை ஹீல்ஸ் அணிவதால் தன்மீதான ஈர்ப்பு மையத்தை மற்றவர்களிடம் மாற்றுவதன் மூலமும், நிமிர்ந்த நிலைப்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் கம்பீரமான உடல் தோரணையை மேம்படுத்தலாம். உயரம் குறைவானவர்கள் மற்றும் பலருக்கும் ஹை ஹீல்ஸ் அணிவது அதிக தன்னம்பிக்கையையும் அதிகாரத்தையும் அளிக்கும். பொருத்தமான ஹை ஹீல்ஸ் அணியும் உடைக்கு ஏற்ப ஒரு நாகரீகமான மற்றும் ஸ்டைலான கவர்ச்சி தருகிறது.
குறைபாடுகள்
பொதுவாகவே ஹை ஹீல்ஸ் கால் வலியை ஏற்படுத்தும், குறிப்பாக கால் விரல்கள், குதிகால் மற்றும் வளைவுகளில் ஒருவித அசௌகரியத்தை தரும்.
ஹை ஹீல்ஸை தொடர்ந்து நீண்ட நேரம் அணிவது நீண்ட கால சேதத்திற்கு வழிவகுக்கும். பெருவிரலின் அடிப்பகுதியில் உருவாகும் எலும்பு புடைப்புகள், சிறிய கால் விரல்களில் ஒன்றின் நடு மூட்டில் அசாதாரண வளைவால் நுனி கீழ்நோக்கி சுருண்டுவிடும் பாதிப்புகள், தசைநார் திரிபு மற்றும் கணுக்கால் உறுதியற்ற தன்மை ஆகிய கால் சேதங்கள் உருவாகும்.
மேலும் நமது இயற்கையான நடையை மாற்றக்கூடும். இதனால் அழுத்தம் சீரற்ற முறையில் பரவுவதற்கும் சமநிலையில் சாத்தியமான பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
அப்படியானால் ஹை ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? வேண்டியதில்லை. அணிவதற்கான சில பாதுகாப்புக்குறிப்புகளை கடைப்பிடித்து தாராளமாக அணியலாம்.
உதவிக்குறிப்புகள்
காலுக்கு வசதியான ஹீல்ஸைத் தேர்வு செய்க. சிறந்த நிலைத்தன்மைக்கு குறைந்த உயரம் (3 அங்குலத்திற்கும் குறைவானது) மற்றும் அகலமான அடித்தளம் கொண்ட ஹீல்ஸைத் தேர்வு செய்வது நல்லது. ஹை ஹீல்ஸ் அணியும் போது நடப்பதால் எழும் அழுத்தம் மற்றும் பயன்படுத்தும் கால அளவைக் கட்டுப்படுத்துங்கள்.
தனிப்பயன் ஆர்த்தோடிக்ஸ் அல்லது சாக்ஸ் போன்ற தனிக்கவனங்கள் அழுத்தத்தை மறுபகிர்வு செய்து அசௌகரியத்தைக் குறைக்க உதவும். பயன்படுத்தியபின் வழக்கமான ஓய்வு மற்றும் உடற்பயிற்சி கால் வலியைக் குறைக்கவும் தசைகளை வலுப்படுத்தவும் உதவும்.
இறுதியாக, உங்கள் பாத ஆரோக்கியத்திற்கு ஹை ஹீல்ஸ் பொருத்தமானதா என்பது உங்கள் தனிப்பட்ட பாத வடிவம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நீங்கள் தொடர்ந்து பாத வலி அல்லது அசௌகரியத்தை அனுபவித்தால் ஹை ஹீல்ஸ் தவிர்த்து பாத மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனையுடன் அணிவது சிறந்தது.