
ஜீன்ஸ் பேன்ட்கள் உலகம் முழுவதும் பரவலாக அணியப்படும் உடையாகத் திகழ்கின்றன. அதன் பல்துறை பயன்பாடு மற்றும் ஸ்டைலான தோற்றத்தின் காரணமாக பலரும் இதனை தினமும் அணிய விரும்புகிறார்கள். இருப்பினும், ஜீன்ஸை அன்றாடம் அணிவதால் ஏற்படும் உடல்நலக் குறைகள் குறித்து பலருக்கும் முழுமையாகத் தெரிவதில்லை. இந்நிலையில் தொடர்ந்து ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் விளைவுகளும், ஜீன்ஸுக்குப் பதிலாக அணியக்கூடிய ட்ரெண்டிங் மாற்று உடைகள் குறித்தும் இங்கே தெரிந்து கொள்வேம்.
தினமும் ஜீன்ஸ் அணிவதால் ஏற்படக்கூடிய விளைவுகள்:
1. சரும தொற்றுகள் மற்றும் எரிச்சல்:
மிகவும் இறுக்கமான ஜீன்ஸ், சருமத்திற்குப் போதுமான காற்றோட்டத்தை வழங்காது.
இது வியர்வையை தேக்கி, குறிப்பாக இடுப்பு மற்றும் தொடை பகுதியில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது.
இதன் விளைவாக, பூஞ்சை தொற்றுகள் (Fungal infections) மற்றும் பாக்டீரியா தொற்றுகள் (Bacterial infections) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
2. நரம்பு அழுத்தம்
இடுப்பு மற்றும் தொடைகளில் மிகவும் இறுக்கமாக இருக்கும் ஜீன்ஸ், கால்களுக்குச் செல்லும் நரம்புகளில் அழுத்தம் ஏற்படும்.
இது இறுக்கமான ஜீன்ஸ்கள் மட்டுமல்ல, இறுக்கமான எந்த உடையாலும் வரக்கூடியதாகும்.
3. செரிமானப் பிரச்சனைகள்:
இடுப்புப் பகுதியில் அதிக இறுக்கம் கொண்ட ஜீன்ஸ், வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி, செரிமான மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் அல்லது வாயுப் பிரச்னைகளை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.
சரி, ஜீன்ஸுக்கு பதிலாக என்ன அணிவது?
தினமும் ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு, அணிவதற்கு வசதியாக இருக்கும் பல மாற்று உடைகள் தற்போது பிரபலமாகி வருகின்றன.
1. சின்னோஸ் (Chinos)
இவை காட்டன் ட்வில் (cotton twill) துணியால் செய்யப்பட்ட, ஜீன்ஸை விட மெல்லிய மற்றும் இலகுரக பேன்ட்கள். இவை ஃபார்மல் மற்றும் கேஷுவல் உடைகளுக்கு ஏற்றவையாகும். அலுவலகம் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வு.
2. கார்கோ பேன்ட்கள்
பல பாக்கெட்டுகளைக் கொண்ட கார்கோ பேன்ட்கள், சௌகரியத்திற்கும் நடைமுறை தேவைக்கும் ஏற்றவை. இவை பருத்தி அல்லது பருத்தி கலந்த துணிகளில் விற்கப்படுகின்றன.
3. லினன் பேன்ட்கள்
லினன் துணி இயற்கையாகவே குளிர்ச்சியானது. கோடை காலத்திற்கு ஏற்றது. இவை தளர்வான மற்றும் வசதியான தோற்றத்தை வழங்கும்.
4. ஜாகிங் பேன்ட்கள் / டிராக் பேன்ட்கள்
விளையாட்டு உடைகள் அல்லது வீட்டில் அணியப் பயன்படுத்தப்படும் இவை, தற்போது கேஷுவல் வெளிப்பயன்பாட்டிற்கும் பிரபலமாகி வருகின்றன. இவை மிகவும் வசதியானவை.
5. பலாஸ்ஸோஸ் (Palazzos):
பெண்களுக்கு, தளர்வான மற்றும் அகலமான கால்களைக் கொண்ட பலாஸ்ஸோ பேன்ட்கள் மிகச் சிறந்த மாற்று. அவை காற்றோட்டமாகவும், ஸ்டைல்லாகவும் இருக்கும்.
6. லூஸ் ஃபிட் ஜீன்ஸ்
ஸ்கின்னி ஜீன்ஸ்களுக்குப் பதிலாக, ஸ்ட்ரெய்ட் கட் (straight cut) அல்லது ரிலாக்ஸ்ட் ஃபிட் (relaxed fit) ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இறுக்கமான உடையின் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
ஜீன்ஸ் பாதுகாப்பாக அணிவது எப்படி?
தினமும் ஜீன்ஸ் அணிய விரும்பினால், ஆரோக்கியமான அணுகுமுறையைப் பின்பற்றுவது அவசியம்:
மிகவும் இறுக்கமான ஜீன்ஸ்களைத் தவிர்த்து, உங்கள் உடலுக்கு வசதியான, போதுமான காற்றோட்டம் உள்ள ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கவும்.
காட்டன் போன்ற இயற்கைத் துணிகள், சருமத்தை காக்க உதவும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து, அவ்வப்போது எழுந்து நடப்பது அல்லது கால்களை அசைப்பது இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவும்.
ஜீன்ஸ்களைத் தவறாமல் துவைத்து, சுகாதாரமாகப் பராமரிக்கவும்.
ட்ரெண்டிங் ஆடைகளை அணிவது முக்கியம் என்றாலும், உடல் ஆரோக்கியமே முதன்மையானது. உடலுக்கு ஏற்ற சௌகரியமான மற்றும் ஆரோக்கியமான உடைகளைத் தேர்வு செய்வதன் மூலம், தினசரி வாழ்க்கையை எளிதாகவும் மகிழ்வாகவும் வாழ முடியும். ஏதேனும் உடல்நலக் கவலைகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.