

கை, கால் விரல்களில் உள்ள நகங்களைப் பார்த்தாலே உடல் ஆரோக்கியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். நகங்களை அழகாக பராமரிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
கை, கால் விரல் இடுக்குகளில் எரிச்சல், அரிப்பு இருந்தால் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். அலர்ஜி நீங்குவதோடு எரிச்சலும் ஏற்படாது. புதினா, துளசி இலைகளை இளஞ்சூடான நீரில் போட்டு அதற்குள் கைகளை வைத்தால் நகங்களில் கிருமிகள் ஒட்டாது. நகசுத்தியும் வராது.
மருதோன்றி இலையில் கஷாயம் வைத்து தினசரி ஒன்றரை ஸ்பூன் வீதம் பத்து நாள் குடித்து வந்தால் விழுந்துபோன நகமும், சொத்தை விழுந்த நகமும் புதிதாக முளைக்கும். வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்து கட்டினால் நகத்தைச் சுற்றி வரும் நகசுத்தி குணமாகும்.
உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகிறது. கால்சியம் மாத்திரைகளையும் அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, பப்பாளி, மாம்பழம், பேரிச்சம்பழம் போன்ற உணவு வகைகள் நகத்தை பாதுகாக்கும்.
கால்சியம் சத்து நிறைந்த வெள்ளை ஜெலட்டின் இரண்டு ஸ்பூன் எடுத்து இளஞ்சூடான நீரில் கரைத்து விரல்களின் மீது பூசி தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவி வர நகங்கள் உடையாது. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி விரல்களின் மீது ஊறவைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
நகங்கள் சொத்தையாக இருந்தால் கருமையுடன் காட்சி தரும். அப்பொழுது துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும். நகங்களைச் சுற்றி சில நேரம் நல்ல வலி இருக்கும் அப்பொழுது வெதுவெதுப்பான நீரில் டெட்டால், பெப்பர்மென்ட் ஆவியில் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவினால் வலி நீங்கி நகம் சுத்தமாகும்.
விரல்கள் மற்றும் நகங்கள் சொரசொரப்பு நீங்கி பளபளப்பாக நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.
இறுக்கமான ஷூ போன்ற காலணிகளாலும் கால் நகங்கள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி போகும். ஆதலால் ஷூ போடும்போது கவனம் தேவை.
எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல தரமான நெயில் பாலிஷ்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நகங்களின் கியூட்டிகிளில் நுண்மத்தொற்றின் பாதிப்பு இல்லாமல் நாகங்களைப் பாதுகாக்கலாம். நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் கை, கால்களை இளஞ்சூட்டு நீரில் கழுவி துடைத்து பிறகு பாலிஷ் போட்டால் நகம் மின்னும்.
துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீடு சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து முடித்ததும் கைகளுக்கு தமான சோப்பு போட்டு கழுவி நன்றாக துடைத்து நக இடுக்குகளில் அழுக்கு படாதவாறு பார்த்துக்கொண்டால், நகங்கள் நீரில் ஊறி சிதையாமல் அழகு குன்றாமல் இருக்கும். கூடிய மட்டும் கையுறைகளை பயன்படுத்தி இதுபோன்ற வேலைகளைச் செய்தால் நகங்கள் பாதிப்படையாமல் இருக்கும்.