அழகிய பாதங்களைப் பெற... எளிய டிப்ஸ்!

பாதங்கள்...
பாதங்கள்...

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை வேண்டும் பெண்மைக்கு என்பது பாரதியின் கூற்று. ஒருவருக்கு நடை அழகாக, தடுமாறாமல் , இயல்பாக இருக்க வேண்டும் என்றால் அவர் பாதம்  ஆரோக்கியம் உடையதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் நன்றாக நடக்க முடியும். அப்படி ஆரோக்கியமான கால் பாதங்களைப் பெற, நடை அழகு பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம். 

பாத வெடிப்பை போக்க:

பாத வெடிப்பு
பாத வெடிப்பு

ஆலம்பாலை கால் வெடிப்புகளில் தடவி வந்தால் குணமாகிவிடும். கால் மென்மையாகிவிடும். 

பாத வெடிப்பு மட்டுமல்லாமல் சொரசொரப்பாக சேற்றுப் புண் போன்றவை இருந்தால் கடுகை அரைத்து தினமும் பூசுங்கள். 

நமைச்சலோ எரிச்சலோ இருக்காது .பூ போன்ற பாதங்கள் உங்களுக்கே. 

சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வர பாத வலி முழுதாய் பறந்து விடும்.

நல்லெண்ணெயில் சம்பங்கி பூக்களை போட்டு காய்ச்சி சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால் பாதத்தில் தடவ சொரசொரப்பு, வெடிப்பு ஓடிவிடும்.

காய்ச்சிய நல்லெண்ணெயில் விளக்கெண்ணெய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து எலுமிச்சைச் சாறு கலந்து அந்தப் பாத்திரத்தை பிரிட்ஜில் வைத்து விடவும். இதை தினமும் காலையிலும் இரவிலும் தடவி வந்தால் பாதம் பஞ்சு போல் மென்மையாக இருக்கும். 

கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பிற்கு மருதாணி இலையை அரைத்துப் பூசி வர குணம் தெரியும். 

உடல் சோர்ந்தும் உடல் முழுவதும் வலி இருந்தாலும் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து பொறுக்கும் அளவு சூட்டில் கால்களை ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால், உடல் வலி நீங்குவதோடு சோர்வும் அகலும். சுறுசுறுப்பாக நடக்கவும் முடியும். 

வில்வ காய்களை ஓடு நீக்கிவிட்டு கெட்டியாக அரைத்து நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊற வைத்து தினமும் தடவினால் குதிகால் வலி போய்விடும். 

கீழாநெல்லி இலையைப் பறித்து சிறிது நல்லெண்ணெயை சேர்த்து அரைத்து இரவு தூங்கப் போகும் முன் சொத்தை பட்ட நகங்களில் தடவ சில நாட்களில் குணமாகும்.

அணிகலன்கள்:

பெரும்பாலும் கொலுசு, கால் தண்டை, மெட்டி போன்றவற்றை வெள்ளியில் பெண்கள் வாங்கி உபயோகிக்கிறார்கள். கொலுசுகள் கைத்தொழிலாகவும் மெஷின்கள் மூலமாகவும் தயாராகின்றன. இருந்தாலும் கையால் தயாரிக்கப்படுபவைக்கு பலம் அதிகம். மெஷின் தயாரிப்பு மூலம் மும்பையில் இருந்து பெருமளவு கொலுசுகள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மிஷின் தயாரிப்புகளின் ஆயுள் கையால் தயாரிக்கப்படுவதை விட குறைவு. பொதுவாகவே அதிக எடை உள்ள கொலுசுகளை வாங்கக்கூடாது. 

கொலுசு..
கொலுசு..

100 கிராமுக்கு மேல் கொலுசு எடை இருப்பது நல்லதன்று. கொலுசுகளை தேர்ந்தெடுக்கும்போது அதன் திருகாணி நன்றாக பதிந்து இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கால் விரல்களில் அணிவதற்கு மெட்டி என்று பெயர். பல வகையான மெட்டிகள் உண்டு. விரல்களுக்கு பொருத்தமான சிறிய வகை மெட்டீகளே பெண்களின் கால் அழகுக்கு ஏற்றதாக இருக்கும் .

வெள்ளியில் முதல் தரம் இரண்டாம் தரம் என்று இரு பிரிவு இருக்கிறது. இந்த தரங்களின் வித்தியாசத்தை பொதுமக்களால் உணர முடியாது. ஆனால் பழக்கம் உள்ள கடைகளில் முதல் தரத்தையே கேட்டு வாங்கலாம் .நல்ல வெள்ளி அதிக காலம் பிரகாசமாக இருக்கும். பழைய வெள்ளியை சில கடைகளில் வாங்கி அதனுடன் புதியவெள்ளியைச் சேர்த்து உருக்கி கலப்பார்கள் .இதுவே இரண்டாம் தரவெள்ளியாகும். சிலருக்கு வெள்ளி பொருட்கள் ஒத்துக் கொள்ளாமல் கொலுசு அணியும் இடங்களில் கருப்பாக மாறிவிடுவது உண்டு .இதற்கு நல்ல தரமான வெள்ளியை அணிந்தால் குளிர் காலத்தில் கறுக்கும் .ஆனால் வெயில் காலத்தில் கருக்காது. ஆதலால் கால் பாதங்கள் எப்பொழுதும் அழகுடன் இருக்க கொலுசுகளையும் மெட்டிகளையும் நல்ல வெள்ளியாக பார்த்து வாங்கி அணிய வேண்டியது அவசியமானது.

காலணிகள்:

நீண்ட பாதம் உள்ளவர்கள் கட் ஷூக்களை அணிய வேண்டும். ஷுவிற்குள் உங்கள் பாதம் அடங்கி இருப்பதால் சின்னதாக காட்சியளிக்கும்.

காலணிகள்...
காலணிகள்...

சிறிய பாதம் உள்ளவர்கள் மெல்லிய வார் வைத்த சிறு ஷாவை அணிவதால் அழகு பெறும். தடிமனான பாதம் உள்ளவர்கள் கட் ஷூக்களையே அணியலாம். பாதங்கள் தடிமனாக தெரியாது.

இறுக்கமான ஷூ போன்ற காலணிகளாலும் கால் நகங்கள் இறுக்கப்பட்டு வளர்ச்சி குன்றி போகும். மெல்லிய பாதம் உள்ள பெண்கள் வலைப்பின்னல் கொண்ட காலணிகளை அணிந்தால் பொருத்தமாக இருக்கும். இதனால் உங்கள் பாதங்கள் வெளியே தெரியாமல் இருக்கும். 

சிறிது வளைந்த பாதங்கள் உள்ளவர்கள் ஹை ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணியாமல் இருக்கலாம். மீறினால் பாதம் புண்படும். 

இதையும் படியுங்கள்:
உடலுக்கு நன்மை பயக்கும் 9 வித கார்போஹைட்ரேட் உணவுகள்!
பாதங்கள்...

அதிகம் வளைந்த பாதம் உள்ளவர்கள் குறைவான ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணியலாம் .குஷன் இருந்தால் உங்கள் பாதம் புண்படாதே. 

நீங்கள் உயரமாக இருந்து நான் இன்னும் கொஞ்சம் உயரம் குறைந்தவராக இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறீர்களா தரையோடு பதியம் காலணிகளை அணிந்து கொள்ளுங்கள். குதிகால் உயர்ந்த செருப்புகளை அணியாதீர்கள். 

ஹை ஹீல்ஸ் அணிவதால் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தம் ஹீலின் அளவை பொறுத்து மாறும். ஹைஹீல்சின் உயரம் 3 இன்ச் என்றால் 70% அளவும், 2 இன்ச் என்றால் 57% அளவும், 1இன்ச் என்றால் 22 சதவீத அளவும் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தம் அதிகரிக்கும். 

ஆதலால் மேற்கொண்டவற்றை கருத்தில் கொண்டு ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது தடுமாறாமல் நடை அழகாக இருக்கும் படியான அளவுள்ள ஹை ஹீல்ஸ்களை வாங்கி அணிந்தால் அழகாக நடக்கலாம். உடம்பிற்கும் தீங்கு விளைவிக்காது. 

ஆக நடை அழகாக இருக்க வேண்டும் என்றால் பாதத்தை அழகாக பராமரித்து, தக்கப்படியான ஆபரணங்களை அணிந்து, காலணிகளை சரிவர தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் அழகாக நடக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com