
நுனி முடி பிளவு (Split Ends) என்பது இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாக கருதப்படுகிறது. தலைமுடியை அழகாக ஸ்டைல் செய்தாலும், நுனியில் ஏற்படும் பிளவுகள் காரணமாக முழு முடியும் சேதமடைந்தது போல தோன்றும். அந்த வகையில், நுனி முடி பிளவு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிகள் குறித்து இந்தப் பதிவில் வாசிப்போம்.
நுனி முடி பிளவு என்றால் என்ன? (What are split ends?)
நுனி முடி பிளவு என்பது முடியின் நுனி பகுதி இரண்டு அல்லது மூன்றாக பிரிந்து சேதமடைவதாகும். அதாவது முடியின் வெளிப்புறத்தில் 'கியூட்டிக்கிள்' (Cuticle) எனப்படும் ஒரு பாதுகாப்பு அடுக்கு சேதமடையும்போது, முடியின் உள்பகுதி பாதிக்கப்பட்டு, பலவீனமாகி அதன் நுனியில் பிளவுகள் ஏற்படுகின்றன.
முடி பிளவு ஏற்படுவதற்கான காரணங்கள் (Causes of split ends)
1. முடி ஈரமாக இருக்கும்போது மிகவும் பலவீனமாக இருக்கும். அப்போது சீவினால், முடி எளிதில் உடைந்து பிளவுகள் ஏற்படும். அதே போல, தலைக்கு குளித்த பிறகு, கடினமான துண்டுகளைக் கொண்டு முடியை துவட்டுவதால், முடியின் வெளிப்புறம் சேதமடைகிறது.
2. தினமும் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதால், முடியில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை குறைந்து, முடி வறண்டு பிளவுகள் ஏற்படும்.
3. முடியை நேராக்க அல்லது சுருட்டையாக்கப் (straightener and curler) பயன்படுத்தப்படும் கருவிகள் மூலம் வரும் அதிகப்படியான வெப்பம், முடியின் அமைப்பைச் சிதைத்து, பிளவுகளை ஏற்படுத்தும்.
4. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் முடியை நேரடியாகத் தாக்கி, அதை பலவீனப்படுத்தி சேதப்படுத்தும்.
5. முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், பயோட்டின் மற்றும் வைட்டமின் சத்துக்கள் உணவில் குறைவாக இருந்தால், முடியின் வளர்ச்சி மற்றும் வலிமை பாதிக்கப்படும். இதனால், நுனி முடியில் பெருமளவில் பிளவு ஏற்படும்.
6. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாததும் முடியின் வறட்சிக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
முடி பிளவை தடுப்பது மற்றும் குணப்படுத்துவது எப்படி? (How to prevent and treat split ends?)
1. எப்போதும் அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்த வேண்டும். இது முடி நுனியில் ஏற்படும் உராய்வைக் குறைக்கும்.
2. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை முடியின் நுனிகளில் தடவி வருவதால், முடி வறண்டு போகாமல் தடுக்கலாம்.
3. முடியை மிகவும் இறுக்கமாகக் கட்டுவதால், நுனிகளில் அழுத்தத்தை அதிகரித்து, பிளவுகளை உண்டாக்கும். எனவே, இறுக்கமான ஹேர் ஸ்டைல்களைத் தவிர்ப்பது நல்லது.
4. முடியின் நுனியில் இருந்து தொடங்கி, படிப்படியாக வேர்ப்பகுதிக்குச் சென்று சிக்கை எடுக்க வேண்டும். வேரிலிருந்து நுனி வரை கடுமையாக இழுத்து சீவுவதைத் தவிர்க்க வேண்டும்.
5. ஒவ்வொரு முறை ஷாம்பு பயன்படுத்தும்போது, கண்டிப்பாக கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம்.
முடி பிளவுக்கான வீட்டு வைத்தியங்கள் (Home remedies for split ends)
அவகேடோ மாஸ்க்
அவகேடோவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள், முடிக்கு மிகச்சிறந்த ஈரப்பதத்தை அளிக்கும். இதற்கு நன்கு பழுத்த அவகேடோ - 1, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும்.
பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, இந்த பேஸ்ட்டை முடியின் நுனிகளில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
பிறகு, ஷாம்பு பயன்படுத்தி அலசி வந்தால் முடியை மேலும் சேதமடையாமல் பாதுகாக்கலாம்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்
தேங்காய் எண்ணெய் முடியின் ஆழம் வரை சென்று, முடியை வலிமையாக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுத்தமான தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி, அதை முடியின் நுனிகளிலும், தலை முழுவதும் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் ஷாம்பு கொண்டு அலசினால் நுனி முடியில் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், முடி பிளவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி, தலை முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்கலாம்.