
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான உணவுகள், நிறைய திரவ உணவுகள் என்று நம் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்துகொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிக மசாலாக்கள், காரம், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டு வயிற்றுக்கு இதம் தரும் உணவுகளை எடுத்துக் கொள்வதுபோல் இந்த சம்மருக்கு இதமாகவும், டிரெண்டிற்கு ஏற்றால் போலும் காட்டன் ஆடைகளை தேர்வு செய்து அணிவது வெயிலால் ஏற்படும் வேனல் கட்டி, வேர்க்குரு, வியர்வை நாற்றம் மற்றும் அரிப்பு போன்றவற்றை தவிர்க்க உதவும்.
ரேஷஸ், பூஞ்சை தொற்றை தவிர்க்க:
பாலிஸ்டர், நைலான், ரேயான் போன்ற செயற்கை ஆடைகள் உடலில் காற்று சுழற்சியை தடுப்பதுடன் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை எளிதில் உலர விடாமல் தடுக்கிறது. இதனால் உடலில் ரேஷஸ், பூஞ்சை தொற்றுகள், வியர்வையால் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க காட்டன், லினன், காதி போன்ற எளிதில் வியர்வையை உறிஞ்சும் காற்றோட்டமான ஆடைகளை அணிவது சிறப்பு.
கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரக்கும். சரும நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ள காலம் இது. இந்த நேரத்தில் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து சற்று தளர்வாக பருத்தி ஆடைகளை அணியலாம். ஒவ்வொரு வருடமும் சம்மரில் புது ட்ரெண்ட் வந்திறங்கும்.
க்ளாட்ஸ் (culottes):
பார்க்க த்ரீ ஃபோர்த் பேன்ட்போல் இருக்கும் இவை சம்மருக்கு ஏற்ற அனைவராலும் விரும்பப்படும் ஆடையாகும். இதற்கு காட்டன் ஷர்ட் அணிவது பொருத்தமாக இருக்கும். பார்ட்டி, பயணம் செய்யும் சமயங்களில் லாங் ஓவர் கோட் அணிந்து செல்ல வசதியாக இருக்கும். இந்த வகை ஆடைகளுக்கு அணிகலன்கள் அணிய வேண்டிய அவசியமில்லை. கட் ஷூ பொருத்தமாக இருக்கும்.
மேக்சி:
பார்க்க லாங் கவுன் போல் இருக்கும் இந்த ஆடைகள் எந்த இடத்திற்கும் பொருந்திப்போகும். சம்மரில் நம்மை கூலாக வைத்துக்கொள்ள உதவும்.
ஜெகின்ஸ்:
கோடையில் ஜீன்ஸுக்கு பதில் ஜெகின்ஸை அணியலாம். இது காட்டன் மற்றும் பனியன் துணிகளில் கிடைக்கிறது. ஜீன்ஸை விட அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளது. பார்க்க ஜீன்ஸ் போலவே தெரியும் இவை பல டிசைன்களிலும், கலர்களிலும் கிடைக்கிறது.
லாங் ஸ்கர்ட்ஸ்:
சம்மருக்கு ஏற்ற அழகிய லுக் தரும் லாங் எத்னிக் காட்டன் ஸ்கர்ட்டுகள். காட்டன் குர்திகள் அணிவதும் சம்மருக்கு சௌகரியமாக இருக்கும்.
குர்தி:
எல்லா வயதினருக்கும் பொருத்தமான ஆடை இது. லைட் கலரில் குர்தியும் அதற்கு கான்ட்ராஸ்ட் கலரில் காட்டன் பேன்டுகளும் அணிந்து போனிடெய்ல், சிம்பிளான இயர் ரிங் அணிய ரிச் லுக் கிடைக்கும்.
பிரின்டட் மெட்டீரியல்கள்:
சல்வாருக்கு டாப் டிசைன் செய்ய பிரின்டட் மெட்டீரியலை தேர்வு செய்து அணியலாம். ஃப்ளோரல், அஜ்ரக், பாந்தினி, இக்கட் என பிரிண்டர் மெட்டீரியல்களை தேர்வு செய்து அதற்கு பிளெயின் துப்பட்டாக்களுடன் மிக்ஸ் & மேட்ச் செய்து அணிய அபாரமாக இருக்கும்.
பைஜாமாஸ்:
இரவில் தூங்கும்பொழுது அணிய லைட் வெயிட் காட்டன் பைஜாமா சிறந்தது. காற்றோட்டமாக, வியர்வை உடலில் தங்காமல் செய்யும் இவற்றை அணிவது உடலுக்கு இதத்தைத்தரும்.
லவுன்ஞ்ச்வேர்:
வீட்டில் இருக்கும் சமயம் தளர்வான லவுன்ஞ்ச்வேர் ஆடைகளை அணியலாம். இவை மென்மையான துணியால் ஈரத்தை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டவை. பீச், பூங்காக்களில் வலம் வரும்பொழுது இவற்றை அணிய பொருத்தமாக இருக்கும்.
கோடை காலத்தில் காட்டன் ஆடைகளை தேர்வு செய்து அணிவதும், வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கூலிங் கிளாஸ், தலையில் தொப்பி அல்லது குடை, வாட்டர் பாட்டில் எடுத்துச் செல்வது சம்மரால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவில் குறைக்கும்.