
வீட்டிற்கு ஜாதகம் தெரிந்தவர்கள் யாராவது வந்தால் அவர்கள் முதன் முதலில் சொல்வது உள்ளங்கை விரல்களை விரித்து சேர்த்துவை என்று கூறுவார்கள். அப்படி உள்ளங்கையை விரித்து விரல்களை சேர்த்துக்கொண்டால் விரல்களுக்கு இடையே இடைவெளிகளும், சந்துகளும் இல்லாமல் இருந்தால் அவர்கள் மிகவும் சிக்கன வாதி என்றும், எப்பொழுதும் பணம் சேமிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்.
நல்ல செல்வந்தராக வருவாய் என்று ஆசீர்வதிப்பார்கள். விரல்களின் இடையே சந்துக்கள் அமையப்பெற்ற கைகளை உடையவர்களை பார்த்தால் தாராளமா எல்லாருக்கும் செலவு செய்வார். நிறைய புண்ணியம் கட்டிக்கொள்வாய் என்று ஆசீர்வதித்து பலன் சொல்லுவார்கள். அதுபோல் கை விரல்கள் சொல்லும் மற்ற பலாபலன்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்!
ஆண்களின் கைவிரல்கள் தசை பற்றுடன் செழுமையாகவும் அதிகமாகவும் நீண்டிருந்தால் அத்தகையவர்கள் சகலவிதமான சுகபோகங்களையும் ஆண்டு அனுபவிக்கத்தக்க போகங்களை பெற்றுத் திகழ்வார். கை விரல்களில் தோல் மடிப்புகள் இல்லாது செழுமையாக அமையப்பெற்ற விரல்களை உடையவர்கள் உலகத்தில் நல்ல மதிப்பும், நல்ல வாழ்க்கையும் அமையப்பெற்று மகிழ்ச்சியுடன் விளங்குவார்கள்.
விரல்கள் தட்டையாகவும் முனைகள் சதுரமாகவும் அமையப்பெற்றவர்கள் பொறியியல் துறையில் சிறந்த நிபுணர்களாக விளங்குவார்கள். விரல்கள் குட்டையாக இருப்பவர்கள் மற்றவர்களின் குண தோஷங்களுக்கு தக்கவாறு நடந்து கொள்வார்கள் என்கிறது சாஸ்திரம்.
பொதுவாக விரல்களின் நுனி கூர்மையானதாகவும் குவிந்தும் இருப்பவர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்குவார்களாம்.
கட்டை விரல் நுனியானது சுண்டுவிரலில் நடு மையக்கணுவரையில் நீண்டிருப்பவர்கள் சிற்பம், ஜோதிடம் போன்ற நுண்கலை நிபுணர்களாக விளங்குவார்கள்.
கற்பனை சக்தி மிக்கவர்களுக்கும் சித்திரப்பூ வேலைகள் நகாசு வேலைகள் செய்பவர்களுக்கும் இத்தகைய அமைப்பு காணப்பட்டால் அவர்கள் எந்த விஷயத்தையும் மிகவும் சீக்கிரமாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது கைவிரல் ஜோதிடம்.
கட்டை விரலின் உட்புறத்து முதற்கணுவின் அருகில் நெல்லை போலவோ, கோதுமை போலவோ தோற்றம் உடையதாகவும், இரண்டு ரேகைகள் வளைந்து இருமுணைகளுடன் சேர்ந்தும் கூடி இருந்தால் அதற்கு தானிய ரேகை என்று பெயர். இத்தகைய இரேகை அமைய பெற்றவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் தன, தானிய சம்பத்துக்களும், விவசாயிகளுக்கு பயிர், பசு, எருதுகள், ஆடுகள், கோழி பண்ணைகள் போன்றவை விருத்தி அடைந்தும் நற்பயனை அளிக்கும். உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள் என்கிறது இந்த கோதுமை குறிப்பு.
சுண்டு விரலில் கீழ் குறுக்கு பகுதியில் இரண்டு ரேகைகள் அமையப்பெற்று இருப்பவர்கள்தான் செய்யப்போகும் எத்தகைய வேலைக்கும் தக்க தகுதியும், திறமையும், நற்சான்றுகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி அடைவதோடு பொருளாதார லாபத்தையும் அடைவார்களாம். எடுத்த காரியங்கள் விரைவில் முடிவு பெறுமாம். நடு விரலின் கீழ்ப் பகுதியில் அத்தகைய ரேகைகள் அமைய பெற்றவர்களுக்கு செல்வமும், தொழில்துறை முன்னேற்றமும் உண்டாகி சிறப்பு பெறுவார்களாம்.
இதே அமைப்பை மோதிர விரலின் கீழே அமையப் பெற்றவர்கள் பல கலைகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களாக திகழ்வார்கள் என்றும், ஆட்காட்டி விரலில் இத்தகைய ரேகைகள் அமையப்பெற்றவர்கள் ஞானிகளாகவும், உலகப் புகழ்பெற்ற யோகியராகவும் விளங்குவார்கள் என்றும், சுண்டு விரலின் அடியில் இத்தகைய ரேகைகள் அமையப் பெற்றவர்கள் சிறுவயதில் இருந்து வாழ்நாள் முழுமையும் சுகஜீவிகளாக இருப்பார்கள் என்றும் விரல்களின் லட்சண அமைப்பு கூறுகிறது.