
வெயில் காலத்தில் அணிய ஏற்றவை விஸ்கோஸ் ஆடைகளா? ரேயான் ஆடைகளா?
தயாரிப்பு முறை;
ரேயான் என்பது மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படும் துணி வகை ஆகும். இயற்கையும் செயற்கையும் கலந்த இந்தத் தாவர இழைகளை ரசாயனங்களைப் பயன்படுத்தி துணிகளாக மாற்றுகிறார்கள்.
விஸ்கோஸ் என்பது ஒரு சிறப்பு வழியில் தயாரிக்கப்படும் ஒருவகை ரேயானாகும். அனைத்து விஸ்கோசும் ரேயானாகும். ஆனால் அனைத்து ரேயானும் விஸ்போஸ் அல்ல.
அமைப்பு;
விஸ்கோஸ் ரேயானைவிட மென்மையாகவும் பளபளபபான பட்டுப் போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கும். ரேயான் மென்மையாக இருக்கும். ஆனால் சற்றே கரடு முரடாக பருத்திபோல இருக்கும். ஆனால் அணிந்துகொள்ள வசதியாகவும் இலகுவாகவும் இருக்கும்.
ஆயுள்;
விஸ்கோஸ் ரேயானை விட அதிகமாக நீடித்து உழைக்கக் கூடியது. அவ்வளவு எளிதில் தேய்மானம் ஆவதில்லை. இதனுடன் ஒப்பிடும்போது ரேயானுக்கு ஆயுள் கம்மி. சரியாக பராமரிக்கப்படாவிட்டால் விரைவில் தேய்ந்து போகும்.
வியர்வையை உறிஞ்சும் திறன்;
ரேயான் விஸ்கோசை விட அதிகமாக வியர்வையை உறிஞ்சுகிறது, குறிப்பாக வெப்பமான கோடை காலத்தில் அதிகமாக வியப்பவர்களுக்கு ரேயான் சிறந்த சாய்ஸ் ஆகும். இது விரைவில் அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்கிறது.
விலை;
ரேயான் விஸ்கோஸை விட விலை மலிவானது. விஸ்கோஸ் சற்று அதிக விலை கொண்டது. விஸ்கோஸ் துணிகளைத் தயாரிக்க அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இல்லை.
தோற்றம்;
விஸ்கோஸ் பளபளப்பாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் அழகான பிளவுஸ், மிடி, மேக்சி, டி சர்ட், சட்டைகள் போன்ற ஆடைகளுக்கு ஏற்றது. பருத்தி அல்லது பட்டுப் போலத் தோற்றமளிக்கும் ரேயான் சாதாரண ஆடைகளுக்கும், மிடி, மேக்சி, டி சர்ட், ஏ லைன் ஸ்கர்ட்டுகள், விரிப்புகள் திரைச்சீலைகள் போன்ற வீட்டு உபயோக பொருள்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கோடைக்காலத்தில் அணிய ஏற்றது எது?
ரேயான் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலைக்கும் சிறந்தது. இது குளிர்ச்சியாக வைத்திருக்கும். வியர்வையை நன்றாக உறிஞ்சும். இதனால் குழந்தைகளுக்குக்கூட ரேயான் ஆடைகளை அணிவிக்கலாம். மிகுந்த தோல் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு வேண்டுமானால் இவற்றைத் தவிர்த்துவிட்டு பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம்.
விஸ்கோர்ஸ் ஆடைகள் கோடைக்கு அணிய ஏற்றவைதான். ஆனால் மிதமான கோடை காலத்திற்கு மட்டுமே ஏற்றது. அணியும் போது சூடாக உணரவைக்கும்.
லினன், பருத்தியை விட ஏன் ரேயான் பெஸ்ட்?
பருத்தி வியர்வையை நன்றாக உறிஞ்சும். வெயில் காலத்தில் பருத்தித் துணிகளை அணிந்திருக்கும்போது வியர்வையை உறிஞ்சினாலும் வெளியேறாமல் அதிலேயே தங்கிவிடுவதால் ஆடைகள் கனமாகிவிடும். உடலும் கசகசப்பாக இருக்கும்.
லினன் ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சும். விரைவில் காய்ந்தும் விடும். அணிந்திருக்கும்போது லேசாக உணரவைக்கும். ஆனால் இதில் எளிதில் சுருக்கங்கள் ஏற்படும். அதனால் அணிந்திருக்கும்போது கசங்கிப்போன தோற்றத்துடன் இருக்கும். சில லினன் துணிகள் கடினமாக அல்லது கரடு முரடாக இருக்கும்.
ரேயான் அதிகமாக சுவாசிக்கக் கூடியது. இந்த துணியை அணிந்து கொள்ளும்போது காற்று உள்ளே சென்று வர ஏதுவாக இருக்கிறது. அதனால் வெப்பமான காலத்தில் கூட குளிர்ச்சியாக உணரவைக்கும்.
பருத்திச் செடிகளை வளர்ப்பதற்கு அதிக அளவு தண்ணீர் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்றன. முதலில் ரேயான் உற்பத்தி செயல்முறை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தது. ஆனால் புதிய உற்பத்தி முறைகளின்படி அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கின்றன.