
சூரிய ஒளியிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாக்க பயன்படுத்த வேண்டிய ஆரோக்கியமான பொருட்களில் சன்ஸ்கிரீனும் ஒன்று. சரும பராமரிப்பில் சன்ஸ்கிரீனின் பங்கு மிக முக்கியமானது. இது வெயிலில் எரிதல், சரும புற்றுநோய் மற்றும் சுருக்கங்கள் உட்பட சருமத்தின் முன்கூட்டியே வயதாவதைத் தடுக்க உதவுகிறது. சரும புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சன்ஸ்கிரீன் ஒரு முக்கிய பங்கு வைக்கிறது. ஆனால் நாம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில் சில பொதுவான தவறுகளை செய்கிறோம். போதுமான அளவு பூசாமல் இருப்பது, சன்ஸ்கிரீனை மற்ற மருந்துகளுடன் கலப்பது, போதுமான அளவு SPF இல்லாத சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது போன்ற பல தவறுகளை செய்கிறோம்.
1) சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பதில் தவறு:
சந்தையில் பல்வேறு வகையான சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. நம் சருமவகை மற்றும் வெயில் காலத்திற்கு ஏற்றவாறு தரமான மற்றும் போதிய SPF கொண்ட சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது முக்கியம்.
2) போதிய அளவு பயன்படுத்தாமல் இருப்பது:
சூரிய ஒளியில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்க போதுமான அளவு சன் ஸ்கிரீனை தடவினால் மட்டுமே சூரிய கதிர்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். இவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
3) சரியான நேரத்தில் பயன்படுத்தாமல் இருப்பது:
சூரிய ஒளியில் வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் தோல் அதனை உறிஞ்சி பாதுகாப்பளிக்க முடியும்.
4) பிற மருந்துகளுடன் கலப்பது:
சன்ஸ்கிரீனை வேறு எந்த அழகு சாதனப் பொருட் களுடனும் கலக்கக்கூடாது.
5) சரியாக சேமித்து வைக்காமல் இருப்பது:
அதிக வெப்ப நிலையில் வைப்பது அதன் செயல் திறனை குறைக்கும்.
6) சரியான SPF இல்லாத சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது:
பரந்த ஸ்பெக்ட்ரம் (UVA மற்றும் UVB கதிர்களை தடுப்பது) பாதுகாப்பு அளிக்கும் SPF 15 அல்லது அதற்கும் அதிகமான சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.
7) சருமத்தில் அழுத்த தேய்ப்பது மற்றும் சரியான பகுதிகளை தவிர்ப்பது:
சன்ஸ்கிரீனை தோலில் தடவி தேய்க்காமல், மெதுவாக தட்டி பூச வேண்டும். அத்துடன் முகத்தில் மட்டும் பூசாமல் சூரிய ஒளி படக்கூடிய அனைத்து பகுதிகளிலும் கைகள், காதுகள், கழுத்துப் பகுதிகள் போன்ற சூரிய ஒளியில் படும் மற்ற பகுதிகளிலும் தடவ வேண்டும்.
8) காலாவதி தேதியை புறக்கணிப்பது:
பயன்படுத்துவதற்கு முன்பு காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். சன்ஸ்கிரீன் குறைந்தது மூன்று ஆண்டுகள் நீடிக்கும் என்று FDA கூறுகிறது. சரியான காலாவதி தேதி இல்லாத சன்ஸ்கிரீன் செயல்திறன் அற்றதாக இருக்கும். எனவே அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம்.
9) மீண்டும் பயன்படுத்த மறப்பது:
நீர் எதிர்ப்பு சன் ஸ்கிரீன்கள் தண்ணீரில் அல்லது வியர்வையின் பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (40-80 நிமிடங்கள்) அவற்றின் குறிப்பிட்ட SPF மதிப்பை தக்க வைத்துக்கொள்கின்றன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும், குறிப்பாக வியர்த்த பிறகு அல்லது குளித்த பிறகு மீண்டும் பயன்படுத்துவது அவசியம்.
10) தினமும் பயன்படுத்தாதது:
வெயில் இல்லாத நாட்களிலும், மேகமூட்டமான நாட்களிலும் கூட சூரிய கதிர்கள் சருமத்தை பாதிக்கும் என்பதால் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.