
கோடை பருவத்தில் ஏராளமான சரும பாதிப்புகள் ஏற்படும் என்பதால், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் முக்கியம். அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக பல வகையான சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிக வெப்பத்தினால் சருமத்தின் வெளிப்புறத்தில் வெயில் கொப்புளங்கள், கருமை நிறம், மங்குகள் போன்றவை முகம் மற்றும் கைகளில் தோன்றுகின்றன.
இது தவிர, வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக முகம் மந்தமாகத் தோன்றத் தொடங்குகிறது. இந்த காரணத்தினால் கோடை காலத்தில் சருமப் பராமரிப்பு செய்வது, சரும அழகு மோசமடைவதை தடுக்கும். இந்த கோடைக்காலத்தில் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களின் மூலம் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். வீட்டில் உள்ள சில பொருட்களை முகத்தில் பூசுவதன் மூலம் உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்கலாம்.
கற்றாழைசாறு:
காலையில் முகம் கழுவிய பின்னர் கற்றாழை சாற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம். இதில் ஏராளமான விட்டமின்கள் உள்ளன . இதில் உள்ள விட்டமின் ஈ சருமத்தை பளபளப்பாக மாற்றும். கற்றாழைசாறு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் . உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், கற்றாழை ஜெல் உங்களுக்கு லேசான மாய்ஸ்சரைசராகச் செயல்படும். மேலும் உங்கள் சருமத்தை ஒட்டும் தன்மையுடன் உணரவைக்காது. இது சருமத்தை குளிர்விப்பதைத் தவிர, மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
வெள்ளரிச்சாறு:
வெள்ளரிக்காய் இயற்கையில் குளிர்ச்சியான ஒரு பொருள் ஆகும். இதன் சாற்றை உங்கள் சருமத்தில் இயற்கையான டோனராகவும் பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். இதனால் சருமத்தின் நிறம் மேம்படும்.இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் வீக்கம், சிவத்தல் மற்றும் முகப்பருவைக் குறைக்க உதவும்.
பன்னீர்:
கோடையில் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பன்னீரை ஒரு டோனராகப் பயன்படுத்தலாம். பன்னீரை ஒரு துணியில் நனைத்து முகம் முழுக்க தடவலாம்.இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் துளைகளை இறுக்குகிறது.பன்னீர் ஒரு இயற்கை டோனர் என்றும் அழைக்கலாம். இது சருமத்தை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவும். வெப்பத்தால் ஏற்படும் தோல் எரிச்சலையும் குறைக்கும்.
காய்ச்சாத பால்:
பச்சைப் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இது சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பழைய தோல் அடுக்கை அகற்ற உதவுகிறது. புதிய தோல் அடுக்கு உருவாக்கத்திலும் பங்கேற்கிறது. பாலில் உள்ள விட்டமின்கள் சருமத்தை பொலிவுடன் வைக்க உதவுகிறது. இது சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக்க உதவுகிறது.
இது தவிர, வெளியில் செல்லும்போது 50SPF திறன்கொண்ட சன்ஸ்கிரீன் மற்றும் உங்கள் சரும வகைக்கு ஏற்ப மாய்ஸ்சரைசர் ஆகியவற்றை நீங்கள் கண்டிப்பாகப் பயன்படுத்துவது அவசியம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, ஜெல் அல்லது நீர் சார்ந்த மாய்ஸ்சரைசர் சரியானதாக இருக்கும். இது தவிர, சருமத்தில் படிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளை அகற்ற வாரத்திற்கு இரண்டுமுறை ஸ்க்ரப் செய்யவும்.