

டாட்டூ (Tattoo) என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை இன்று ஈர்த்து வரும் இந்தக் கலை, வெறும் நவீன நாகரிகம் மட்டுமல்ல. இதன் பின்னணியில் ஆழமான வரலாறும், பண்பாடும், ஆன்மிகக் காரணங்களும் பொதிந்துள்ளன.
பண்டைய காலத்தில் பச்சை குத்துதல் என்ற பெயரில் தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்களின் குல தெய்வங்களின் ஆசிகளைப் பெறவும் அறியப்பட்ட கலை இன்று டாட்டூ என்று பெயர் மாறி உலககெங்கிலும் உள்ள இன்றைய ஜென்சி தலைமுறையினர் தனிப்பட்ட விருப்பங்கள், கொள்கைகள், நினைவுகள் அல்லது தங்களுக்குப் பிடித்தமானவர்களைப் பிரதிபலிக்கும் ஒரு கலை வடிவமாக மாறியுள்ளது.
முன்பு கைகளால் ஊசியை வளைத்து வளைத்து வலிமிகுந்த முறையில் செய்யப்பட்ட கலை, இன்று நவீன மின்சாரக் கருவிகள் (Tattoo machines) மற்றும் பாதுகாப்பான வண்ண மைகள் (Inks) மூலம் மிக எளிமையாகவும், அழகாகவும் மாற்றப்பட்டுள்ளது.
உலகளாவிய சந்தையில் பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8,400 கோடி) மதிப்பை நோக்கி டாட்டூ வணிகம் செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இன்றைய கால கட்டத்தில் ஆண்-பெண் என்ற பாகுபாடி இன்றி 18 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர்.
சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்களின் தாக்கத்தால், இன்று டாட்டூ குத்துவது என்பது இளைஞர்களின் தவிர்க்க முடியாத ஒரு ஸ்டைல் அடையாளமாக மாறியிருக்கிறது.
பொதுவாக ஆண், பெண் என இருபாலருமே டாட்டூ போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டினாலும், சமீபத்திய கணக்கெடுப்பில் ஆண்களைவிட பெண்களே தங்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் நுட்பமான வடிவமைப்பில் டாட்டூ போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. இன்று டாட்டூ குத்துவது என்பது வெறும் உடல் அலங்காரமாக இல்லாமல், இளைஞர்களின் தனித்துவமான அடையாளமாகவும் ஒரு கலாச்சாரமாகவும் மாறியிருக்கிறது.
அதேசமயம், டாட்டூக்களைப் பிற்காலத்தில் அழிப்பது மிகவும் கடினமானது மற்றும் செலவு நிறைந்தது. டாட்டூக்களைப் போடுவதற்கு ஆகும் செலவு, வலி மற்றும் நேரத்தை விட, அவற்றை அழிப்பதற்கு (Tattoo Removal) பல மடங்கு செலவும், வலியும், நீண்ட கால அவகாசமும் தேவைப்படும். ஒரே ஒரு சிட்டிங்கில் (Sitting) டாட்டூவை அழிக்க முடியாது. டாட்டூவின் அளவு மற்றும் வண்ணங்களைப் பொறுத்து பல மாதங்கள் லேசர் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
எனவே, அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. நீங்கள் ஒரு டாட்டூ குத்தப்போகிறீர்கள் என்றால், அந்த வடிவமைப்பு (Design) மற்றும் அது உடலின் எந்தப் பகுதியில் அமையவேண்டும் என்பதில் தீர்க்கமாக யோசித்து முடிவெடுப்பதே சிறந்தது.
இப்படி விரும்பி டாட்டூக்களை உடலில் பல்வேறு பகுதிகளில் போட்டுகொள்பவர்கள் அதனால் ஏற்படும் அபாயங்களை (டாட்டூ பாதுகாப்பு) பற்றி அறிந்து கொள்வதில்லை.
அதாவது டாட்டூ (Tattoo) போடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், அதில் நன்மைகளையும் தாண்டி சில உடல்நல அபாயங்களும் உள்ளன. டாட்டூ குத்தும் இடம் சுத்தமாக இருக்கிறதா, புதிய ஊசிகளைப் பயன்படுத்து கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இல்லையெனில் தொற்று நோய்கள் (Infections) ஏற்படும் அபாயம் உள்ளது.
டாட்டூ குத்துவது, ஊசியால் தோலை துளைத்து மையை உள்ளே செலுத்தும் ஒரு மருத்துவ செயல்முறை என்பதால் இதில் பல உடல்நல அபாயங்கள் ஒளிந்துள்ளன. டாட்டூ குத்த பயன்படுத்தப்படும் ஊசிகள் முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாவிட்டால் பல்வேறு நோய்களும், தரமற்ற மை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இன்றைய தலைமுறையினருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
குறிப்பாக டாட்டூ போடும் போது ஏற்கனவே பயன்படுத்திய ஊசி மூலம் டாட்டூ போட்டு கொண்டால் நோய் தொற்று உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது..
டாட்டூ மைகளில் உள்ள சிவப்பு, மஞ்சள் நில மை தோலில் கடுமையான ஒவ்வாமை, தடிப்பு, ‘கிரானுலோமா’ எனப்படும் சிறு கட்டிகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த ஓவ்வாமை டாட்டூ குத்திய சில வருடங்களுக்கு பிறகு கூட திடீரென தோன்றலாம்.
டாட்டூ போடுவதற்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை முறையாக கிருமி நீக்கம் செய்யாமல் மற்றவர்களுக்கும் பயன்படுத்தும்போது பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ரத்தம் வழியாக பரவக்கூடிய எச்ஐவி (HIV) மற்றும் ஹெபடைடிஸி-சி (Hepatitis C- கல்லீரல் அழற்சி) போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஒரு சிலருக்கு டாட்டூ போடும் போது அவர்களுடைய உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. இதனால் உடலில் வீக்கம், சீழ்பிடித்தல், கடுமையான அரிப்பு போன்ற உடனடி பக்கவிளைவுகள் ஏற்படும்.
குறிப்பாக உடலில் மற்ற பாகங்களில் டாட்டூ போடுவதை விட முகத்தில் டாட்டூ போடும்போது கூடுதல் கவனம் தேவை.
மேலும் தரமற்ற மைகளில் இரும்பு துகள்கள் கலந்திருந்தால் பின்னாளில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது அந்த இடத்தில் கடுமையான எரிச்சலும், வீக்கமும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே டாட்டூ கலை என்பது வெறும் அழகு சார்ந்த விஷயமாக மட்டுமே சுருங்கிவிடாமல் ‘ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு’ சார்ந்த ஒன்றாக மாறவேண்டும். உடலின் அழகு தற்காலிகமானது, ஆனால் ஆரோக்கியம் நிரந்தரமானது என்பதை உணர்ந்து செயல்படுவதே இன்றைய தலைமுறைக்கு நல்லது.
டாட்டூ குத்திக்கொள்வது ஸ்டைலான விஷயம் என்றாலும் உங்கள் ஆரோக்கியமே முக்கியம். எனவே நல்ல அனுபவம் வாய்ந்த டாட்டூ கலைஞரை தொடர்பு கொள்ளுங்கள். மேம் அவர் புதிய ஊசியை பயன் படுத்துகிறாரா அல்லது பழைய பயன்படுத்திய ஊசியை பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்கவேண்டும்.
மேலும் அவர்கள் பயன்படுத்தும் மை தரமானதாக அதாவது உயர்தரத்தில் உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும். இதுதவிர பெரும்பாலான டாட்டூ ஸ்டூடியோகளில் போதிய அனுபவம் இல்லாத டாட்டூ கலைஞர்களே டாட்டூ வரைகிறார்கள். எனவே அவர்களது அனுபவம் குறித்தும் தெரிந்துகொள்வது நல்லது.