
சிரிப்புக்கு அழகு சேர்ப்பது பற்களே. அழகின் அறிகுறி பற்களில் தெரியும் என்றால் அது மிகையாகாது. பற்களில் ஏன் காரை ஏற்படுகிறது. அது ஏன் நிறம் மாறுகிறது. பற்களில் இவை ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன? என்பதை இப்பதிவில் காண்போம்.
சாப்பிட்ட உடன் பற்களை சுத்தம் செய்து நன்றாக வாய் கொப்பளித்து விடவேண்டும். அப்படி செய்யாமல் விட்டுவிட்டால் உணவுப் பொருட்கள் பற்களின் மீது படிந்து அவற்றின் மீது நுண்கிருமிகள் சேர்ந்து பற்கள் மங்களாகி பற்படலத்தை உண்டாக்குகின்றன.
இது நாள் பட உமிழ்நீரில் உள்ள கால்சியத்தை ஈர்த்து கெட்டிப்பட்டு காரையாக மாறுகிறது. இதை சுத்தம் செய்வது சற்று கடினம். இந்த காரைகள் ஈறுகளை பாதித்து ஈறுகளில் வீக்கத்தையும் ரத்தம் வடிதலையும் உண்டாக்குகின்றது. அதனால் எந்த பொருளை உண்டாலும் குறிப்பாக இனிப்பு பொருட்களை உண்டால் பற்களை தூய்மையாக்கி கொள்ள வேண்டியது அவசியம்.
புகைபிடித்தல், பாக்கு, பான்பராக், புகையிலை போன்றவற்றை மெல்லுவது மற்றும் வாய் கொப்பளிக்கும் மருந்தை அடிக்கடி பயன்படுத்துவது, பல்லில் அடிபட்டு ரத்த ஓட்டம் நின்று போவது போன்றவற்றாலும் பல் நிறம் மாறி காட்சி அளிக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் சில மருந்துகள் உட்கொள்வதாலும் குழந்தைக்கும் ஏழு வயதிற்குள் டெட்ராசைக்ளின் மருந்து உட்கொள்பவர்களுக்கும் இது போன்ற காரைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பாரம்பரிய வளர்ச்சிக் குறைபாடும் இதற்கு ஒரு காரணம் என்கின்றனர்.
பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுப்பதற்கு அதிக ஸ்வீட் நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இனிப்புகளில் இருந்து வெளியாகும் ஒரு வகை அமிலம் பற்களை உடனடியாக பாதிக்கும் என்பதால் சாப்பிட்ட உடனே வாய் சுத்தம் காப்பது அவசியம்.
பழங்கள் சாலட் வகை புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிடலாம். இதனால் பற்கள் ஆரோக்கியமாகும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட்டு, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் .இதனால் பற்கள் சுத்தமாவது மட்டுமல்லாமல் ஈறுகளும் வலுவடையும்.
சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாலட் பழங்கள் சாப்பிடலாம். ஸ்வீட் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு வேளை புளோரைடு டூத் பேஸ்டினால் பல் துலக்கலாம்.
பழைய பிரஷ்ஷினால் அழுத்தி தேய்க்கும்போது பற்களின் ஈறு மற்றும் எனாமல் பாதிக்கப்படும். ஆதலால் பல் துலக்கி(பிரஷ்)களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
மெதுவாக பற்களின் ஈறுகளை மசாஜ் செய்யவும் .பிறகு மேலும் கீழும் ஆக பற்களைத் தேய்க்கவும். இதனால் பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும். உணவு பொருட்களை மென்று சாப்பிடும் பகுதியை முன் பின்னாக தேய்க்கவும்.
பல் குத்துவதற்கு குச்சி மற்றும் ஊக்கு போன்றவற்றை பயன்படுத்தாமல் பிளாஸ் எனப்படும் நைலான் கயிற்றை பயன்படுத்தலாம். இதனை ஒவ்வொரு பற்களின் இடுக்கில் விட்டு தேய்க்கும் பொழுது அங்குள்ள உணவுப் பொருட்கள் வெளியேறி சுத்தமாகும். அதையும் பற்களின் ஈறு பகுதி பாதிக்காத படிக்கு பார்த்து அசுத்தங்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
மேலும் சாப்பிடும் பொழுது கடினமான உணவுப் பொருட்களை தவிர்ப்பதும், கூர்மையான எலும்பு, முள் மீன் முள் போன்ற மாமிச பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதும், செயற்கைப் பற்கள் குத்துவதால் ஏற்படும் புண்கள் ஒரு பக்கம் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது.
அதிக சூடான பொருட்களை உட்கொள்ளாமல் இருப்பது, பல் வலிக்கு அமிர்தாஞ்சன், மூக்குப்பொடி, கற்பூரம் வைப்பது, ஆஸ்பிரின் மாத்திரைகள் எடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் வாய்ப்புண் ஏற்படாமல் தவிர்க்கலாம். இதனால் பற்கள் சுத்தமாகும். பற்களில் காரை, விரிசல், இடைவெளி எதுவும் ஏற்படாது. எல்லாவற்றுக்கும் மேலாக மனஅழுத்தம், அலர்ஜி, ஆகியவற்றையும் ஏற்படாதபடி காக்க வேண்டும்.
அடிக்கடி நீர் அருந்துவதால் பற்கள் சுத்தமாகும். அதனால் வாய் சுத்தமாகும். வாய் வழியே செல்லும் எந்த பொருளும் வயிற்றில் தீங்கு விளையாமல் பாதுகாக்கும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்வது அவசியம்.