

மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே வாசனை திரவியங்கள்(Perfumes) வெறும் நுகர்வுப் பொருளாக மட்டுமன்றி, அதிகாரம், ஆன்மீகம் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. எகிப்தியர்களின் வழிபாட்டு முறைகள் முதல் இன்றைய நவீன பிரான்சின் நறுமணத் தொழிற்சாலைகள் வரை, வாசனை திரவியங்களின் வரலாறு மிகவும் வியக்கத்தக்கது.
வாசனை திரவியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன. சர்வதேச வாசனை வர்த்தகத்தில் எகிப்து முதன்மையாக விளங்கியது. அந்த நாட்டு மக்கள் வாசனை திரவியத்தைக் "கடவுளின் வியர்வை" என்று நம்பினார்கள். அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்களில் லவங்கப்பட்டை முக்கிய பொருளாகச் சேர்க்கப்பட்டது.
கிரேக்கர்களும் வாசனை திரவியங்களை விரும்பிப் பயன்படுத்தினர். சில வாசனைகள் ஆரோக்கியத்தையும், உயிர்சக்தியையும் மேம்படுத்துவதாக அவர்கள் நம்பினர். உலகம் முழுவதும் அந்த காலத்தில் வணிகர்கள், செல்வந்தர்கள் போன்ற மேல்தட்டு மக்களிடையே வாசனை திரவியம் பிரபலமாக இருந்திருக்கிறது. தற்போது வாசனை திரவியம் தயாரிக்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது பிரான்ஸ்.
ஒரு சிறந்த வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு 'ஒல்பாக்ஷன்' என்னும் திறன் இருக்க வேண்டியது அவசியம். அதாவது, நறுமணங்களை நுணுக்கமாக முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில், தொடக்கத்தில் சுமார் 250 வகையான வாசனைகளை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாக நிர்ணயிக்கிறார்கள்.
பருவகாலம்: வெயில் காலத்தில் லேசான நறுமணம் (Light scent) கொண்ட திரவியத்தையும், குளிர்காலத்தில் அடர்ந்த வாசம் (Strong scent) கொண்ட திரவியத்தையும் பயன்படுத்தலாம்.
பரிசோதனை: வாசனை திரவியம் வாங்கும் போது, முதலில் மணிக்கட்டில் பூசிப் பார்த்து ஒவ்வாமை (Allergy) ஏற்படவில்லை என்றால் மட்டுமே வாங்க வேண்டும்.
பல்ஸ் பாயிண்ட் (Pulse Point): மணிக்கட்டின் பின்புறம் அல்லது கழுத்துப் பகுதியில் திரவியத்தைப் பூசுவதற்குக் காரணம், அவை நம் உடலின் 'பல்ஸ் பாயிண்டுகள்' ஆகும். அங்கிருக்கும் இரத்த நாளங்கள் உடல் வெப்பத்தை விரைவாக வெளிப்படுத்தும்; இதனால் வாசனை திரவியத்தின் நறுமணம் மற்றும் விளைவு எளிதாகத் தெரியும்.
மூளையின் பழக்கம்: நாம் வாசனை திரவியம் பயன்படுத்த ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அந்த நறுமணத்திற்கு நம் மூளை பழகிவிடும். அதன் பிறகு, நம் உடலின் இயற்கையான வாசனையையும், திரவியத்தின் வாசனையையும் தனித்தனியே பிரித்து நுகர முடியாது.
மாறுபடும் வாசனை: ஒரே விதமான வாசனை திரவியம் இரண்டு நபர்களின் உடலில் வெவ்வேறு வாசனைகளைக் கொடுக்கும். இதற்கு ஒருவருடைய உடலின் தனித்துவமான வாசனை, வியர்வை மற்றும் வெளிப்புறத் தூசு போன்றவை காரணமாக அமைகின்றன.