
சில பெண்கள் பேசுவதைக்கேட்டால் கிளி கொஞ்சுவதைப்போல் இருக்கும். இன்னும் சிலர் பேசும்போதே அவரின் குரலால் ஈர்க்கப்பட்டு அவர் நன்றாக பாடுவார், பாட்டு வரும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி பெண்களின் குரல்ஓசை பற்றிய இலட்சண அம்சங்களின் இனிமையான குறிப்புகள் உணர்த்தும் செய்திகள் இதோ:
சிலர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சத்தம் போட்டு பேச மாட்டார்கள். மிகவும் அமைதியாகத்தான் எதையும் பேசுவார்கள். இல்லையேல் பேசாமல் இருந்து விடுவார்கள். பிறகு பேச வேண்டியதை தெளிவுபட பேசுவார்கள். அவர்களின் பொறுமையை கவனித்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். பிறகு அவர்களிடம் எப்படி இப்படி பொறுமையாக உங்களால் இருக்க முடிகிறது என்று கேட்டால் அதற்கு அவர்கள் கூறும் பதில் வித்தியாசமாகவே இருக்கும்.
அதிகமாக கத்தினால் நம் குரலின் இனிமை மங்கிவிடும். மேலும் நமக்கு டென்ஷன் உண்டாகும். பேசவரும் விஷயத்தை தெளிவாக பேசாமல் விட்டு விடுவோம். அதற்கு பதிலாக அமைதி காத்தால் எல்லோருக்கும் நல்லது என்று கூறுவார்கள். இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றது அல்லவா!
வீணை, வேங்குழல் இவற்றின் நாதத்தைப் போன்ற இனிய குரலை பெற்றுள்ள பெண்களும், அன்னம், குயில், கிளி, வானம்பாடி போன்ற பறவைகளின் குரலைப்போன்று உள்ள பெண்களும் தனது தரத்தையும் குடும்ப நிலையையும் விட உயர்ந்த நிலையில் உள்ள வரையே தமக்கு மணவாளராக அடைவார்களாம். பேச்சும், வாக்கும் கபடம் அற்றதாகவும், தயக்கம் அற்றதாகவும், கருணை மிக்கதாகவும் இருப்பதோடு எல்லோரும் விரும்புவதாகவும் அமைந்தால் அத்தகைய பெண்கள் வீட்டுக்கு வந்த வரலட்சுமி ஆக அமைவார்கள் என்கிறது இலட்சண சாஸ்த்திரம்.
மங்கையரின் குரல் குயில் கூவுவதைப் போலவும், கிளி கொஞ்சுவதைப் போலவும் அமைந்திருந்தால், அத்தகைய மங்கையர் மிகவும் பாக்கியசாலிகளாகவும், நவரத்தின நகைகளை அணியும் யோகம் உடையவர்களாக, மனதிற்கு ஏற்ற கணவனை அடையும் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது குரல் பற்றிய லட்சணக் குறிப்பு.
மங்கையரின் குரலானது இனிமையாகவும், வீணை மீட்டியது போலவும் இருப்பின், குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சகல சம்பத்துக்களும் விருத்தி ஆகும். கணவனின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இத்தகைய குரலுடைய மங்கையருக்கு நல்ல புத்திரர்களும், சௌபாக்கியங்களும் விருத்தி அடையும். இவர்கள் எப்போதுமே உற்சாகமும், சுறுசுறுப்பும் உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது குரல் பற்றிய குறிப்பு. அதனால்தான் வீட்டில் நம்மை எப்பொழுதும் கத்தாதே. மெல்ல பேசு. குரலை உயர்த்தாதே என்கிறார்கள் போலும்.
மங்கையரின் குரல் இனிய நாதம் உள்ளதாகவும், சுபஸ்வரமுடைய இசையை போன்று கேட்போரை தன் வயமாக்கக்கூடிய வசிய சக்தியை உடையதாகவும் இருந்தால், அத்தகைய மங்கையருக்குப் பிறந்த இடத்திலும், புகுந்த இடத்திலும் மதிப்பு, மரியாதை, செல்வ செழிப்பு, புத்திர பாக்கியம், கணவனின் அன்பு மாறாத நிலைமை ஆகியவை இயற்கையாக வந்து அமையும் என்கிறது பெண்களின் குரல் பற்றிய இலட்சண சாஸ்திரம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதற்கு இணங்க இனிமையாக அமைதியாக பேசுவோம். அதுவே நமக்கு நிறைய நல்ல பேற்றினை பெற்றுத்தரும்.