'ரெடிமேட் பிளவுஸ்' வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Readymade blouses for saree
Readymade blouses for sareeAI image
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

பெண்களுக்கு, 'ரெடிமேட் பிளவுஸ்' ஒரு வரப்பிரசாதமாகும். கடைகளில் வாங்கும் ரெடிமேட் பிளவுஸ் கச்சிதமாக அமையவேண்டும் என்றால் சில முக்கிய விஷயங்களைக் கவனிக்கவேண்டும்.

சரியான அளவு: ரெடிமேட் பிளவுஸ்களில் 32 முதல் 44 வரையிலான அளவுகள் கிடைக்கின்றன. உங்கள் (Bust) நெஞ்சுப்பகுதி சுற்றளவை விட 2 இன்ச் கூடுதலாக இருக்கும் ரெடிமேட் பிளவுஸைத் தேர்வு செய்வது சிறந்தது. உங்கள் அளவு 36 என்றால், 38 அளவுள்ள பிளவுஸைத் தேர்வு செய்யலாம். உடல் அமைப்பிற்கு ஏற்ப, தோள்பட்டை இறங்காமல் இருக்கிறதா என்பதையும், கைகளின் சுற்றளவு கச்சிதமாக இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

ஆல்டரேஷன் வசதி: ஒரு நல்ல ரெடிமேட் பிளவுஸின் உட்புறத்தில் குறைந்தது 1 முதல் 2 இன்ச் வரை கூடுதல் துணி விடப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் உடல் எடை கூடினாலோ அல்லது குறைந்தாலோ பிரித்து அல்லது பிடித்து அடித்துத் தைத்துக் கொள்ள முடியும். வாங்கும்போதே ஓரங்களில் 'ஓவர்லாக்' செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள், இல்லையெனில் நூல் பிரிந்து பிளவுஸ் சீக்கிரம் பாழாகிவிடும்.

துணியின் தரம்: தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு பருத்தி, சில்க் காட்டன் அல்லது மென்மையான சிந்தெடிக் துணிகள் ஏற்றவை. கோடை காலத்தில் அணிய காட்டன் லைனிங் வைக்கப்பட்ட பிளவுஸ்களை மட்டுமே வாங்குங்கள். பாலியஸ்டர் லைனிங் இருந்தால் வியர்வையினால் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பட்டுப்புடவைகளுக்குப் பொருத்தமாக வாங்கும்போது, அந்தத் துணி உண்மையான பட்டு நூலால் ஆனதா அல்லது பாலிகாட்டனா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

கழுத்து மற்றும் கைகளின் அமைப்பு: பெரும்பாலும் 'எம்பிராய்டரி' மற்றும் 'ஆரி' வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ்கள் பிரபலம். கழுத்தின் ஆழமும், கைப்பகுதியின் நீளமும் சரியாக உள்ளதா என்று பார்க்கவும்.

கொக்கிகள் / ஜிப்: பிளவுஸின் கொக்கிகள் வலுவாக இருக்கவேண்டும். பின்பக்க ஜிப் கொண்ட பிளவுஸ் வாங்கினால், அது தரமானதாக இருக்கிறதா என்பதை இரண்டு மூன்று முறை இயக்கிப் பார்க்கவும்.

நிறத் தேர்வு: புடவையின் நிறத்திற்கு அப்படியே மேட்சாவதை விட, 'கான்ட்ராஸ்ட்' நிற பிளவுஸ் இப்போதைய ஃபேஷன். ஒரு கோல்டன் கலர் அல்லது பிளாக் மெட்டாலிக் பிளவுஸ் வைத்திருந்தால், அதை நான்கைந்து விதமான புடவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

லைனிங் துணியின் தரம்: வெளிப்புறத்துணி பளபளப்பாக இருந்தாலும், உட்புறம் இருக்கும் லைனிங் துணி தரமானதாக இருக்கவேண்டும். முக்கியமாக, லைனிங் துணி 'ப்ரீ-வாஷ்ட்' செய்யப்பட்டதா என்று பார்க்கவும். இல்லையெனில், முதல்முறை துவைக்கும்போது லைனிங் மட்டும் சுருங்கி, பிளவுஸின் வடிவம் கோணலாகிவிடும்.

கப்களின் அமைப்பு: பேடட் (Padded) பிளவுஸ்கள் வாங்கும்போது, அதில் உள்ள கப்கள் சரியான அளவில் இருக்க வேண்டும். சில மலிவான பிளவுஸ்களில் கப்கள் மிகவும் தடிமனாகவோ அல்லது தவறான இடத்திலோ தைக்கப்பட்டிருக்கும். இது அணிவதற்கு அசௌகரியத்தைத் தருவதோடு, தோற்றத்தையும் பாதிக்கும். பிளவுஸைத் திருப்பிப் பார்த்து, தையல்கள் நேர்த்தியாக இருக்கிறதா என உறுதி செய்யவும்.

தோள்பட்டை: பெண்கள் பலருக்கு இருக்கும் பொதுவான புகார் 'ஷோல்டர் இறங்குவது'. ரெடிமேட் பிளவுஸ்களில் தோள்பட்டை அகலம் அதிகமாக இருக்கலாம். எனவே, தோள்பட்டைப் பகுதியில் தையல் போட இடமிருக்கிறதா அல்லது 'டிசைன்' பாதிக்கப்படுமா என்று பார்க்க வேண்டும். 'நாட்' உள்ள பிளவுஸ்களைத் தேர்ந்தெடுத்தால் தோள்பட்டை நழுவாமல் பார்த்துக் கொள்ளலாம்.

எம்பிராய்டரி மற்றும் நூல்களின் தரம்: ஆரி ஒர்க் அல்லது ஜரிகை வேலைப்பாடுள்ள பிளவுஸ்களில், அந்த ஜரிகை நூல்கள் கைகளில் அல்லது உடலில் குத்தாமல் மென்மையாக இருக்கவேண்டும். குறிப்பாக அக்குள் பகுதியில் அதிக வேலைப்பாடுகள் இருந்தால், அது தோலில் எரிச்சலை உண்டாக்கும். உட்புறம் 'பேப்பர் கேன்வாஸ்' வைத்துத் தைக்கப்பட்டிருந்தால் அது தரமானதாகக் கருதப்படுகிறது.

லாக் ஸ்டிட்ச் (Lock Stitch): ரெடிமேட் பிளவுஸ்கள் பெரும்பாலும் மெஷின் தையலில் மட்டுமே இருக்கும். நீண்ட நாள் உழைக்க, வாங்கியவுடன் முக்கியமான இடங்களில் ஒரு கைத்தையல் அல்லது கூடுதல் தையல் போடுவது நல்லது. கொக்கிகள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அவற்றை மட்டும் அளவுக்கு ஏற்ப மாற்றித் தைத்துக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com