
அழகும் இளமையும் கொஞ்ச காலம்தான் என்பது உண்மைதான். ஆனால் காலம் கடந்தும் நம்மால் ரசிக்கும் அழகோடு இருக்க முடியும். வயதுக்கு ஏற்ப உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர்ந்து அதற்கென்று கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும். நம் அழகும் ஸ்டைலும் போகாமல் இருக்கும். வயதாவதை நாம் ஒரு பிரச்னையாக நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. அதை எளிதில் எதிர்கொள்ள வேண்டும்.
சன் ஸ்கிரீன்:
புற ஊதா கதிர்கள் நம் தோலில் உள்ள முக்கிய என்சைம்களை தூண்டிவிட்டு நம் உள் தோலில் இருக்கும் கொலாஜென்னை சேதம் செய்யும். இதை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் கிரீம்களை உபயோகிக்கலாம்.
அதிக கலோரிகள் நிறைந்த உணவு:
அதிக கலோரிகள் நிறைந்த உணவுகள், இனிப்புகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவேண்டும். நம் நாவின் சுவைக்காக அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலை கட்டுக்குள் வைக்க அதிக இன்சுலின் நம் உடலில் சுரக்க வேண்டிய நிலை உண்டாகும். அதிக இன்சுலின் சுரக்கும் பொழுது முகம், கழுத்து போன்ற இடங்களில் தோல் அழுத்தமாகி கறுத்து விடுவதுடன் தோல் சுருக்கமும் உண்டாகும்.
மன அழுத்தம்:
சிலர் எப்பொழுதுமே பதற்றமாகவோ அல்லது கவலையுடனோ இருப்பார்கள். இதனால் இவர்களது உடலில் சில வகை ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். இதனை தவிர்க்க மனதை லேசாக வைத்துக் கொள்வது அவசியம். வாழ்க்கையில் தினமும் சவால்கள் வருவதும், அதனை திறம்பட எதிர்கொள்வதும் நம்மை இளமையாக வைத்துக் கொள்ளும். நம்முடைய சந்தோஷம்தான் நம் இளமையின் ரகசியம் என்பதை மறக்கவேண்டாம்.
சருமத்தை பராமரித்தல்:
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது நம் சருமத்தை இளமையாக பராமரிக்க உதவும். பலவித சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. தக்காளியில் உள்ள லைகோபீன், கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகள் என காய்கறி மற்றும் பழத்தில் பலவித சத்துக்கள் உள்ளதால் சருமத்தை பராமரிக்க அவற்றை சாலட், ஜூஸ்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
ஜூஸ்களில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து பருகவும். பப்பாளி, தக்காளி போன்ற பழக்கலவையை முகம் கழுத்து பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ முகச்சுருக்கங்கள் மறைந்து சருமம் பளபளவென பொலிவுடன் இருக்கும்.
மாய்ஸ்சரைசர்கள்:
சரும வறட்சியை போக்கும் மாய்ஸ்சரைசர்கள். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். சருமத்தின் வறட்சியை போக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மாய்ஸ்சரைசருக்கு பிறகு சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தில் மேக்கப் ஆக இருக்கவும் உதவுகிறது. அதேபோல பருவத்திற்கு ஏற்ப மாய்ஸ்சரைசரை மாற்றுவதும் அவசியம். குளிர்காலத்தில் அதிக சரும வறட்சியை போக்க மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் முழுமையான பலன்களைப் பெற பயன்படுத்தும் முறையும் சரியாக இருக்க வேண்டும். முகத்தை கழுவிய பின் துண்டால் முகத்தை லேசாக துடைத்து சற்று ஈரமாக இருக்கும்போது மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும்.
சருமத்தை அதிகம் தொய்வில்லாமல் இளமையான தோற்றத்துடன் வைத்துக்கொள்ள உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதுடன் டோனிங், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகித்து சருமத்தை இளமையுடன் அழகு மிளிரவைத்துக் கொள்ளலாம்.