
நம் பாட்டிகள், குழந்தைகளின் சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக, சில இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி (Traditional types of bath powder) குளியல் பொடி தயாரித்து, பச்சிளம் குழந்தைப் பருவம் முதல் மூன்று வயது வரை ஆண்-பெண் பேதமின்றி பயன்படுத்தி குளிப்பாட்டி வந்தனர்.
இதோ அந்த முறை:
பாசிப்பயறு – ¼ kg
பச்சைக் கடலைப்பருப்பு – ¼ kg
அப்பக்கோவை கீரை இலைகள் – 1 கைப்பிடி
ஆவாரம் பூ – 1 கைப்பிடி
திருநீற்றுப்பச்சிலை இலைகள் – 1 கைப்பிடி
மருகு இலைகள் – 1 கைப்பிடி
மரிக்கொழுந்து இலைகள் – 1 கைப்பிடி
அவரை இலைகள் – 1 கைப்பிடி
இலந்தை இலைகள் – 1 கைப்பிடி
கஸ்தூரி மஞ்சள் தூள் – 150 கிராம்
பூலாங்கிழங்கு பொடி – 150 கிராம்
தயாரிக்கும் விதம்:
மேலே கூறிய இலைகளை சுத்தம் செய்து நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக அரைத்துக்கொள்ளவும். அந்தப் பொடியை மிக்ஸியில் மையமாக அரைத்து, மஸ்லின் துணியில் சலித்து எடுக்கவும்.
இருவகை பருப்புகளையும் வெயிலில் நன்கு காயவைத்து அரைத்து, தனியாக ஒரு டப்பாவில் வைத்துக்கொண்டு தேவைப்படும்போது மூலிகைப் பொடியுடன் சேர்த்துகொள்ள வேண்டும்
அரைத்த பொடியை ஆறிய பிறகு, அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பூலாங்கிழங்கு பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பயன்கள்:
நறுமண மூலிகைகள் கொண்ட இந்த குளியல் பொடி குழந்தைகளின் சருமத்தை மிருதுவாகவும், பட்டுப்போல மின்னும் வண்ணம் செய்கிறது. மேலும், எதிர்மறை சக்திகள் தாக்காமல் காக்கும் சக்தியையும் தரும்.
ஆரஞ்சு தோல் குளியல் பொடி
இந்த பொடியைப் பயன்படுத்தினால், பத்து வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு தோல்கள் – 25 No
எலுமிச்சை தோல்கள் – 10 No.
ரோஜா இதழ்கள் – 1 கைப்பிடி
திருநீற்றுப் பச்சிலை – 1 கைப்பிடி
கருஞ்சீரகம் – 50 கிராம்
பாசிப்பயறு – 250 கிராம்
கடலைப்பருப்பு – 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் தூள் – 50 கிராம்
பூலாங்கிழங்கு பொடி – 50 கிராம்
தயாரிக்கும் விதம்:
எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காயவைத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பின் சலித்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் பூலாங்கிழங்கு பொடி சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் குளிக்கும்போது, ஒரு ஸ்பூன் அளவு எடுத்துப் பயன்படுத்தவும்.