

சருமம் பளபளப்பான இருக்க வேண்டும் என்பதற்காக நாம் உபயோகிக்கும் விலை உயர்ந்த ரசாயனப் பூச்சுகள் தற்காலிகத் தீர்வைத் தந்தாலும், நீண்ட கால அடிப்படையில் சருமத்திற்குப் பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. ஆனால் உளுந்திலுள்ள புரதம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, பளபளப்பாக வைக்க உதவுகிறது.
உளுந்து ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை:
சிறிதளவு உளுந்தம் பருப்பை எடுத்து, காய்ச்சாத பச்சைப்பாலில் ஊறவைக்க வேண்டும். காலையிலேயே ஊறவைத்தால், மாலைக்குள் பருப்பு அரைப்பதற்கு ஏதுவாக நன்றாக ஊறிவிடும். ஊறிய உளுந்தை மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
முக்கியக் குறிப்பு: எந்த ஒரு ஃபேஸ் பேக் போடுவதற்கு முன்பும் உங்கள் கையில் ஒரு சிறிய இடத்தில் தடவி 'பேட்ச் டெஸ்ட்' செய்து கொள்வது பாதுகாப்பானது. ஃபேஸ் பேக் போட்டு, இருபது நிமிடங்களில் முகத்தை நீரில் கழுவவும்.
இயற்கை ஸ்க்ரப்: உளுந்தை மையாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்தால், அது மிகச்சிறந்த ஸ்க்ரப் (Scrub) ஆகச் செயல்பட்டு இறந்த செல்களை நீக்கும். உடனடிப் பொலிவு கிடைத்தாலும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நிரந்தர மாற்றத்தைக் காண முடியும்.
உளுந்து ஃபேஸ் பேக்கின் 7 விதமான பயன்பாடுகள்:
1. முகம், கழுத்து வெண்மையாக
இந்த விழுதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவ வேண்டும். குறிப்பாக, வாய் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள கருமையான பகுதிகளில் தாராளமாகப் பூசலாம். சிறிதளவு பால் தொட்டு மென்மையாக மசாஜ் செய்வது அவசியம். இது சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும்.இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை நீரில் கழுவினால் பளபளப்பாக ஜொலிக்கும்.
2. பொலிவற்ற சருமத்திற்கு: உளுந்து விழுதுடன் 1 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் சிறிதளவு தயிர் சேர்க்கவும். அரிசி மாவு சருமத்தை இறுக்கமாக்கும், உளுந்து உடனடிப் பொலிவைத் தரும்.
3. முகப்பரு மற்றும் தழும்புகளுக்கு: உளுந்து விழுதுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் அல்லது வேப்பிலை பொடி சேர்க்கவும். இது பாக்டீரியாக்களை அழித்து, பழைய தழும்புகளை மறையச் செய்யும்.
4. குளிர்கால வறண்ட சருமத்திற்கு: உளுந்து விழுதுடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் காய்ச்சாத பால் கலந்து தடவவும். இது குளிர்கால வறட்சியைத் தடுத்து சருமத்தை மென்மையாக்கும்.
5. வயதான தோற்றத்தைத் தவிர்க்க: சருமச் சுருக்கங்கள் நீங்க, உளுந்து விழுதுடன் பாதி மசித்த வாழைப்பழம் சேர்த்துப் பயன்படுத்தவும். இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, இளமைத் தோற்றம் தரும்.
6. வெயில் பாதிப்பிற்கு: வெயிலினால் ஏற்பட்ட கருமையை நீக்க, உளுந்து விழுதுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல் கலந்து தடவவும்.
7. எண்ணெய் பசை சருமத்திற்கு: உளுந்துப் பொடி மற்றும் முல்தானி மெட்டியை சம அளவு எடுத்து ரோஸ் வாட்டரில் கலந்து பயன்படுத்தினால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு கட்டுப்படும்.
உளுந்து, சருமப் பராமரிப்பில் ஒரு அதிசயம் என்றே சொல்லலாம். அழகு நிலையம் சென்று பணம் செலவழித்து பளீச் செய்து கொள்வதை விட வீட்டிலேயே அழகும் பொலிவும் பெறலாம்.