
உளுந்து குலோப் ஜாமுன்
தேவை:
உளுந்தம் பருப்பு -1 கப் பச்சரிசி - 2 கப்
நெய் - தேவைக்கு
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
அரிசி, உளுந்தம் பருப்பை ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, பந்து போல வரும் வரை, தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். சக்கரையை நீர் விட்டு ஜீரா தயார் செய்யவும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, அரைத்த மாவை ஜாமூன்களாக உருட்டி, நெய்யில் பொறித்து எடுத்து, ஜீராவில் ஊறப்போடவும். செய்வதற்கு சுலபமான, சுவையான ஜாமுன் தயார்.
உளுந்து போண்டா
தேவை:
உளுந்தம் பருப்பு - 1 கப் பச்சரிசி - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசி, உளுந்தம் பருப்பை களைந்து ஊறப்போடவும். நன்கு ஊறியதும், நீரை வடித்துவிட்டு, உப்பு கலந்து கெட்டியாக அரைக்கவும். வடை மாவை விட இளகலாக இருக்கவேண்டும். மாவில் தேங்காய் துருவல், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு உளுந்து போண்டா தயார்.
பப்பாளிக்காயில் பலவகை உணவுகள்
பப்பாளிக் காய் அல்வா
பப்பாளி காயை துருவி வேகவைத்து, சமஅளவு சர்க்கரையில் பாகு செய்து, சிறிது பாலும் கலந்து கிளறவும். ஈரப்பசை நீங்கியதும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
பப்பாளிக் காய் சட்னி
பப்பாளிக்காய் தேவைக்கேற்ப, பொடிப்பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை வதக்கி, புளி, நிலக்கடலை, உப்பு கலந்து அரைத்து, கடுகு தாளித்தால், தொட்டுக் கொள்ளவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் சுவையான பப்பாளிகாய் சட்னி ரெடி.
பப்பாளிக் காய் கூட்டு
சீரகம், மிளகு, தேங்காய்த் துருவல் அரைத்து பப்பாளி கூட்டு செய்யலாம்.
பப்பாளிக் காய் சப்ஜி
வெங்காயம், தக்காளி, பப்பாளிக்காய் இவற்றை பொடியாக நறுக்கி, வதக்கி, உப்பு, மஞ்சள் பொடி, பருப்பு பொடி சேர்த்து, நீர் விட்டு வேக வைத்து, மல்லித்தழை தூவி விட்டால், பூரி, சப்பாத்தி, நாண் இவற்றுக்கு தொட்டுக்கொள்ள சுவையான சைட் டிஷ் தயார்.
பப்பாளிக் காய் மோர் குழம்பு
வழக்கமாக மோர் குழம்பு செய்வது போல் பப்பாளிக் காயிலும் செய்யலாம். வெந்தயம், கறிவேப்பிலை தாளித்தால் மணம் கூடும்.
பப்பாளிக் காய் சூப்
பப்பாளிக்காய், பூண்டு, ஒரு கேரட், மூன்று ஸ்பூன் துவரம் பருப்பு இவற்றை வேக வைத்து, அரைத்து, உப்பு, மிளகு பொடி சேர்த்து கொதிக்கவைத்து, வறுத்த பிரட் துண்டுகள் சேர்த்தால், சூடான சுவையான பப்பாளிக்காய் சூப் ரெடி.