
அழகுக்கலை பொருட்கள் அறிமுகமாவதற்கு முன்பே அழகு நிமித்தம் நமக்கு அறிமுகமான முதல் பொருள் முகம் பூசும் பொருளாக பவுடர்கள் இருந்துள்ளதாக அறிகிறோம். ஆரம்ப காலத்தில் கிராமங்களில் டார்ச் மாவு எனப்படும் கிழங்கு மாவு கொண்டு அதில் வாசனை பொருட்கள் சேர்த்து பவுடராக பூசிக்கொள்ளும் வழக்கம் இருந்தது எனது பாட்டி மூலம் அறிந்த ஒரு கருத்து. சந்தனம், ஜவ்வாது என இயற்கை வாசனை பவுடர்களை பூசி வந்தனர்.
பின் படிப்படியாக அறிவியல் கண்டுபிடிப்புகள் தந்த நறுமணம் மிக்க செயற்கை பவுடர்கள் நமது அன்றாட பயன்பாட்டில் முக்கியமான பொருளாகிவிட்டது. இப்போது வித விதமான வாசனைகளுடன் வித விதமான பிராண்டுகளில் முக பவுடர் கிடைக்கிறது.
அத்துடன் குழந்தைகளுக்கு என தனியாக பேபி பவுடர்களும் பல பிராண்டுகளில் கிடைக்கிறது. பேபி பவுடர் என்பது குழந்தைகளுக்கு மட்டுமே போடக்கூடியதா அல்லது நாமும் உபயோகிக்கலாமா? இதற்கான தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
பேபி பவுடருக்கும் பெரியவர்கள் பயன்படுத்தும் டால்கம் பவுடருக்கும் வித்தியாசம் உள்ளது. டால்கம் பவுடர் டால்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது முக்கியமாக மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்ட ஒரு கனிமமாக ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புகளுக்குப் பயன் படுத்தப்படுகிறது.
பேபி பவுடரும் பாரம்பரியமாக டால்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், டால்க்கின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை காரணமாக சோளமாவு மற்றும் மென்மையான வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்த மூலப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை அதன் லேபிள் மூலம் அறியலாம்.
குறிப்பாக டால்க்கிலிருந்து ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் இயற்கை கனிமம் வெளிப்படும் அபாயம் உள்ளது. இது புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கூற்றுப்படி ஆஸ்பெஸ்டாஸால் மாசுபட்ட டால்க் புற்றுநோயை ஏற்படுத்தும். குறிப்பாக, மிகவும் அரிதான வகை நுரையீரல் புற்றுநோயான மீசோதெலியோமா மற்றும் எபிதீலியல் கருப்பை புற்றுநோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை உண்டு. இது அனைத்து பவுடர் தயாரிப்புகளுக்கும் பொருந்தாது என்பதால் அச்சம் வேண்டாம்.
இப்போது நமது சருமத்தில் பேபி பவுடரைப் பயன்படுத்துவது என்னென்ன நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.
பேபி பவுடர் ஈரப்பதத்தை உறிஞ்சி உராய்வைக் குறைக்க உதவும், இது குழந்தைகளுக்கு டயபர் சொறி ஏற்படுவதைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம் பேபி பவுடர் தோல் எரிச்சலைத் தணிக்கவும் அரிப்புகளைக் குறைக்கவும் உதவும் என்று கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பேபி பவுடர்தானே என பவுடரை நுகர்வது அல்லது உள்ளிழுப்பது சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும், குறிப்பாக ஏற்கனவே ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படுத்தும்.
நமது சருமத்தில் குழந்தைப் பவுடரைப் பயன்படுத்துவது துளைகளை அடைத்து முகப்பருவை அதிகரிக்கச் செய்யும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக சரும எரிச்சல், சிவத்தல் உண்டாகலாம். குறிப்பாக பிறப்புறுப்புப் பகுதியில் டால்கம் பவுடர் பயன்பாட்டிற்கும் கருப்பை புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருவதாக எச்சரிக்கின்றனர்.
ஒவ்வாமை மற்றும் செயற்கை பவுடரினால் ஏற்படும் பாதிப்பு வேண்டாம் எனில் சோளமாவு சார்ந்த பேபி பவுடர்களைப் பயன்படுத்தலாம். இது டால்கம் பவுடருக்கு பாதுகாப்பான மாற்றாக இருக்கலாம். பவுடர் இல்லாமல் சருமத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட இயற்கை சரும பராமரிப்பு தயாரிப்புகளை தேர்வு செய்யலாம்.
பேபி பவுடரை பயன்படுத்தத் தேர்வுசெய்தால், அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும். முக்கியமாக உள்ளிழுப்பதைத் தவிர்க்கவும். குழந்தைகளுக்கு குறைவான அளவில் பவுடரை பூசுவது கருத்தில் கொள்ளவேண்டும். முகம் போன்ற மென்மையான பகுதிகளில் பேபி பவுடரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மூலப்பொருள் லேபிள்களை கவனமாகப் படித்து, சருமப் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
எந்தப் பவுடராக இருந்தாலும் அதிதீவிர மணம், அதில் கலந்துள்ள செயற்கை பொருட்கள் மற்றும் அதீத பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கவும். அழகு தேவைதான். ஆனால் அது ஆபத்து தருவதாக இருக்கவேண்டாம்.