
சித்த வைத்தியத்தில் பெண்களின் உடல் நிலையை அதன் ஆரோக்கிய நிலமைக்கும் உடலின் தன்மைக்கும் தக்கவாறு வாத, பித்த, சிலேத்துமம் உடையவர்களாக பிரித்துள்ளனர். இது போன்ற உடல்வாகை உடைய பெண்களின் அழகு குறிப்பைப் பற்றி இப்பதிவில் காண்போம்!
வாத சரீரப் பெண்கள்:
வாத சரீரமுடைய இவர்கள் லேசாக வெளுத்த மேனி நிறம் உடையவர்கள். உருண்ட வட்ட வடிவமான முகமும் , உருண்ட மருட்சியான கண்களும் அமையப் பெற்றவர்கள். இவர்களுக்கு குளிர்ச்சி, இனிப்பு ஆகியவற்றில் அதிக வெறுப்பும், புளிப்பு, உப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளில் மிகவும் விருப்பமும் இருக்கும். சாதாரண உறக்கம் உடையவர்கள். உறக்கத்தில் மரங்கள், உயர்ந்த மலைகள் போன்றவை மீது ஏறி செல்வதாக கனவுகளை காண்பார்கள் என்கிறது அழகியல் குறிப்பு.
பித்த சரீரம் உடைய பெண்கள்:
இந்த சரீர பெண்களுக்கு இயற்கையிலேயே உடலில் வெப்பம் மற்ற பெண்களைவிட அதிகமாக அமைந்திருப்பதை காணலாம். இவர்கள் தைரியமும் துணிச்சலும் உடையவர்கள். இளவயதில் இருந்தே ஆடை ஆபரணங்களை அணிந்து மகிழ்வதிலும் பல வகைகளில் அதிக நாட்டமுடையவர்கள். தாய்மையாவதில் அதிக விருப்பம் உடையவர்கள். பலவகையான வண்ணங்களும், வாசனைகளும் உடைய மலர்களை சூடிக்கொள்வதில் அதிக விருப்பம் உடையவர்கள். மகிழ்ச்சியும், குறும்பும் கலந்த மலர்ச்சியான சிரிப்பும், கலகலப்பான பேச்சும் உடைய இவர்கள் அறிவு நுட்பம் உடையவர்கள்.
எல்லோரிடமும் அன்பாகவும், அபிமானமாகவும் இருப்பார்கள். ஆயினும் திடீரென்று கோபித்துக்கொண்டு வைராக்கியமாக விளங்குவார்கள். இவர்கள் மென்மையான உடல் அமைப்பு, மேனியின் நிறம் மஞ்சள் அல்லது கருமை நிறம் உடையதாகவும் அமையப் பெற்றிருப்பவர்கள்.
இவர்களுடைய நாக்கு, உள்ளங்கால்கள், உள்ளங்கைகள் நகங்கள், கடைக்கண்கள் ஆகியவை செக்க சிவந்த நிறம் உடையனவாக காணப்படும். கூந்தலின் நிறம் சிவந்து செம்பட்டை நிறம் உடையதாகவும், இடைவெளி உடையதாகவும், விளங்கும்.
மேனி ரோமங்கள் மஞ்சள் நிற சாயல் உடையனவாக அமைந்திருக்கும். இனிமையும் குளுமையும் மிக்க உணவு பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றில் அதிக விருப்பம் மிக்கவர்கள். அடிக்கடி பசி எடுத்து புசிக்கும் இயல்பை உடையவர்கள். இவர்கள் உறக்கத்திலும் கனவிலும் காட்டுத் தீ, மின்னல், பலாச மலர்கள் போன்றவற்றை காண்பார்கள் என்கிறது, பித்த சரீர உடல்வாகை உடையவர்களின் இலட்சண குறிப்பு.
சிலேத்தும சரீரப் பெண்கள்:
சிலேத்துமம் என்றால் கபம் என்று அர்த்தம். இத்தகைய சிலேத்தும சரீரம் உடைய பெண்கள் செய்நன்றி மறவாத இயல்பினர். தர்ம செயல்களிலும், அறப்பணிகளிலும் அதிகமாக அக்கறை உடையவர்கள். பலவகையான ஆடைகளையும், ஆபரணங்களையும், அணிகலன்களையும் அணிந்துகொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.
இவர்கள் மிகவும் பொறுமையானவர்கள். நியாயமான முறையில் கோபம் கொள்பவர்கள். அநீதிகளையும் அக்கிரமங்களையும் கண்டு வெறுப்பவர்கள். இனிமையும், உண்மையும் கலந்த பேச்சும், நிலையான அன்பும், நீடித்த பாசமும் கொண்டவர்கள். கருணையான மனம் உடையவர்கள் சிலேத்தும சரீர பெண்கள்.
சம அளவுடைய உடலமைப்பும், வெண்தாமரை பூ போன்ற மேனி நிறமும், தாமரை மலரைப் போன்ற கண்களும், மென்மையான மேனித்தோலும், ரோமங்களும், நகங்களும் அமையப்பெற்ற இவர்கள் அமைதியான தூக்கமும், அளவுக்கு உட்பட்ட ஆசையும், மிதமான பேச்சும் உடையவர்கள். இவர்கள் பசிதாகம் இவற்றை தாங்கிக்கொள்ள மாட்டார்கள். காலநேரம் தவறாமல் உணவருந்துவதில் விருப்பம் உடையவர்கள். நீர்நிலைகள், மேகங்கள், பெருமழை, தாமரை மலர்கள் போன்றவற்றைக் கனவுகளில் காண்பார்களாம்.
இந்த மூன்று சரீரங்களை உடைய பெண்கள் பற்றிய முக்கியமான விஷயங்களை புரிந்துகொண்டோம். பெண்கள் அனைவரும் இந்த மூன்று சரீரத்தில் ஏதாவது ஒன்றை கொண்டவர்கள்தான். மிகினும் குறையினும் நோய் செய்யும் என்று படித்திருக்கிறோம். அதனால் அவர்களுக்கு இதில் எந்த நிலை சரீரம் இருக்கிறது என்று புரிந்துகொண்டு, உணவு உறக்கத்தில் தேவையான விழிப்புணர்வு குறிப்புகளைப்பெற்று பயனடைய வேண்டியது அவசியம்.