
சரும அழகைப் பராமரிக்க ஏராளமான அழகு சாதன பொருட்கள் எப்பொழுதும் புதிது புதிதாக அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் எப்படி அழகு பொருள் ஆகிறது என்பதில் சிலவற்றை இப்பதிவில் காண்போம்.
வெள்ளரித் துண்டுகளை முகத்தில், கண்களில் வைத்து குளிர்ச்சியாக்கிக் கொள்ளலாம். வெள்ளரிக்காயை அரைத்து கூழாக்கி அதனுடன் பாசிப்பயறு மாவு, ஓட்ஸ் பொடி கலந்து முகத்தில் பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து தண்ணீரால் துடைத்துவிட வேண்டும். அதன் பிறகு ரோஸ் வாட்டர் கொண்டு துடைத்தால் முகத்தில் கருமை ஏற்படாது. ஏற்கனவே கருமை ஏற்பட்டு இருந்தாலும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ரோஸ் வாட்டருக்கு சருமத்தை குளிர்விக்கக் கூடிய தன்மையும், நீரிழப்பை ஈடு செய்து, ஈரப்பதத்தை தக்க வைக்க கூடிய தன்மையும் உண்டு.
மேலும் சருமத்திற்கு மென்மையான புத்துணர்ச்சியையும் கொடுப்பதால் ரோஸ் வாட்டரை அழகு சாதன பொருட்களில் அதிகமாக டோனராக பயன் படுத்துவதுண்டு. வெள்ளரிக்காய்க்கு சரும நிறத்தை மேம்படுத்தும் திறன் உண்டு. அதனால்தான் வெள்ளரிக்காயை அழகுசாதனப் பொருட்களில் அதிகமாகவும், சாப்பிடுவதற்கு சாலட்டாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கற்றாழை ஜெல்லுடன் சமஅளவு தேன் கலந்து நன்றாக குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடலாம். தேனுக்கு சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை உண்டு. கற்றாழைக்கு கொலாஜன் உற்பத்தியை தூண்டும் பண்பு உண்டு. அதிக குளிரைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் குளிர்ச்சியான கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவும்போது சருமம் பளபளப்பாக பொலிவு பெறும்.
தக்காளி சாற்றுடன் சிறிதளவு கடலை மாவு, ஒரு ஸ்பூன் தயிர், இரண்டு சொட்டு எலுமிச்சைசாறு சேர்த்து ஒரு பேக்கு தயாரித்து முகம், கைகள், கழுத்து, பாதங்கள் என வெயில்படும் இடங்களில் எல்லாம் தடவி 25 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இப்படி அடிக்கடி செய்து வர சருமத்தின் கருமை திட்டுகள் மறைந்து தோலில் ஒரு பளபளப்பு கூடும்.
தயிரில் இருக்கும் லேக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தருகிறது. எலுமிச்சைச் சாறு கொலாஜன் உற்பத்திக்கு துணைபுரிகிறது. இதனால் முகச்சுருக்கம் நீங்குவதுடன் வயதான தோற்றம் மறைந்து இளமையுடன் காட்சியளிக்கலாம்.
பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை கலக்கி கழுத்து மற்றும் முகத்திற்கு பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவி விட்டால் முகம் தோற்ற பொலிவுடன் இருக்கும். இதை தினசரி செய்யும்போது நல்ல மாற்றத்தை உணரலாம். பாலுக்கு சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும் தன்மை உண்டு.
மஞ்சளுக்கு சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி, சருமத்தை சுத்திகரித்து, பிரகாசமாகவும், ஜொலிக்க வைக்கவும் முடியும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளை மங்க செய்து பள பளப்பான தெளிவான முகப்பொளிவை தருமாற்றல் மஞ்சளுக்கு உண்டு என்பதால் எப்பொழுதுமே சரும பராமரிப்புக்கு மஞ்சளை பூசி குளித்து வருவது ஆரம்ப பழக்கமாக இருந்து வருகிறது.