
இன்றைய நவீன உலகில் ஆண், பெண் இருபாலரும் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றத்தால் நமது சருமத்தில் இயற்கையாகவே சில பிரச்சினைகள் வருகின்றன. அதில் ஒன்று தான் முகத்தில் வரும் மருக்கள். அதிலும் 30 வயதைக் கடந்த நடுத்தர வயதினர்களுக்குத் தான் மருக்கள் அதிகளவில் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நடுத்தர வயதினருக்கு முகத்தில் ஏன் மருக்கள் வருகின்றன என்பதையும், அதனைப் போக்கும் வழிகளையும் இப்போது தெரிந்து கொள்வோம்.
நடுத்தர வயதை அடையும் ஆண்கள் மற்றும் பெண்களின் முகத்தில் பொதுவாகவே சுருக்கங்கள் வரத் தொடங்கும். அதோடு எண்ணெய் பசை சருமத்தில் அதிகரிக்கும். இந்நேரத்தில் தான் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) முகத்தில் மருக்களை உண்டாக்குகிறது. சருமத்தில் மேற்பகுதியில் படிந்திருக்கும் HPV வைரஸ், ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். தொடக்கத்தில் மிகச்சிறிய கருந்திட்டு போல தோன்றும் மருக்கள், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கின்றன.
முகத்தின் அழகைக் கெடுக்கும் மருக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை வளரும். பிறகு இதில் இரத்த ஓட்டம் நிற்கும் நேரத்தில் தான் பிய்த்துக் கொண்டு உதிர்ந்து வரும். பொதுவாக மருக்களில் வலி இருக்காது. இருப்பினும் வியர்வைத் துளிகள் இதன் மீது பட்டால் அரிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். முகத்தில் மருக்கள் வருவதற்கான முக்கிய காரணம் சூரிய ஒளி தான். சூரிய வெளிச்சம் அதிகம் படுகின்ற இடத்தில் தான் மருக்கள் அதிகளவில் உருவாகின்றன. அதோடு எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மருக்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
வயதானவர்களுக்கு மருக்கள் அதிகமாக இருப்பதை நம்மால் காண முடியும். பொதுவாகவே வயதாக ஆக மருக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தொடுதலின் மூலமாக கூட மருக்கள் பரவும் என்பது தான் அறிவியல் உண்மை. கைக்குலுக்கவதன் வழியாக HPV வைரஸ் மிக எளிதாக பரவி விடும். இருப்பினும் நமக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு மருக்கள் இருப்பதில்லை.
முகத்தில் மருக்கள் தோன்றுவதால் முக அழகு தான் பாழாகும். நெற்றி, கன்னம் மற்றும் கண்களின் ஓரத்தில் தோன்றும் மருக்கள், பலருக்கும் எரிச்சலாக இருக்கும். சொரசொரப்பாக இருக்கும் மருக்கள் ஒரு கட்டத்தில் உதிர்ந்து விடும்.
சினிமா பின்புலத்தில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் லேசர் அறுவை சிகிச்சையின் மூலம் மருக்களை நீக்கியுள்ளனர்.
இயற்கையான வழியிலும் மருக்களை நீக்க முடியும். தினசரி குளியல், குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தைக் கழுவுதல் போன்றவற்றின் மூலம் மருக்களை நீக்க முடியும். கோடைகாலத்தில் வெயிலில் செல்வதற்கு முன்பு, முகத்தில் மாய்ஸ்ரைசரைப் பயன்படுத்தினால் மருக்கள் வருவது தடுக்கப்படும்.
அம்மான் பச்சரிசி செடியின் தண்டுப் பகுதியை இரண்டாக உடைத்தால் வெள்ளை நிற பால் வெளிவரும். இந்தப் பாலை மருக்களின் மீது தடவினாலும் மருக்கள் உதிர்ந்து விடும் என கிராமப்புறங்களில் சொல்லப்படுகிறது. மேலும் மாட்டின் முடியை எடுத்து மருக்களைச் சுற்றி முடி போட்டாலும் அது உதிரும் என சொல்லப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.