
சாமுத்திரிகா லட்சணபடி ஆடவர்களின் அங்க அடையாளங்கள் எப்படி இருந்தால் சிறப்பான உயர்வை தரும் என்பதைப் பற்றி கண்ணதாசன் கூறுவது என்ன என்று இப்பதிவில் பார்ப்போம்.
ஆடவர்கள் அனைவருக்கும் அங்க இலக்கணம் 32 ம் பொருந்தி இருக்க வேண்டும். ஐந்து இடங்கள் நீண்டிருக்க வேண்டும். நான்கு இடங்கள் மிருதுவாக இருக்க வேண்டும். ஆறு இடங்கள் உயர்த்திருக்க வேண்டும். ஏழு இடங்கள் சிவந்து இருக்க வேண்டும். மூன்று அங்கங்கள் விசாலமாய் இருக்க வேண்டும். மூன்று அங்கங்கள் குறுகி இருக்க வேண்டும். மூன்று இடங்கள் அழுந்தி இருக்க வேண்டும். இத்தகைய இலக்கணம் உள்ள ஆடவன் உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆள்வான்.
1. மிருதுவாக இருக்க வேண்டிய நான்கு இடங்கள்: ரோமம், விரல், நகம், சருமம் ஆகியவை.
2. நீண்டிருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கன்னக்கதுப்பு, முழங்கால், மூக்கு.
3. உயர்ந்திருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை ஆகியவை.
4. சிவந்திருக்க வேண்டிய ஏழு இடங்கள்: உள்ளங்கை, உள்ளங்கால், கடைக்கண், உள்வாயின் மேல்பகுதி, உதடு, உள்நாக்கு, வாய் ஆகியவை.
5. விசாலமாக இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, இடுப்பு, நெற்றி.
6. குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ் பகுதி, ஆண்குறி.
7. தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: தொப்புள், மூட்டு, மொழி ஆகியவை இவற்றைக் கொண்டவன் நிறைவு பெற்று வாழ்வான்.
தாமரைப் போன்ற கண்கள் இருந்தால் செல்வம் கொழிக்கும். கண்களுக்குள்ளே தேன் போன்ற நிறத்தில் 'மரு' இருந்தால் அவனிடம் இலக்குமி குடி கொண்டிருப்பார். கண்ணிலே வெண்மை கலந்திருந்தால் கலை, இலக்கியத்தில் வல்லவனாக இருப்பான். கண்கள் செங்கழுநீர்ப் பூப் போன்றிருந்தால் கலியுகத்தில் அவனே ராமாவதாரம்.
குரங்கின் காது போலவும், யானையின் கண்களைப் போலவும் அங்கங்கள் இருந்தால், அவனிடம் செல்வம் கொழிக்கும். அவனது மார்பிலே சந்திரனுடைய பிறையைப் போல் இருந்தால், அவன் பெண்களுக்கு மன்மதன். அது நான்கு பிறையாக இருந்தால் எடுத்ததிலெல்லாம் வெற்றி பெறுவான்.
உதடு தாமரை இதழ் போல் இருந்தால், நவநிதியம் கோடி உண்டு. கை செந்தாமரைப் போன்றிருந்தால் அதைப் போல இருமடங்கு செல்வம் உண்டு. கையில் சங்கு, சக்கரம் இருந்தால் பூமிக்கு மன்னன்.
ஒருவனின் குரல் மேகத்தின் இடி முழக்கம் போலவும், யானையின் பிளிறல் போலவும், சிங்கத்தின் கர்ஜனை போலவும், கின்னரி வீணையின் இசை போலவும் இருந்தால் செல்வம் கொழிக்கும். சேனாதிபதி ஆவான்.
விழியில் மச்சம் உண்டானால் மன்னவன் ஆவான். அதே மச்சம் வலக்கண்ணில் இருந்தால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போல் வாழ்வான்.
வயிற்றிலே ஒருவனுக்கு ஒரு கோடு விழுந்தால் மக்கள் செல்வம், ராஜ யோகம். இரண்டு கோடு விழுந்தால் மாதர் போகம், மங்காத செல்வம். மூன்று கோடுகள் விழுந்தால் கல்வி, கலை, இலக்கிய வல்லவன். நான்கு கோடு விழுந்தால் பணக்காரன். ஐந்து கோடு விழுந்தால் அதிகாரப் பதவி.
மணிக்கட்டில் உண்டான ரேகை நடுவிரலோடு கலந்தால் செல்வம், ராஜ யோகம், ஏராளமான நிலத்துக்குச் சொந்தம், கல்வி ஞானம் அதிகம். மணிக்கட்டு ரேகை மோதிர விரலில் கலந்தால் சங்க நிதியும், பதும நிதியும் அவனிடமே தங்கி இருக்கும். கடல் சூழ் உலகுக்கு மன்னன் ஆவான்.
மணிக்கட்டில் தோன்றிய ஒரு ரேகை உள்ளங்கையில் மூன்று பிரிவாக பிரிந்து நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் மூன்றுக்கும் செல்லுமானால் கல்வியும், செல்வமும் கைகூடும். அது இரண்டாக பிரிந்தாலும் செல்வமும், கலைகளும் உண்டு.
புத்திரேகை நடு விரலில் போய்ச் சேர்ந்தால், அவன் ஞானியாவான். அந்த ரேகை பெருவிரல் மேலே ஏறினால் ஞானத்தோடு செல்வமும் சேரும். சங்கு, சக்கரம், தாமரைப்பூ வேல், மழு, மீன் இவை கையிலும், காலிலும் இருந்தால் அகில பாரதத்துக்கும் தலைவன் ஆவான்.
உள்ளங்கால், உள்ளங்கை, நகம், இதழ், வாய், நாக்கு, கடைக்கண், நடுவிழி இவை சிவந்திருந்தால் செங்கண் படைத்த திருமாலைப் போல் உலகையே கட்டி ஆள்வார்கள். நெற்றி, ரோமம், கீழ் உதடு கண்டம், மார்பின் கீழ்ப் பகுதி, நாபி, மணிக்கட்டு இவை தெளிவாகப் பெருத்திருந்தால் செல்வமேற் செல்வம் குவியும்.
ஆதாரம் : ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம் என்ற நூல்.