
நம்முடைய குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, அக்கம் பக்கத்திலும் சரி, யாராவது தவறு செய்து விட்டால் நாம் அவர்களை மன்னிப்பதற்கு சில சமயம் நூறு முறை யோசிக்கிறோம். ‘இப்போது மன்னித்து விட்டால் திரும்பவும் அதே தவறு செய்து விடுவார்களோ அல்லது நான் மன்னித்து விட்டதால் என்னைப் பற்றி மட்டமாக எடுத்துக் கொள்வார்களோ அல்லது நான் எதற்கு என் நிலையிலிருந்து இறங்கி மன்னிக்க வேண்டும்’ என்றெல்லாம் யோசித்து யோசித்து மன்னிக்கவும் முடியாமல் நடந்ததையும் மறக்க முடியாமல் பகைமையையும் ஆத்திரத்தையும் நாம் மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதில் யாருக்கென்ன லாபம்? முதலில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ஒருவரை மன்னிப்பதில் என்னென்ன அடங்கி இருக்கிறது? ‘மன்னித்தல்’ என்ற வார்த்தைக்கு ‘விட்டுவிடுதல்’ என்று பொருள். எனவே, மன்னிப்பது எப்போதுமே மறந்துவிடுவதாக அர்த்தமில்லை. அவர் செய்த தவறை குறைவாக எடைபோடுவதாகவும் அர்த்தமில்லை. மாறாக, மன்னிப்பது என்றால் ஒரு பிரச்னையை பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிடுவதாக அர்த்தம். அப்படி விட்டுவிடுவதுதான் உங்களுக்கும் நல்லது, அடுத்தவர்களுக்கும் நல்லது.
மன்னிக்காததால் ஏற்படும் விளைவுகள்: ஒருவரை மன்னிக்காமல் மனக்கசப்பை வளர்த்துக்கொண்டே இருந்தால், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பல்வேறு கோளாறுகள் ஏற்படும். உதாரணத்திற்கு மனச்சோர்வு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் பெருமளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதனால் உங்களின் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்படும். குறிப்பாக, கணவன் மனைவிக்குள் அதிக பிரச்னை ஏற்படும்.
மன்னிப்பதால் ஏற்படும் நன்மைகள்: மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால், நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள், அடுத்தவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.ஒருவரை ஒருவர் சந்தேகிக்கவும் மாட்டீர்கள். ஒருவருக்கொருவர் செய்த தவறுகளையும் கணக்கில் வைக்க மாட்டீர்கள். அதன் விளைவாக மனதில் மனக்கசப்பு மறையும்.
எந்தவித உறவாக இருந்தாலும் மன்னிக்கும்போது உறவு மேலும் விரிவடையாவிட்டாலும் மேலும் மேலும் விரிசல் ஏற்படாமல் இருக்கும். விட்டுக் கொடுப்பதால் குறைந்து விட மாட்டோம், அழிந்தும் விட மாட்டோம். மாறாக, மனதில் மகிழ்ச்சிதான் பெருகும். கணவன், மனைவி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் செய்த தவறை கண்டிப்பாக மறந்து மன்னிப்பது மிகவும் சிறந்தது.
நீங்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டீர்களேயானால், அதாவது அடுத்தவர்களுடைய நிறை, குறைகளை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், மன்னிப்பது சற்று எளிதாக இருக்கும். ‘குறைகளையே பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்றால், நிறைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். ஆகவே, மன்னிப்போம், மறப்போம், மகிழ்ச்சியாக வாழ்வோம். அடுத்தவர்களையும் வாழ வைப்போம்.