கணவன், மனைவி உறவை மேலும் நெருக்கமாக்கும் 8 எளிய வழிகள்!
உண்மையான அன்பு நிரூபிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அன்பான தம்பதியருக்குள் பரிமாறிக்கொள்ளும் சின்னச் சின்ன விஷயங்கள் அவர்களது பாசத்தையும் பிரியத்தையும் அதிகரிக்கும். தம்பதியருக்குள் அன்பை அதிகரிக்கச் செய்யும் எட்டு ரகசியங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கணவன், மனைவி இருவரும் எத்தனை பிஸியாக இருந்தாலும் காலையில் வேலைக்குக் கிளம்பும்போது அன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும் என்று பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும். அதைப்போல மாலையில் வீடு வந்ததும் அன்றைய நாள் எப்படி இருந்தது என்பதை விசாரிப்பதோடு, முக்கியமான விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். அது இருவரது மனச்சுமையையும் குறைத்து அன்பை அதிகரிக்கச் செய்யும்.
2. ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கிடாமல் கவனிக்க வேண்டும். அவரை முழுமையாக பேசவிட்டு பின்பு தன்னுடைய கருத்துக்களைச் சொல்லலாம். இது அவர்களது பிணைப்பை இன்னும் நெருக்கமாக்கும்.
3. அடிக்கடி இருவரும் தேங்க்யூ சொல்லிக்கொள்ள வேண்டும். நன்றி சொல்லுதல் அவசியம் இல்லாதது போல தோன்றினாலும் மனதில் இருந்து சொல்லும் நன்றி தம்பதியருக்குள் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தும். தனக்காக தன்னுடைய துணை பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்கிறார் என்கிற புரிதலுக்கான அடையாளமாக ‘தேங்க்யூ’ என்ற ஒற்றை வார்த்தை அமையும்.
4. சின்னச் சின்ன செயல்களின் மூலம் அன்பை இருவரும் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். கைகளை கோர்த்துக்கொள்வது, லேசாக அணைத்துக் கொள்வது போன்றவை இருவருக்குமே மனதிற்கு ரிலாக்ஸாக அமையும். மேலும், அது அன்பின் வெளிப்பாட்டையும் உணர்த்துகிறது. பரஸ்பரப் பிரியத்தையும் அதிகரிக்கும்.
5. அலுவலகத்தில் இருப்பதைப் போலவே வீட்டிலும் கணவனும் மனைவியும் ஒரு குழுவாக வேலை செய்ய வேண்டும். வீட்டு வேலைகளை இருவரும் சேர்ந்து செய்வதும், பகிர்ந்து கொள்வதும் இனிமையாக இருப்பதுடன் மனைவியின் சுமையையும் குறைக்க உதவும். உற்சாகமாக வேலை செய்யும்போது வேலை விரைவாக முடிவதுடன் மனமும் மகிழ்ச்சியில் நிறையும்.
6. இருவரும் அடிக்கடி சர்ப்ரைஸ் கிப்ட்டுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள வேண்டும். கணவரின் அலுவலக லஞ்ச் பேக்கில் அவருக்குப் பிடித்த சாக்லேட் அல்லது ஸ்நாக்ஸ் வகைகளை மனைவி வைக்கலாம். அதை அவர் திறந்து பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து போவார். அதேபோல, மனைவிக்குப் பிடித்த ஆடைகளை அல்லது அலங்காரப் பொருட்களை, அணிகலன்களை கணவர் வாங்கிக் கொடுத்து அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து மனைவி தனது கைகளால் அவற்றை பெறும்படி செய்து அவரை வியப்பில் மூழ்கச் செய்யலாம். கண்கள் அகல அவர் வியந்து போவதைப் பார்த்து ரசிக்கலாம்.
7. கையில் செல்போன் அல்லது டிவி பார்ப்பது போன்ற பிற சாதனங்களின் இடையூறு இல்லாமல் இருவரும் நேரம் செலவழிக்க வேண்டும். இருவரும் சேர்ந்து வாக்கிங் செல்லலாம். ஒரு புத்தகத்தை இருவரும் சேர்ந்து வாசிக்கலாம் அல்லது ஏதாவது இசைக் கருவியை கணவர் மீட்ட, மனைவி பாடலாம். இது அவர்களின் நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும்.
8. நகைச்சுவையாக பேசிக்கொள்வது மனதை லேசாக்குவதோடு மட்டுமல்லாமல், தம்பதியரின் அன்பையும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் செல்லமாக சீண்டிக் கொள்வது, ஜோக்குகளை பரிமாறிக் கொள்வது போன்ற செய்கைகள் மன அழுத்தத்தைக் குறைத்து இருவருக்கும் உணர்ச்சி ரீதியான பிணைப்பையும் ஏற்படுத்தும்.