
ஒருவரின் விசாலமான நெற்றியைப் பார்த்தால் அவர் நெற்றியில் நெல்லை காயவைத்து விடலாம் போலிருக்கிறது. அவ்வளவு பெரிய நெற்றி என்று கூறுவார்கள். ஏறு நெற்றி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்று கூறுவார்கள். இதுபோல் இன்னும் பலப்பல நெற்றிக்கூறும் சங்கதிகள் உள்ளன. அவற்றைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது தானே இதோ:
எப்போதும் வியர்வை துளித்துக் கொண்டிருக்கும் விசாலமான நெற்றியை அமைந்தவர்கள் அருங்கலைகளை மிகவும் ரசிப்பவர்களாக விளங்குவார்கள். இவர்கள் எத்தகைய நிலையிலும் சமநிலை இழக்க மாட்டார்கள். நகைச்சுவை உடைய இவர்கள் எத்தகைய கஷ்டங்களையும் சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்களாம். நெற்றி வியர்வை நிலத்தில் விழுமாறு பாடுபட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட நெற்றியை உடையவர்கள் பேறு பெற்றவர்கள் என்கிறது நெற்றி ஜோதிடம்.
விசாலமான நெற்றியை உடையவர்கள் அறிவாற்றலும் கலை ஞானமும் உடையவர்களாக இருப்பார்களாம். கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்கள் பலரின் நெற்றியும் விசாலமாகத்தான் இருக்கும்.
நெற்றியானது முத்துச்சிப்பியை போன்ற காந்தியுடன் விசாலமாக அமைந்திருந்தால் அவர்கள் வேதாந்த தத்துவ கருத்துக்களை போதிப்பவர்களாகவும், சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்களாகவும், தவம், யோகம், தியானம் முதலியவற்றில் சகல சித்துக்களையும் பெற்று திகழ்பவர்களாகவும், பகவான் அனுக்கிரகமும், மந்திர, தந்திர, சாஸ்திர நிபுணத்துவம் உடையவர்களாகவும் விளக்குவார்கள் என்கிறது நெற்றி சாஸ்திரம்.
தானிய லாபமும், செல்வ ஆதாயங்களும் நிறைந்து இருப்போர் சிலரின் நெற்றியை பார்த்தால் நரம்புகள் நடு மையத்திலிருந்து மூன்று கோணமாக திரிசூலத்தை போன்று அமைந்திருப்பதைக் காணலாம். இப்படிப்பட்டவர்களை பாக்கியவான்கள் என்கிறது இலட்சண குறிப்பு.
அஷ்டமி பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியை உடையவர்கள் வாழ்க்கையில் மிகவும் பாக்கியசாலிகளாக இருப்பார்கள். நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். ஆட்சியாளர்களாலும், மகான்களாலும் போற்றப் பெறும் பெருமையை அடைபவர்கள் இவர்களே. எப்போதும் நல்லதே நினைப்பார்கள் .நல்லவற்றையே சொல்வார்கள். நல்லவற்றையே செய்து நல்ல பெயரும் புகழும் பெற்று திகழ்வார்கள்.
சிலரின் நெற்றியைப் பார்த்தால் புடைத்து மேடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லட்சுமி கடாட்சம் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். எப்போதும் அவர்கள் கையில் பணம் புழங்குமாம். பணியாற்றும் இடத்திலும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்கிறது ஜோதிடம். மேலும் இவர்களில் பலர் வணிகத்துறை அல்லது வங்கிகளில் பணியாற்றுபவர்களாக இருப்பார்கள் என்கிறது லட்சண குறிப்பு . மேலும் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்கும் என்றும் இவர்களுக்கு தெய்வ பக்தி மிக்கவளான பெண்தான் மனைவியாக வந்து அமைவாளாம்.
அப்படி என்றால் பெண்களுக்கு ஆண்மகனும் அப்படிப்பட்டவராக அமைவார் போலும்.
நெற்றி உயர்ந்தும், விசாலமாகவும், நீண்டும், மூன்றாம் பிறைச் சந்திரனைப் போலவும் இருந்தால் இவர்கள் ஆட்சித் துறையில் உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள் என்றும், முத்துச் சிப்பியைப் போல அகன்றிருந்தால் அத்தகையவர்கள் சமயத்துறையில் குரு ஸ்தானம் வகிப்பார்கள் என்றும்,நெற்றியின் பரப்பளவு குறைந்தவர்கள் அரசியலில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள் என்றும், நெற்றியைப் பற்றிய இலட்சண குறிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக நெற்றி உயர்ந்திருந்து முக்கோணம் போன்ற ரேகைகள் காணப்படுபவருக்கு பெரும் செல்வ வசதிகள் உண்டாகுமாம்.
இதில் எப்படிப்பட்ட நெற்றியை பெற்றிருந்தாலும் ஏதாவது ஒரு சிறப்பு நமக்கு இருக்கும் என்பதால் மனதில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். மேலும் நெற்றியின் வியர்வை நிலத்தில் விழுமாறு உழைப்பதை உறுதி மொழியாக ஏற்றுக்கொள்வோம். அதுவே நம்மை வாழ்வாங்கு வாழவைக்கும்!