
வெள்ளை புள்ளிகள் என்பது ஒருவகை முகப்பரு என்றே சொல்லலாம். இது வெள்ளை மையத்துடன் கூடிய மிகச்சிறிய மென்மையான பம்ப் போல காணப்படும். இது இறந்த சருமம், எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்கள் ஒரே துளைக்குள் சிக்கிக்கொள்வதால் ஏற்படுகின்றன. வெள்ளைப் புள்ளிகளை கிள்ளுவது, அழுத்துவது, அமுக்குவது போன்றவை வீக்கத்தை ஏற்படுத்தும். வடுக்களை உண்டாக்கும்.
மேலும் வெடிப்புகளுக்கும் வழி வகுக்கும். வெள்ளை புள்ளிகளை எளிதில் அகற்ற சில எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். அத்துடன் தினமும் முகத்தை நன்கு கழுவி தூசி, அழுக்குகள் சருமத்துளைகளை அடைக்காமல் இருக்கவும், ஈரப்பதமாக வைத்திருக்கவும் செய்யலாம்.
நீராவி பிடித்தல்:
நீராவி பிடிப்பது துளைகளை திறக்க உதவும். இதனால் வெள்ளைப் புள்ளிகளை அகற்றுவது எளிதாகும். ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்து முகத்தில் நீராவி படும் வகையில் ஆவி பிடிக்க நல்ல பலன் தரும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகரை சிறிது நீர் கலந்து டோனராக பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள வெள்ளைப் புள்ளிகளை குறைக்க உதவுவதுடன் சருமத்தின் pHஐ சமநிலைப்படுத்தவும் உதவும்.
தேன், லவங்கப்பட்டை மாஸ்க்:
தேன் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தேனுடன் சிறிது லவங்கப்பட்டை பொடியைக் கலந்து முகத்தில் மாஸ்க் போடவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ சிறந்த பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லை வெள்ளைப் புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி வரவும். இது சருமத்துளைகளை சுத்தம் செய்து முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்த உதவும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை ஒரு பஞ்சில் நனைத்து வெள்ளை புள்ளிகள் மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ இது வெள்ளைப் புள்ளிகளை பெருமளவு குறைக்க உதவும்.
ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்:
ஓட்ஸுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி ஸ்கிரப் செய்ய சருமத் துளைகளை அடைக்க கூடிய இறந்த சரும செல்கள் நீங்குவதுடன் வெள்ளைப் புள்ளிகளும் பெருமளவு குறைந்து விடும்.
தேயிலை மர எண்ணெய் மற்றும் கற்றாழை:
நீர்த்த தேயிலை மர எண்ணெயுடன் கற்றாழை ஜெல் சேர்த்து மேற்பூச்சு சிகிச்சையை நேரடியாக வெள்ளைப் புள்ளிகளின் மேல் பூசுவதன் மூலம் அவை எளிதில் குணமடைய உதவும்.
மேல்பூச்சுகள்:
அடாபலீன் ஜெல் போன்ற ரெட்டினாய்டுகளைக் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்த வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுவதை தடுக்க உதவுவதுடன், அவற்றை முற்றிலும் நீக்கவும் உதவும். இயற்கையான வழிமுறையில் களிமண்ணை நீரில் குழைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவலாம்.
நீரேற்றமாக வைத்திருப்பது:
சருமத்தில் உள்ள துளைகள் அடைபடாமல் நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம்.
மென்மையாக சுத்தம் செய்வது:
எண்ணெய் பசை, அழுக்கு போன்றவற்றை நீக்க தினமும் சிறிதளவு லேசான கிளென்சரைக் கொண்டு முகத்தை கழுவலாம். இறந்த சரும செல்களை வெளியேற்ற மென்மையான மசாஜ் உதவும்.
சருமத்தை சுத்தமாக பராமரிப்பதும், எண்ணெய் சருமத்தை கட்டுப்படுத்துவதும், இறந்த சரும செல்களை நீக்க வாரம் ஒருமுறை கற்றாழை ஜெல் அல்லது தேன் கொண்டு ஸ்க்ரப் செய்வதும் வெள்ளை புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். வீட்டு வைத்தியம் பலன் அளிக்க வில்லையெனில் ஒரு சிறந்த சரும மருத்துவரை அணுகி சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.