
காஞ்சிபுரம், தர்மாவரம், ஆரணி போன்ற பாரம்பரிய பட்டுப் புடைவைகளில் அகலக்கரை பார்டர், ஜரிகை வேலைப்பாடுகளுடன் காண்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் உடுத்துவதற்கு கனமாக இருக்கும். நீண்ட நேரம் அவற்றை அணிந்திருக்க முடியாது. விலையும் அதிகம். அனைவருக்கும் கட்டுப்படியாகாது. அதனால் தானோ என்னவோ, தற்போது லைட் வெயிட் பட்டுப்புடைவைகள் பெண்களால் அதிகம் விரும்பி அணியப்படுகின்றன.
தற்கால இளம் பெண்கள் முதல் நடுத்தர வயதினர் வரை அதிகம் விரும்புவது மென்மையான சாஃப்ட்சில்க், லைட் வெயிட் மற்றும் கார்ப்பரேட் பட்டுப் புடைவைகளைத் தான்.
உடுத்துவது எளிது;
பெண்கள் லைட் வெயிட் பட்டுப் புடைவைகளை விரும்புவதற்கு முக்கியமான காரணம் அவற்றை உடுத்த மிகவும் எளிதாக இருப்பது தான். விரைவில் ப்ளீட்ஸ் எடுத்து அவற்றை அணிந்து கொள்ளலாம். வெகுநேரம் அணிந்தாலும் கலையாமல் சுருங்காமல் இருக்கும். மேலும் அவை கனமாக இல்லாமல் பிற காட்டன் புடவைகளைப்போல லேசாக இருப்பதால் அணிந்து கொள்வதற்கு சௌகரியமாக இருக்கிறது. நாள் நாள் முழுவதும் கட்டிக் கொண்டாலும் அலுப்புத் தெரியாது.
சௌகரியம்;
வெயில் காலங்களில் விருந்து, விசேஷங்களில், திருமணங்கள், வரவேற்பு போன்றவற்றில் கலந்து கொள்ளும்போது இலகு ரக பட்டுப் புடைவைகளை அணிந்து கொண்டால் அதிகமாக வியர்ப்பதில்லை என்பது பெண்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.
கண்கவர் டிசைன்கள்;
கார்ப்பரேட் மற்றும் சாஃப்ட் சில்க் போன்றவற்றில் பல்வேறு வகையான டிசைன்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் வருகின்றன, இவை கண்களைக் கவரும் விதத்தில் இருப்பதால் பெண்கள் அதிகளவில் இவற்றை வாங்குகிறார்கள்.
சுலபப் பராமரிப்பு;
இவற்றைப் பராமரிப்பது மிகவும் சுலபம். பாரம்பரிய பட்டுப் புடைவைகளை டிரை வாஷ் செய்வது ஒன்றுதான் வழி. ஆனால் தற்போதைய மென்மையான சாஃப்ட் சில்க் மற்றும் இலகுரக பட்டுப் புடைவைகளை ஷாம்பு வாஷ் செய்யும் வசதி இருப்பதால் பெண்களுக்கு பிடித்தமாக இருக்கிறது.
கம்பீரமான கார்ப்பரேட் பட்டு;
கார்ப்பரேட் பட்டுப்புடைவைகள் பணியிடத்தில், அலுவலகத்தில் அணிந்து கொள்வதற்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அகலக்கரை பார்டர் இல்லாமல், ஜரிகை அவ்வளவாக இல்லாமல் நேர்த்தியான ஒரு தோற்றத்தை வழங்குகிறது. அலுவலக மீட்டிங் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள பொருத்தமாக இருக்கும். மேலும் எளிமையானது முதல் நேர்த்தியான வடிவமைப்புகள் வரை கொண்ட ரவிக்கை பாணிகளுடன் இவற்றை அணிந்துகொண்டு தனித்தன்மையுடன் திகழலாம்.
நேர்த்தி;
இந்தப் புடைவைகள் இலகுரகமாக, எடை குறைவாக இருந்தாலும் பட்டின் நேர்த்தியை தருகின்றன, இவற்றை அணிந்து கொள்ளும்போது பெண்கள் அழகாகத் தோற்றமளிப்பதுடன் தன்னம்பிக்கையுடனும் உணருகிறார்கள்.
பட்ஜெட் பிரண்ட்லி;
ஒரிஜினல் பட்டுப்புடைவைகள் விலை அதிகம். எல்லாராலும் அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. ஆனால் இலகுரக பட்டுகள் பட்ஜெட் பிரண்ட்லியாக இருக்கின்றன. 2000, ரூபாய்க்கு நல்ல புடைவைகள் கிடைக்கின்றன. இவை எல்லா வயதிலும் உள்ள பெண்களும் அணியலாம் என்பது இதன் சிறப்பு.
நுட்பமான வேலைப்பாடு;
நாள் முழுக்க இவற்றை அணிந்து கொண்டாலும் அவை ஒரு சுமையாக தெரிவதில்லை. மேலும் இவற்றுக்கு மேட்ச் ஆக மெலிசான நகைகளை அணிந்து கொண்டு திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்லலாம் என்பது இதில் உள்ள பெரிய வசதி. மென்மையான பட்டுப் புடைவைகளில் நுட்பமான எம்ப்ராய்டரி, அழகிய வண்ணங்கள் மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருவதற்காக சிக்கலான நெய்தல் வடிவங்களை கொண்டுள்ளன.
சருமப் பாதுகாப்பு;
இலகுரகப் பட்டின் மென்மைத்தன்மை பெண்களின் சருமத்திற்கு இதமாக இருக்கிறது. எரிச்சல் குறைகிறது. அதிகமாக வியர்காமல் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் இதமாகவும், கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். மேலும் இதிலுள்ள ஜரிகைகள் கொலுசு மெட்டி போன்றவற்றில் இழுக்காது. எனவேதான் பெண்கள் இவற்றை விரும்பி வாங்கி அணிகிறார்கள்.