
காஞ்சிபுரம் பட்டுப் புடைவைகள் பாரம்பரியம் மிக்கவை. காஞ்சிக் காட்டன் புடைவைகளும் பிரபலமானவை. இரண்டுமே அணிந்து கொண்டால் பார்க்க அழகான தோற்றத்தை தருகின்றன. இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
நெசவு: காஞ்சிபுரம் பட்டுப் புடைவைகள் தூய மல்பரி பட்டிலிருந்து நெய்யப்படுகின்றன. பெரும்பாலும் தூய தங்கம் மற்றும் வெள்ளி சரிகை நூல்களால் நெய்யப்படுகின்றன. இந்த நெசவு நுட்பம் சிக்கலானது. சேலையின் உடல் பகுதியும் பார்டர் பகுதியும் பெரும்பாலும் வண்ண நூல்களால் தனித்தனியாக நெய்யப்பட்டு பின்னர் கோர்வை எனப்படும் வலுவான நெசவில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதனால் பட்டுப்புடவைகள் கனமாக இருக்கும். இந்த இரண்டு பாகங்களும் சந்திக்கும் ஜிக்ஜாக் கோடு உண்மையான காஞ்சிபுரம் பட்டு புடைவைகளின் ஒரு தனித்த அடையாளமாகும். இந்த நுட்பமான செயல்முறை செயலையின் எடை மற்றும் நீடித்தன்மைக்கு உதவுகிறது
காஞ்சிபுரம் பருத்தி சேலைகள் தூய பருத்தி நூல்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை கைத்தறியாக நெய்யப்படுபவை. இவையும் பாரம்பரிய வடிவமைகளை கொண்டிருந்தாலும் பட்டுப் புடவையை விட அணிந்து கொள்ள இலகுவாக இருக்கிறது.
அமைப்பு: காஞ்சிபுரம் பட்டுப் புடைவைகள் மென்மையானவை. ஆடம்பரமான இதனுடைய அமைப்பின் காரணமாகவும் தனித்துவமான பளபளப்பான அடர்த்தியான நெசவு மற்றும் கடினமான, கனமான ஜரிகை வேலைப்பாடு காரணமாகவும் பார்ப்பதற்கு ஆடம்பரமான உணர்வை தருகின்றன. இந்த புடைவையை மடிப்பு எடுத்து உடுத்தும் போது உடலோடு நன்றாக பொருந்தி போகிறது. ஆனால் அதிக நேரம் அணியும் போது கசகசப்பும் வியர்வையும் ஏற்படும்.
உள்புறத்தில் சரிகை வேலைப்பாடுகள் காரணமாக நீண்ட நேரம் அணிந்து இருந்தால் உடலுக்கு எரிச்சலை தரும். கால் பகுதியில் கொலுசு மற்றும் கையில் அணிந்திருக்கும் வளையல் போன்றவையால் சேலையில் உள்ள சரிகை நூல் இழுபடக்கூடும்.
மாறாக காஞ்சிபுரம் பருத்திச் சேலைகள் மென்மையானவை. கனம் இன்றி இலகுவானவை. அணிந்து கொள்ள வசதியானவை. மிருதுவானவை. நீண்ட நேரம் அணிந்து கொண்டாலும் சௌகரியமாக இருக்கும்.
உடுத்தும் சந்தர்ப்பங்கள்: காஞ்சிபுரம் பட்டு சேலைகளை திருமணங்கள். திருவிழாக்கள், முக்கிய விசேஷங்கள் போன்ற சிறப்பான நிகழ்வுகளில் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த வானிலையில் அணிய ஏற்றது. ஆனால் பருத்திப் புடவைகள் அப்படியல்ல. அன்றாட உபயோகத்திற்கு வீட்டிலும் அணிந்துகொள்ளலாம். அதேபோல அலுவலகம் செல்லும் பெண்களுக்கு இஸ்திரி செய்து அணிந்து கொண்டால் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் மதிப்பான தோற்றத்தை தரும். சாதாரண நிகழ்வுகள் மற்றும் கடுமையான கோடை காலத்தில் அணிந்துகொள்ள ஏற்றவை. இவற்றில் காற்று ஊடுருவும் தன்மையால் துவைத்து காயப்போட்டால் எளிதில் உலர்ந்துவிடும்.
விலை மற்றும் பராமரிப்பு:
காஞ்சிபுரம் பட்டுப்புடைவைகள் தூய மல்பெரிப்பட்டு மற்றும் உண்மையான ஜரிகைகளை பயன்படுத்தி செய்யப்படுவதால் இவற்றின் விலை அதிகம். அவை நீடித்து உழைக்கக்கூடியவை. ஆனால் இவற்றை தண்ணீரில் போட்டு அலசி துவைக்க முடியாது. ட்ரை கிளீனிங் மட்டுமே செய்யமுடியும். தலைமுறை தலைமுறையாக இந்த புடவைகளை பத்திரமாக பாதுகாத்து வைத்து உபயோகிக்கலாம் என்பது இதில் உள்ள வசதி. காஞ்சி பட்டுப்புடைவைகளை திருமண நிகழ்வுகளுக்கு அணிந்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் அவற்றை காற்றாட உலர வைக்க வேண்டும். அப்படியே மடித்து பீரோவில் வைக்கக்கூடாது. ஈரப்பதம் மற்றும் பூச்சிகளில் இருந்து பாதுகாக்க குளிர்ந்த உலர்ந்த இடத்தில் மஸ்லின் துணியால் சுற்றி வைக்க வேண்டும்.
பருத்திப் புடவைகளை பராமரிப்பது மிகவும் எளிதானது. மென்மையான சோப்பு அல்லது ஷாம்பு கொண்டு கையாலே துவைக்கலாம். காஞ்சிபுரம் பருத்திப் புடவைகளை ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் மென்மையாக மாறி நீடித்து உழைக்கக் கூடியது. இவை பட்டுப்புடவைகளை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. நீடித்து உழைக்கக் கூடியவை. இதை ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் பருத்தி சேலைகள் மென்மையாக மாறும்.
டிசைன்கள்/ வடிவமைப்புகள்; காஞ்சிபுரம் பட்டுப் புடைவைகளில் பிரமாண்டபமான வடிவமைப்புகள் இருக்கும். அன்னப் பறவை, மயில், யாழி, கோவில் கோபுரம் போன்ற வடிவங்களை பொதுவாக காஞ்சிபுரம் பட்டு சேலைகளில் பார்க்கலாம்.பருத்திச் சேலைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகள் அதிகமாக இருக்கும்.