கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியை 3டி மூலம் படம் பிடித்து காட்டி சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
ஒரு மனிதனின் மூளையைப் பற்றி தெரிந்துக்கொள்ளவே ஆராய்ச்சியாளர்கள் பல படிகளைத் தாண்டி வந்தார்கள். நமது உடலின் சிக்கலான அமைப்பு மூளை. அதன் செயல்பாட்டை அறிந்துக்கொள்வதே மிகவும் கடினம். மூளையின் செயல்பாட்டை பற்றிய ஆராய்ச்சியில் அடுத்த படியாக ஒரு புதிய முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
1300 முதல் 1400 கிராம் எடை கொண்ட மனித மூளை, சுமார் பத்தாயிரம் கோடி நியூரான்களால் கட்டமைக்கப்பட்டது. மனிதன் எப்படி சிந்திக்கிறான்? அவன் புத்தி கூர்மை எப்படி உள்ளது அவனுடைய ஞாபக சக்திக்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதற்கான முயற்சியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் உலகம் ஈடுபட்டு வருகிறது.
இன்றும் ஒரு மனிதனின் மூளை குறித்தான ஆராய்ச்சியை உலக நாடுகளில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர் என்றாலும், கருவில் இருக்கும் குழந்தையின் மூளையைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்து சாதனை படைத்திருக்கின்றனர் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்.
கருவின் மூளை வளர்ச்சியை 5,132 பகுதிகளாக பகுப்பாய்வு செய்து 3டி டிஜிட்டல் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த மிகப்பெரிய சாதனை ஆராய்ச்சியாளர்களுக்கும் மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கும் பல நன்மைகளை தரும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு மூளை தொடர்பான பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பதற்கும் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் மூளை தொடர்பான பிறவி குறைப்பாடுகளை எளிதாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியுமாம். மேலும் இதன்மூலம் ஒவ்வொரு வளர்ச்சி படிகளையும் நம்மால் கவனிக்க முடியும் என்பதால் குழந்தைகளின் நலனையும் கவனிக்க முடியும்.
குறிப்பாக அல்சைமர், பார்க்கின்சன் போன்ற மூளை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகளை கண்டறிய இந்த ஆராய்ச்சி உதவும்.
இதற்கு முன்னர் முதல்முறையாக அமெரிக்கா இந்த முயற்சியை செய்திருந்தாலும், அவர்கள் வடிவமைத்துள்ள மூளையின் முப்பரிமாண படங்கள் அனைத்தும் முழுமை அடையாமல் பாதி பகுதிகள் மட்டுமே படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.