
பறவைகள் அழகு மட்டுமல்ல, ஆச்சரிய குணங்களைக் கொண்டவையும் கூட. உலகம் முழுக்க பல வகையான பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் வித்தியாசமான சில வாழ்வியல் குணங்களைக் கொண்ட சில பறவை இனங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. உலகிலேயே அரிதான பறவை: மடகாஸ்கர் போச்சார்ட் (Madagascar Pochard) என்று அழைக்கப்படும் வாத்து. இவை காடுகளில் மிகவும் அரிதான எண்ணிக்கையில் மட்டுமே காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் இந்த இனத்தை காப்பாற்ற மடகாஸ்கர் அரசாங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
2. கண்களை அசைக்க முடியாத பறவை: ஆந்தைகளின் கண்கள் பெரியதாகவும், தலையில் இறுக்கமாகவும் பொருந்தி இருப்பதால் அவற்றால் கண்களை அசைக்க முடியாது. ஆந்தைகளின் கண் இமைகள் குழாய் வடிவத்தில் இருப்பதால் தலையை 270 டிகிரி சுழற்ற முடிகிறது. இதன் மூலம் ஆந்தை 360 டிகிரி பார்வையை அடைய முடிகிறது. வேறு எந்த விலங்கையும் விட இது மிக அதிகம்.
3. தீக்கோழி: 2.7 மீட்டர் (8 அடி) உயரம் வரை வளரும் தீக்கோழிகள் இரண்டு மீட்டர் வரை இறக்கைகளை விரிக்கும். 1.5 கிலோ கிராம் வரை எடையுள்ளது இப்பறவை. இவற்றின் முட்டைகள் பறவை இனங்களில் மிகப்பெரியவை. இதனுடைய ஓடுகள் அலங்கார மற்றும் கொள்கலன் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை பயமுறுத்தப்பட்டால் தனது வலுவான கால்களால் உதைத்து கடும் காயத்தை உண்டாக்கக் கூடியவை.
4. ஆர்க்கியோப்டெரிக்ஸ்: 147 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழைமையான பறவையாகும் இது. இவற்றுக்கு நீண்ட எலும்பு போன்ற வால் மட்டுமல்லாது, பற்களும் இருந்துள்ளன. மூக்கிலும் கால்களிலும் செதில்கள், இறக்கையில் இரண்டு நகங்கள் இருந்தன. இவற்றின் எலும்புக்கூடு தீரோபாட் என்னும் டைனோசரின் எலும்புக்கூட்டை ஒத்திருந்தது.
5. க்ளவுட் நாரை (shoebill): இந்தப் பறவை அதன் பிரம்மாண்டமான கால்களாலும், பெரிய கால்களின் அடிப்பகுதியில் பெரிய ஷூ போல இருக்கும் அலகாலும் வித்தியாசமாகக் காணப்படும். இவை மெதுவான அசைவுகளுக்கும், நீண்ட நேரம் அசையாமல் இருக்கும் போக்கிற்கும் பெயர் பெற்றவை. குஞ்சுகளின் உணவுக்காக குரல் கொடுக்கும்போது மனித விக்கல்களைப் போல விசித்திரமான ஒலியுடன் இருக்கும்.
6. காகபோ (Kakapo): உலகின் ஒரே பறக்க முடியாத கிளியான காகபோ நியூசிலாந்திற்கு சொந்தமான ஆந்தை கிளியாகும். இவை தரையில் கூடு கட்டி வாழும் இரவு நேர பறவை. உலகில் நீண்ட நாள் வாழும் பறவைகளில் ஒன்றான இவை, ஒரு தனித்துவமான வாசனையைக் கொண்டுள்ளது.
7. நீருக்கடியில் பறக்கக்கூடிய பறவைகள்: பஃபின்கள் (Puffins) நீருக்கடியில் பறக்கக்கூடிய பறவைகளாகும். இவை தங்கள் சிறகுகளைப் பயன்படுத்தி நீருக்கடியில் நீந்திச் செல்லும்பொழுது அவற்றை துடுப்புகள் போல் பயன்படுத்துகின்றன. மீன்களைத் தேடி நீருக்கடியில் மூழ்கிச் சென்று அவற்றை உணவாக உட்கொள்கின்றன.
8. நத்தாச்ஸ் (Nuthatch): நத்தாச்ஸ் பறவைகள் மரங்களின் தண்டுப் பகுதிகளில் தலைகீழாக ஏறி பூச்சிகளையும் விதைகளையும் தேடி சாப்பிடுகின்றன. இவற்றின் கால்கள் மற்றும் பாதங்கள் மரங்களில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
9. ஃபிரிகேட் மற்றும் அல்பட்ராஸ்: ஃபிரிகேட் மற்றும் அல்பட்ராஸ் பறவைகள் பறக்கும்பொழுதே தூங்கும் திறன் கொண்டவை. இவை கடலில் பல மாதங்கள் பறக்கும்பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டும் உறங்க வைத்து, மற்றொரு பகுதியை விழிப்புடன் வைத்துக் கொண்டு தூங்கும்போது பறக்கும் என்று சொல்லப்படுகிறது. மணிக்கு 25 மைல் வேகத்தில் பறக்கும்பொழுது தூங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.
10. பிடோஹுய் (Hooded Pitohui): நியூ கினியாவின் அடர்ந்த மழைக் காடுகளில் காணப்படும் கொடிய விஷப்பறவை இது. பிடோஹுய் இனத்தில் ஆறு இனங்கள் உள்ளன. அவற்றில் இது மிகவும் கொடிய விஷத்தன்மை மிக்கது. இப்பறவையின் தோல் மற்றும் இறகுகளில் பாட்ராசோடாக்சின்கள் உள்ளன. இவற்றை தொடுதலின் பொழுது உணர்வின்மையை ஏற்படுத்தும்.