
கிரே ஃபிஷ் (Cray fish) எனப்படும் நண்டு மீன்கள் சமயங்களில் நண்டுகளைப் போலவே தோற்றமளித்தாலும் இரண்டும் ஒன்றல்ல. ஆனால், இரண்டும் ஓட்டு மீன்களின் வகையைச் சேர்ந்தவை. கடினமான ஓடுகள் மற்றும் நகங்கள் போன்ற சில ஒற்றுமைகளை நண்டும், நண்டு மீனும் கொண்டிருக்கின்றன. நண்டுகள் பொதுவாக பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் நன்னீரில் வாழ்கின்றன. ஆனால், நண்டு மீன்கள் பெரும்பாலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற நன்னீர் சூழல்களில் மட்டுமே காணப்படுகின்றன.
நண்டு மீன்களுக்கு எக்ஸோஸ்கெலட்டன் எனப்படும் கடினமான வெளிப்புற ஓடுகள் உள்ளன. இவை அவற்றின் மென்மையான உடலைப் பாதுகாக்கின்றன. மேலும், அவற்றின் வடிவத்தை சரியாக வைத்திருக்க உதவுகின்றன. நண்டு மீனின் உடல் இரண்டு முக்கியப் பகுதிகளால் ஆனது. தலையும் மார்பும் ஒன்றாகவும் வயிறு வேறாகவும் இருக்கும்.
நண்டு மீனுக்கு 10 கால்கள் உள்ளன. முதல் ஜோடி கால்கள் தன்னுடைய இரையைக் கவ்விப் பிடிக்கும் வகையில் வலிமையாக இருக்கும். மீதமுள்ள கால்கள் வழியாக நண்டு மீன் நடக்கும். இதன் வாலுக்கு அடியில் இருக்கும் சிறிய கால்கள் நீந்தவும் முட்டைகளை சுமக்கவும் உதவுகின்றன. தண்ணீரில் உள்ள ரசாயனங்களை உணர நண்டுகளின் தலையில் நீண்ட ஆண்டெனாக்கள் உள்ளன.
இவற்றை வேட்டையாட வரும் விலங்குகளால் இந்த நன்னீர் நண்டு மீன்களின் கால்கள் அல்லது நகங்கள் வெட்டப்பட்டு விடும். ஆனால், பல்லிகளுக்கு வால்கள் வெட்டுப்பட்டால் அல்லது துண்டிக்கப்பட்டால் அவை மீண்டும் வளர்வதைப் போல நண்டு மீன்களுக்கும் கால்களும், நகங்களும் வளர்கின்றன. இவற்றின் கண்கள் கூட்டு நிறத்தில், பலவித வண்ணங்களில் இருந்தாலும் நல்ல பார்வையை தருகின்றன. சில நண்டு மீன்கள் சிறப்பு மரபணுக்களின் காரணமாக பிரகாசமான நீலம் போன்ற வண்ணங்களைக் கொண்டுள்ளன.
இவை பெரிதாக வளரும்போது அவற்றின் மேற்புறத்தில் உள்ள கடினமான ஓடுகள் உருகிவிடும். இதனுடைய உடலில் இருந்து கால்சியம் போன்ற இழந்த ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க சில சமயங்களில் நண்டு மீன்கள் தமது பழைய ஓட்டை சாப்பிடுகின்றன.
நண்டு மீன்கள் தாவரங்களையும் விலங்குகளையும் உண்கின்றன. அவற்றின் உணவில் பாசிகள், தாவரங்கள், பூச்சிகள், சிறிய மீன்கள், நத்தைகள் மற்றும் இறந்த விலங்குகள் கூட இருக்கும். இவை சேற்றில் அல்லது பாறைகளுக்கு அடியில் துளைகளை தோண்டுகின்றன. அவற்றின் நுழைவாயிலில் சிறிய மண் புகைப்போக்கிகளை உருவாக்குகின்றன.
நண்டு மீன்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்கும். தன்னை வேட்டையாட வரும் பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க துளைகளைப் பயன்படுத்தி அதில் ஒளிந்து கொள்கின்றன. பெண் நண்டு மீன்கள் தங்கள் வாலுக்கு அடியில் ஒட்டப்பட்ட நூற்றுக்கணக்கான முட்டைகளை சுமந்து செல்கின்றன. குஞ்சு பொரித்த பிறகு குஞ்சு நண்டு மீன்கள் தாங்களாகவே வெளியேறுவதற்கு முன்பு தாயிடம் பாதுகாப்பாக இருக்கின்றன.
இந்த உலகில் 500க்கும் மேற்பட்ட நண்டு மீன் வகைகள் உள்ளன. இவை 4 சென்டி மீட்டர் நீளம் வரை வளர்ந்து மூன்றரை கிலோ எடை உள்ளதாக இருக்கும். இறகுகள் போலத் தோற்றமளிக்கும் செவுள்களைப் பயன்படுத்தி நண்டுகள் நீருக்கடியில் சுவாசிக்கின்றன. இவை உயிர் வாழ ஆக்ஸிஜன் நிறைந்த நீர் தேவைப்படுகிறது. இவற்றின் டிஎன்ஏ சுவாரஸ்யமானது. அவற்றில் சுமார் 200 குரோமோசோம்கள். உள்ளன. இது மனிதர்களுக்கு இருப்பதைவிட மிக அதிகமாகும்.