
ஒரு காலகட்டத்தில் இசையின் மூலம், கவிதை புனைவதன் மூலம் மிருகங்களை சித்திரவதை செய்வதையும், பசுமை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவர்களையும் கண்டித்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அதில் கனடா பாடசாலை மாணவியாக இருந்த செவேன் கூலன் சுசுகி சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் எப்படி கவனம் செலுத்தி உலகம் முழுவதும் சொற்பொழிவு ஆற்றினார் என்பதை இப்பதிவில் காண்போம்.
சுசுகி 13 மாணவர்களை சேர்த்துக்கொண்டு சூழல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி, பணம் திரட்டி பல நாடுகளுக்கும் பயணம் செய்து அவர்களுடன் சேர்ந்து சூழல் பாதுகாப்பை பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர்கள் கூறும்போது, ‘உலகத்தில் உணவில்லாமல் பட்டினியில் இறக்கும் சிறார்களுக்காகவும், வாழ இடம் இல்லாமல் இறக்கும் விலங்கினங்களுக்காகவும் அவற்றின் குரலாகப் பேசுகிறோம்’ என்று ஆரம்பித்தார்கள்.
அதிலிருந்து தொடங்கி, “வாயு மண்டலத்தில் ஓசோனின் ஓட்டை விழுந்ததால் அச்சமாக உள்ளது. மாசு உள்ள காற்றாக உள்ளதால் அதை சுவாசிக்க அச்சமாக இருக்கிறது. ஜீவராசிகள் வேகமாக அழிவடைந்து வருவதால் பிறக்கப்போகும் பிள்ளைகள் இந்த ஜீவராசிகளைப் பார்ப்பார்களா? நீங்கள் சிறு பிள்ளையாக இருந்தபோது இந்த உலகம் இப்படியா இருந்தது? வனத்தை அழிக்காதீர்கள். மரங்களை வாழ விடுங்கள். எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் இருந்த மிருகங்கள் இப்போது இல்லை. நம் காலத்தில் இருக்கும் விலங்குகள் நம் பிள்ளைகள் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே. இவை அனைத்தும் நம் கண் முன்னே நடக்கின்றன. ஓசோனில் ஏற்பட்ட ஓட்டையை நம்மால் சரிபடுத்த முடியுமா?
அழிந்து கொண்டிருக்கும் சால்மன் எனும் சமன் மீன் இனத்தை ஆற்றில் காண முடியுமா? அழிந்து கொண்டு போகும் மிருக இனங்களைத் திருப்பிக் கொண்டு வர முடியுமா? வனம் இருந்த இடம் அனைத்தும் குறைந்து குறுகிக்கொண்டே வருகிறது. அந்த வனத்தை பழையபடி திருப்பிக் கொண்டு வர முடியுமா? இவை எதுவுமே முடியாது என்றால் அவற்றை சேதாரம் செய்யாமல் இருக்கவாவது செய்ய வேண்டும் இல்லையா?
யுத்தத்திற்கு பணம் செலவு செய்ய ஆயத்தமாக இருக்கும் நாடுகள், வறுமை ஒழிப்பிற்கு அப்பணத்தை செலவு செய்ய ஏன் தயக்கம் காட்டுகின்றன? போரில் மக்கள் அழிவார்கள் என்று தெரிந்தும் போரில் ஈடுபடுகிறார்களே ஏன்? நம் முன் உள்ள முக்கிய வினா இப்பூமியையும், வளிமண்டலத்தையும் பாதுகாக்க விடை அறிய வேண்டும். விடை அறிந்தால் இந்த பூமி மேலும் அழகு பெற்று, நல்ல ஆரோக்கியத்தை நமக்குத் திருப்பித் தரும் இல்லையா?
காலப்போக்கில் சுவாசிக்க சுத்தமான காற்றை கடைகளில் சிலிண்டரில் வாங்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீர் வளம் நிரம்பிய பூமியாக இருந்தும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கிப் பருகுகிறோம். பாட்டில்களில் தண்ணீர் பருகிக் கொண்டு நீர் வீழ்ச்சிகளை ரசிக்கிறோம். சிறு குழந்தைகளே, உங்களுக்கு சரியான சுற்றுப்புறச் சூழலையும், பயமற்று வாழ, போரற்ற உலகத்தையும் வழங்க முடியாமைக்கு எங்களை மன்னிங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறார்.
அதேபோல், போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஃபெலிபா டயஸ் ரோசா என்பவர் 10 வயது சிறுமியாக இருந்தபோது அந்நாட்டின் தொலைக்காட்சியின் Ecoman படம் மூலம் போர்ச்சுக்களில் பிரபலமானார். உறக்கத்தில் கனவு வருகிறது. ஆகாயம், வனம், மலை, சமுத்திரம், பிராணிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஆழ்ந்த நித்திரையில் ஆறுகள், மலைகள், காடுகள், பிராணிகள், குப்பைத் தொட்டிகள், சாக்கடைகள், வளிமண்டலம், இயற்கை வளங்கள் அனைத்தும் இவருடன் பேசுகின்றன.
சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள், பிராணிகளைப் பற்றிய அறிவை இப்படத்தின் மூலம் சிறார்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் பெற்று கற்றுக் கொள்கிறார்கள். விழிப்புணர்வையும் தூண்டியுள்ளது. இச்சிறுமிக்கும் இகோமேன் படத்திற்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன. போர்ச்சுக்கல் தலைநகரான லிபனில் விருது வழங்கும்போது ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் அதில் கலந்து கொண்டனர். இவர் இன்று கடல் பிராணியான டால்பின்களின் பாதுகாப்புக்காக அயராது உழைத்து வருகிறார். இதுபோல், சிறு வயது முதலே இயற்கையின் மீதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீதும் அக்கறை கொண்டவர்கள் என்றுமே அதை கைவிடாமல் பணியாற்றி வருவதை கண்கூடாகக் கண்டும், கேட்டும், படித்தும் வருகிறோம்.
இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளாமல் நாமும் இயற்கை சூழலுக்கு எந்த அளவு நன்மை தர முடியுமோ அவ்வளவு ஈடுபாட்டுடன் கொடுக்கலாம். கொடுக்கவும் வேண்டும். அப்பொழுதுதான் இயற்கையான காற்றை சுவாசிக்கவும், மாசற்ற தண்ணீரைப் பருகவும் முடியும்.