
பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை மரத்தின் அறிவியல் பெயர் (Borassus flabellifer) என்று அழைக்கப்படுகிறது. ‘கேட்டதைத் தரும் கற்பகத்தரு’ என்று தமிழர்களால் அழைக்கப்படும் பனைமரமானது தமிழர்களின் கலாசாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பனை ஓலையில் செய்யக்கூடிய விசிறி முதல் அம்மனுக்கு படையல் போட பொங்கல் செய்வதற்கு தேவைப்படும் கருப்பட்டி வரை என்று இதுபோன்ற பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. பனைமரம் மனிதனுக்கு பல அற்புதங்களையும், நன்மைகளையும் தருகிறது. அதுமட்டுமில்லாமல், நம் முன்னோர்களால் தெய்வமாகவும் இந்த பனைமரம் இன்றும் வழிபடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட இந்தப் பனைமரத்தின் 10 அதிசய விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பனை மரங்கள் வறண்ட நிலங்களில் வறட்சியைத் தாங்கி நீரின் தன்மையை தக்க வைத்து செழிப்பாக வளரக்கூடியவை.
2. பனைமரத்தில் பொதுவாக ஆண், பெண் என்று இரண்டு வகை மரங்கள் காணப்படுகின்றன.
3. ஆண் பனைமரம் அரக்கு நிறம் கொண்ட நீளமான பூக்களைக் கொண்டிருக்கும். பெண் பனைமரம் அதற்கு மாற்றாக (பனங்காய், பனம்பழம்) நுங்குகளை கொண்டிருக்கும்.
4. பனைமரத்தின் வேர்களானது சல்லி வேர்த் தொகுப்பைக் கொண்டவை. எனவே, வேர்களானது மண்ணுக்குள் நீண்ட தொலைவு நன்கு ஊடுருவி, நீரினையும் உணவையும் உரிஞ்சவும், சேகரிக்கவும் பயன்படுகிறது.
5. பனம்பாளை பூப்பதற்கு முன் அதிலிருந்து பெறப்படும் நீரைக் கொண்டு பதநீர், கள், கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
6. பனைமரத்தின் வாழ்நாள் 100 முதல் 150 ஆண்டுகள் வரை நீடிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் தோய்வில்லாமல் பனம்பூக்களையும், பனங்காய்களையும் தொடர்ச்சியாகக் காய்கின்றன.
7. பனைமரம் புல்லினத்தைச் சேர்ந்தவை. இதன் அறிவியல் பெயர் பொராசஸ் பிளாபெல்லிபர் ஆகும்.
8. இயற்கையாக தானாகவே வளரக்கூடியவை பனைமரங்கள். பெரும்பாலும், பனையானது பயிரிடப்படுவதில்லை.
9. பனைமரம் நுங்கு, பனங்குருத்து, பனம்பால், பனையோலை, பனைக்கருக்கு, பனங்கிழங்கு, பனம்பழம் என்று பயன் தருகிறது.
10. பனைமரமானது; ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை என்று 34 வகைகளைக் கொண்டுள்ளது.