
உலகில் உள்ள பலப்பல வகையான விலங்குகள் மற்றும் பறவை இனங்களில் ஒரு சிலவற்றைப் பற்றிய விவரங்களை மட்டுமே நாம் அறிந்திருப்போம். இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்து வரும் தனித்துவமானதொரு 'மறிமான்' வகையைச் சேர்ந்த ‘நீல்கய்’ (Nilgai) என்ற விலங்கு பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஆசியாவிலேயே மிகப்பெரிய உருவம் கொண்டது நீல்கய் மான். இந்த மானின் உருவ அமைப்பு, இதன் பழைமையான வரலாறு மற்றும் சூழலியல் போன்றவை நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளன. நன்கு வளர்ந்த ஆண் மான் 288 கிலோ எடையும், தோள் வரையில் 1.5 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
2. ஆண் நீல்கய் மான் நீல நிறம் கலந்த கிரே கலரிலும், பெண் மற்றும் குட்டி மான்கள் ஆரஞ்சு அல்லது பழுப்பு, மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. பெண் மானுக்கு கொம்புகள் கிடையாது. ஆண் மான்களுக்கு கூர்மையான, மேல் நோக்கி வளரும் கொம்புகள் உள்ளன. இவை 24 செ.மீ. உயரம் வரை வளரக் கூடியது.
3. இந்திய கலாசாரத்தில், வேத காலத்திலிருந்து நீல்கய், 'மதர் அனிமல்' என்று இந்துக்களால் புனிதமாகப் போற்றி அழைக்கப்பட்டு வந்துள்ளது.
4. இது, போஸ்லபஸ் (Boselaphus) என்ற பேரினத்தின் தனித்துவம் பெற்று பரிணாம வளர்ச்சியடைந்த ஒரே வகை இனமாக இது உள்ளது.
5. இந்த வகை மானுக்கு 'ப்ளூ புல்' என்றொரு புனைப் பெயரும் உண்டு. காளை மாட்டின் நீல நிறம் கலந்த கிரே கலரை நீல்கய் கொண்டுள்ளதால், இதற்கு இந்தப் பெயர் வந்துள்ளது. மற்றபடி வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடையான காளை மாட்டிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
6. நீல்கய் மான், அவசர காலங்களில் மிக வேகமாக ஓடக் கூடியது. அடர்ந்த காடுகளுக்குள், எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இத்திறமை இதற்கு நல்ல முறையில் உதவி புரிகிறது.
7. பொதுவாக, நீல்கய் மான் சத்தமிடாத அமைதியான குணம் கொண்ட விலங்கு. ஆனால், எதிரிகளை சந்திக்க நேரிடும் சூழலிலும், இனப்பெருக்க நேரத்தில் துணையைத் தேடும்போதும் உரத்த குரலில் கர்ஜனை செய்யும் குணம் கொண்டது.
8. மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில், இவை இயற்கைக்கு மாறாக பகலில் நடமாடும் விலங்குகளாக உள்ளன. வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் இவை குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றன.
9. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும், நீல்கய் மான் காய்ந்த வனப்பகுதி, புல்வெளி போன்ற எந்த சூழலிலும் வாழத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளக்கூடியது. அமெரிக்காவிலுள்ள டெக்ஸ்ஸாஸின் தெற்குப் பகுதியிலும் வாழக்கூடியவை நீல்கய் மான்கள்.
10. விளைச்சல் நிலங்களுக்குள் இந்த வகை மான்கள் புகுந்து பயிர்களை மேய்ந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை உண்டுபண்ணுதல் அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் பலகட்ட பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதைக் கேட்கும்போது மனதில் சிறிதளவு வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது.