
விவசாயத் துறையில் மூலிகைப் பயிர்களும் நல்ல லாபத்தைக் கொடுக்கக் கூடியவை தான். இருப்பினும் விவசாயிகள் மத்தியில் மூலிகைப் பயிர் சாகுபடி குறைவாகவே உள்ளது. இந்தப் பட்டியலில் அஸ்வகந்தாவும் ஒன்று. சந்தையில் அஸ்வகந்தாவின் தேவை அதிகமாக இருக்கையில், சாகுபடி அளவு மட்டும் இன்னும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் அஸ்வகந்தா மூலிகையை பயிரிடத் தொடங்கினால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில் செழித்து வளரக் கூடிய அஸ்வகந்தா, குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைத் தரக்கூடியது. இலையுதிரா தாவரமான அஸ்வகந்தா சொலானேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் டபிள்யூ எஸ்22 (WS22), ஜவகர் அஸந்தா 20 மற்றும் சிமாப் டபிள்யூ எஸ்10 - ரக்சிதா ஆகிய 3 இரகங்கள் மிகவும் புகழ்பெற்றவை. இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிராவில் தான் அஸ்வகந்தா அதிகளவில் பயிரிடப்படுகிறது.
மண்ணின் தன்மை:
சிவப்பு மண் அல்லது கரிசல் மண்ணில் அஸ்வகந்தா நன்றாக வளரும். குறிப்பாக நல்ல வடிகால் வசதி கொண்ட மண்ணில் இது செழித்து வளரும் தன்மை கொண்டது. மேலும் மண்ணின் அமிலக் காரத்தன்மை அளவு 7.5 முதல் 8.0 வரை இருத்தல் வேண்டும். மிதவெப்ப மண்டல பகுதிகளில் அஸ்வகந்தா நன்றாக வளரும். மற்ற மூலிகைப் பயிர் சாகுபடியைக் காட்டிலும், அஸ்வகந்தாவை சாகுபடி செய்ய குறைந்த அளவிலான பராமரிப்பே போதுமானது.
விதைப்பு முறை:
அஸ்வகந்தாவை விதைகள் அல்லது நாற்றங்கால் மூலமாக பயிரிடலாம். ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 10 முதல் 12 கிலோ விதைகள் தேவைப்படும். நாற்றங்கால் முறை சாகுபடிக்கு உயர்மட்ட பாத்திகள் அவசியம். 42 நாட்கள் ஆன அஸ்வகந்தா நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியுடன் நிலத்தில் நடவு செய்யலாம். பெரும்பாலும் மழைக்காலத்திற்கு பின்பு தான் அஸ்வகந்தா பயிரிடப்படுகிறது. ஏனெனில் அஸ்வகந்தா விளைச்சலுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதும். ஆகையால் ஓரளவு மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் கூட இதனை வளர்க்கலாம்.
நடவுக்குப் பின் 30 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை களையெடுத்தால், பயிரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அஸ்வகந்தா பயிரின் வளர்ச்சிக்கு உரங்கள் எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை. அதற்கேற்ப மகாராஷ்டிரா விவசாயிகள் அஸ்வகந்தா சாகுபடிக்கு உரங்களைப் பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.
அஸ்வகந்தா சாகுபடிக்கு மண்ணின் தரம், பூச்சி கட்டுப்பாடு, காலநிலை, சாகுபடி யுக்திகள் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற முக்கிய காரணிகளில் விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அறுவடை:
அஸ்வகந்தா மூலிகைப் பயிர் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் அறுவடைக்கு வந்து விடும். ஒரு ஹெக்டேருக்கு 300 கிலோ முதல் 500 கிலோ வரை உலர்த்தப்பட்ட அஸ்வகந்தா வேரும், 50 கிலோ முதல் 75 கிலோ வரை விதையும் மகசூலாக கிடைக்கும். சந்தையில் இதற்கு நல்ல மதிப்பு இருப்பதால் இதன் நல்ல இலாபத்தை ஈட்டலாம்.
அஸ்வகந்தா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட நினைத்தால், மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலைத் துறையை அணுகி ஆலோசனை பெறலாம்.