

மரங்கள் என்றாலே அவற்றால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மற்றும பறவைகளுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் கொஞ்சம் கூட ஐயமே இல்லை. மனிதர்களாகிய நாம் இந்த மரங்களை வெட்டி வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை தயாரிக்கிறோம். நாற்காலி, மேசை போன்றவற்றை தயாரிக்கிறோம்... காகிதம் தயாரிக்கிறோம்.. அதலிருக்கும் காய், கனி மற்றும் குறிப்பிட்ட சில மரத்தின் இலைகளையும் உண்கிறோம்... இந்த மரங்களின் சராசரி ஆயுட்காலம் 100 முதல் 300 வருடங்கள் வரை இருக்கலாம்..
ஆனால் ஒரு மரம் கிட்டதட்ட 2000 ஆண்டிற்கும் மேலாக இருக்கிறது. அது மட்டும் இல்லீங்க... அந்த மரம் சிங்கம் மாதிரி கர்ஜிக்கிறதாம்... பாரக்கலாமா... விரிவாக..
தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள முடாலே நகரின் ஸ்விகோடினி என்கிற கிராமத்தில் தான் இந்த அதிசயமான 2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஒரு மரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. இந்த மரமானது ஒரு பிரம்மாண்டமான பாவோபாப் மரம்.
அந்த கிராமத்திலுள்ள வெண்டா மக்களால் 'முரி குங்குலுவா' என்று அழைக்கப்படும் இந்த மரம், அதன் பெயருக்கு ஏற்றாற்போல் கர்ஜிக்கிறது.
'முரி குங்குலுவா' என்றால் அவர்கள் மொழியில் 'கர்ஜிக்கும் மரம்' என்று பொருளாகும். இந்த புராதன ராட்சத மரம் தன் பெயருக்கேற்றாற் போலவே விளங்குகிறது. அதன் கிளைகளுக்கு இடையே காற்று மெல்லிய ஓசையுடன் வீசும்போது, அது ஒரு லேசான மற்றும் முணுமுணுக்கும் ஒலியை எழுப்புகிறது. இந்த மரமானது அதனுடைய பிரம்மாண்டமான உருவத்திற்காகவும், மற்றும் வரலாற்றிற்கும் ஒரு சான்றாக விளங்குகிறது.
ஆனால், 'கர்ஜிக்கும் மரம்' என்று அழைக்கக் கூடிய இந்த மரம் வெறும் ஒலிக்காக மட்டுமில்லாமல் சுற்றியுள்ள அந்த சமூகத்தின் வாழ்வின் சாராம்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
'வாழ்வின் மரம்' என்றும் அழைக்கப்படும் இந்த பாவோபாப் மரம், அங்குள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் ஒரு முக்கிய ஆதாரமாகவே விளங்குகிறது.
ஏனெனில் இது தன்னைச் சுற்றியுள்ள விலங்குகளுக்கும் சமூகத்திற்கும் ஒரு சிறந்த வாழ்வாதாரமாக விளங்குகிறது. இதனுடைய அடிமரத்தில் 80% நீர் உள்ளது. மேலும் இந்த மரம் கிட்டதட்ட 4,500 லிட்டர் வரை நீரைத் தேக்கி வைக்கும் திறனையும் கொண்டது. இது சமூகத்திற்கும் விலங்குகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது.
யானைகள் இதன் பட்டையில் இருந்து உணவைப் பெறுகின்றன. அதே சமயம் பாபூன் குரங்குகள் இதனுடைய பழங்களை விரும்பி உண்கின்றன. இதனுடைய இலைகள் கூட ஊட்டச்சத்திற்கான சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இந்த மரம் பல்வேறு உயிரினங்களுக்கும் ஒரு புகலிடமாகவும் திகழ்கிறது.
பறவைகள், தேனீக்கள், பழ வௌவால்கள் மற்றும் புஷ் பேபிகள் இந்த மரத்தில் கூடு கட்டுகின்றன.
பாபூன்கள் இதன் பழங்களை உண்கின்றன. மனிதர்கள் இந்த மரத்தின் பழத்தை உலர வைத்து அந்த உலர்ந்த பழப் பொடியை பானங்களில், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்களின் ஆதாரமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் பட்டையைக் கொண்டு கயிறு, கூடைகள், பாய்கள், துணி மற்றும் காகிதம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
இந்த பாவோபாப் மரமானது ஆப்பிரிக்க மக்களுக்கு சிறந்த ஆன்மீக முக்கியத்துவத்தையும் அளிக்கிறது. பண்டைய காலங்களில், தலைவர்களும் பெரியோர்களும் முக்கியமான முடிவுகளுக்கு வழிகாட்டுதலை நாடி, இந்த பிரம்மாண்டமான மரங்களின் நிழலில் கூடுவார்கள்.
பாவோபாப் மரங்களுக்குள் வசிக்கும் ஆவிகள் ஞானத்தை அளித்து, அவர்களின் தீர்விற்கு நல்ல முறையில் நீதி அளிப்பதாகவும் மேலும் அந்த நீதி பலனளிப்பதாகவும் அவர்கள் நம்பினார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த 'கர்ஜிக்கும் மரம்', இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான ஆழமான பிணைப்பின் சக்திவாய்ந்த சின்னமாகத் திகழ்கிறது. இது ஆப்பிரிக்காவின் நீடித்த மனோபாவத்திற்கு ஒரு சான்றாகவும், தலைமுறைகளைத் தொடர்ந்து மேலும் வளர்ந்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு உயிருள்ள பாரம்பரியமாகவும் விளங்குகிறது.
வாசகர்கள் இயற்கையின் அரிதான அதிசயங்களைப் பற்றிய ஆழமான அறிவையும், பழங்கால மரங்களின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் பற்றிய தெளிவான புரிதலையும் பெறுவர்.