தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகத்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் வட்டங்களில் பொதுவானதாகவும் பரவலாகவும் பயிரிடப்படும் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் (Kanyakumari Matti Banana) ஓர் பாரம்பரிய உணவுப் பொருளாகும். கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் 2.5 செ.மீ முதல் 3 செ.மீ. நீளமுடையது.
இதன் உச்சி முதலையின் வாயைப் போன்றது. எனவே இதற்கு 'முதலை விரல் வாழைப்பழம்' என்ற புனைப்பெயரும் உண்டு. இந்த வாழை மரத்தில் நீளமாகவும், நேராகவும், சமமாகவும் வளரும். வழக்கமான வாழைப்பழக் குலைகளைப் போலல்லாமல், மட்டி வாழை சீப்பு ஒரு தனித்தன்மை வாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். இந்த வாழைப்பூ கிட்டத்தட்ட தரைக்கு இணையாக, 95° கோணத்தில் மரத்தில் தொங்கும் தன்மையுடையது.
மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியவை. மட்டி வாழையை நட்ட ஒரு ஆண்டிற்குள்ளாகவே வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியும். செப்டம்பர் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் வரை மட்டி வாழைப்பழத்தின் அறுவடை காலமாகும். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகள் இருக்கும். தாரில் 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். ஒரு வாழைப்பழம் மட்டும் 50 முதல் 60 கிராம் வரை எடையில் காணப்படும்.
குமரி மாவட்டத்தில் ஆறு மாதமான குழந்தைகளுக்கு தாய் பாலுக்கு அடுத்தப்படியாக திட உணவு வழங்கத் தொடங்கும்போது, மட்டி பழம் கொடுப்பது வழக்கம். எளிதில் ஜீரணமாகும், ஜலதோஷம் பிடிக்காது, எந்தவித வயிறு சம்பந்தமான உபாதைகளும் வராது என்பதால் தாய்ப்பாலை போல மட்டி பழமும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது.
தென் திருவிதாங்கூர் (பிரிக்கப்படாத தமிழ்நாடு, கேரளா) மலைகளில் மட்டுமே வளரும் ஒரு அரிய வகை வாழையாகும். இது செம்மட்டி (சிவப்பு நிறம்), தேன் மட்டி (தேன்), மலை மட்டி (மலை) என மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. இது மருத்துவக் குணம் கொண்டது. இதன் மணம், இனிப்பு, அமிலச் சுவை, தூள் தன்மை ஆகியவற்றால் தனித்தன்மை வாய்ந்ததாக வகைப்படுத்தப்படுகிறது.
மட்டி வாழைப்பழத்தில் குறைந்த அளவேச் சர்க்கரைச் சத்து உள்ளது. இது மற்ற வாழைப்பழங்களைப் போல், சளிப் பிரச்சனைகளை ஏற்படுத்தாது. எனவே இது குழந்தைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. மட்டி வாழை சிகடோகா நோய்க்கு வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளன.
மட்டி வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும், இரத்த அழுத்தத்தினைச் சீராகப் பராமாரிக்கவும் பெரிதும் உதவுகிறது. அது மட்டுமின்றி, உணவு செரிமானத்திற்கு அதிகம் உதவும் இந்த பழங்கள், இரப்பை மற்றும் குடல் பிரச்சினைகளை சரி செய்கிறது.
கன்னியாகுமரி மட்டி வாழைக்கு 2023 ஆம் ஆண்டு, ஜூலை 31 அன்று இந்திய அரசினால் இந்தியப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இது வருகிற 2030 ஆண்டு, ஏப்ரல் 28 வரை செல்லுபடியாகும். வீயனூரைச் சேர்ந்த கன்னியாகுமரி வாழை, தோட்டப்பயிர் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், கன்னியாகுமரி மட்டி வாழையின் புவிசார் குறியீடுக்கான பதிவினை முன் மொழிந்தது.
2021 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, இந்த வாழைப்பழத்திற்கு 2023 ஆம் ஆண்டில் சென்னை புவிசார் குறியீடு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புவிசார் குறியீட்டின் மூலம், "கன்னியாகுமரி மட்டி வாழை"க்குச் சிறப்பு கிடைத்திருக்கிறது.
கன்னியாகுமரிக்குச் சுற்றுலா செல்பவர்கள், அப்பகுதியில் கிடைக்கும் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தை வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்காமல் திரும்பிவிடாதீர்கள்...!