
பென்சில்வேனியா டச்சு குடும்பத்தைச் சார்ந்த சாம் வான் அகென் என்பவர், நியூயார்க் நகரில் உள்ள சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் சிற்பக்கலை இணை பேராசிரியராக இருந்தார். இவரது குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது. தகவல் தொடர்பு, தாவரவியல் மற்றும் வேளாண்மையில் புதிய முன்னோக்குக் கலைத் திட்டங்களை உருவாக்கும் எண்ணம் கொண்ட இவர், 2008 ஆம் ஆண்டில், கலை சார்ந்த ஒரு செயல் திட்டத்திற்காக பன்முக பூக்களைத் தரும் மரம் ஒன்றை உருவாக்க மாதிரிகள் தேடும் போது, நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்படவிருந்த நியூயார்க் ஸ்டேட் வேளாண்மை பரிசோதனை நிலையத்தின் 3 ஏக்கர் (1.2 ஹெக்டேர்) பழத்தோட்டத்தை வாங்கினார்.
அங்கு வளர்ந்து வரும் 250 பாரம்பரிய மரபுகள் உள்ள சிலவற்றிலிருந்து மொட்டுக்களை ஒரு வகை மரத்தின் மீது ஒட்டத் துவங்கினார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, அந்த மரம் நாற்பது வெவ்வேறு கிளைகளை 'தாய்' மரங்களிலிருந்து வளரச் செய்தது. ஒவ்வொரு கிளையிலிருந்தும் வித்தியாசமான பழங்களுடன் வாதுமை, சீமை வாதுமைப்பழம், செர்ரி, நெக்டரின், குழிப்பேரி மற்றும் பிளம் வகைகள் உட்பட பல்வேறு பழங்களைக் கொண்ட ஒரு மரம் வளர்ந்தது. ஒவ்வொரு மரமும் அமெரிக்காவில் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை வரிசையாகப் பழுக்கக்கூடிய 'புரூனசு' பேரினத்தைச் சார்ந்தது. ஒவ்வொரு வசந்தக் காலத்திலும் அந்த மரம் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களின் கலவையாகப் பூத்துக் குலுங்கும் 40 வகையான 'உள்ளோட்டுச் சதைக்கனியினைத்' தந்தது.
2014 ஆம் ஆண்டில், வான் ஏகன் 40 பழ மரத்தின் (Tree of 40 Fruit) 16 மரங்களை உற்பத்தி செய்து, நியூட்டன், மாசசூசெட்ஸ்; பவுண்ட் ரிட்ஜ், ஷாட்ஹில்ஸ்; நியூ செர்சி, பென்டொன்வில்லே, ஆர்கன்சா மற்றும் சான் ஜோஸ், கலிபோர்னியா அமைந்திருக்கும் சமூகத் தோட்டங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகள் உட்பட பல்வேறு தனியார் மற்றும் பொது இடங்களில் நிறுவினார். தற்போது அம்மரங்களும் வளர்ந்து, 40 வகையான பழங்களைத் தந்து கொண்டிருக்கிறதாம்!