
நாம் வாழுமிடங்களில் சாதாரணமாக எங்கும் காணக்கூடிய பறவை காக்கை. வேறு எந்தப் பறவையிடமும் காண முடியாத தனித்துவ குணங்கள் கொண்டது இப்பறவை. காக்கை இந்து மதக் கோட்பாடுகளிலும் மேன்மையானதோர் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். சனி பகவானின் வாகனம் இது. இறந்துபோன நமது முன்னோர்களின் மறு உருவமாக எண்ணி, அமாவாசை நாட்களில் இதற்கு தவறாமல் உணவளித்து வருகிறோம். உலகில் உள்ள புத்திசாலிப் பறவை இனங்களில் காக்கையும் ஒன்று. இவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 அற்புத குணங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
1. விரைவாக சிந்திக்கும் குணம் காக்கைக்கு உண்டு. பிரச்னைகளைத் தீர்ப்பது, சிறு பொருளைக் கூட ஒரு உபகரணமாகக் கையாள்வது, தந்திரமான முறையில் ஓரிடத்தில் உணவுப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து உண்பது போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். ஒரு காக்கை மற்றொன்றிடமிருந்து புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொண்டு குழுவின் மற்ற காக்கைகளுக்குத் தெரிவிப்பதும் உண்டு. இந்த மாதிரியொரு புத்திசாலித்தனம் பிற பறவைகளிடம் காண்பது அரிது.
2. காக்கைகள் எப்பொழுதும் மனிதர்களின் கவனத்தைக் கவரக் கூடியவை. 'காக்கையும் நரியும்' போன்ற பாரம்பரியமாக குழந்தைகளுக்குக் கூறப்பட்டுவரும் காக்கை கதை பல உண்டு. நூற்றாண்டு காலமாக மனிதர்களின் வாழ்வோடு இணைத்துப் பேசப்பட்டு, நம் கலாசாரத்தோடு ஒன்றிவிட்ட காக்கை ஒரு மர்மமான பறவையாகவே உள்ளது.
3. உணவு என்று வரும்போது காக்கை எதையும் விட்டு வைப்பதில்லை. பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், இறந்துபோன எலி என எல்லாவற்றையும் சாப்பிட்டு விடும். கிராமப்புறம், நகரம் என எல்லா இடங்களிலும் இவற்றிற்கு உணவு கிடைத்து விடும். காக்கையால் சுற்றுப்புறம் தூய்மையாவதால் 'ஆகாய தோட்டி' என்ற பெயர் இதற்கு வந்தது.
4. ஜனப் பெருக்கம் காரணமாக, மற்ற சில பறவையினங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கையில், காக்கை எல்லாவிதமான சூழலையும் சமாளிக்கும் திறன் கொண்டுள்ளதால் அவை உலகம் முழுவதும் கூட்டமாகக் காணப்பட்டு வருகின்றன.
5. காக்கைகளின் ஞாபக சக்தி பாராட்டுக்குரியது. தன்னிடம் அன்பு காட்டுபவர்கள் மற்றும் தீங்கிழைப்பவர்கள் முகத்தை நன்கு ஞாபகம் வைக்கவும், தீங்கிழைப்பவர்களிடம் கவனமுடனிருக்கும்படி, பிற காக்கைகளுக்கு அறிவுறுத்தவும் செய்யும்.
காக்கைகளிடம் அன்பு செலுத்துவோம்; கருணை காட்டி காப்பாற்றுவோம்!