
இயற்கையின் படைப்பில் மனிதர்கள், விலங்குகள், பூச்சி இனங்கள் என பலப்பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தமது உணவு, உறைவிடம், பாதுகாப்பு, இனப்பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு வகையான தனித்துவம் நிறைந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றன. இவற்றில் சில விலங்குகள் இயற்கையாகவே பாதுகாப்பு கவசம் அணிந்தது போன்ற உடலமைப்புக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட விலங்குகள் ஐந்தைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. முள்ளம்பன்றி (Porcupine): முள்ளம்பன்றி கொறித்துண்ணி இனத்தைச் சேர்ந்த, இரவு நேரங்களில் அதிகம் நடமாடும் விலங்கு. மரங்கள் மீதும், தரையில் குழிகளுக்குள்ளும் வாழ்பவை. தீவனம் தேடி அதிக நேரம் தனியாக வெளியில் சுற்றுபவை. இதன் மேற்புற தோலிலுள்ள முடிகள் நீண்ட கூர் முனையுடைய முட்களாக உருமாறி வளர்ந்திருக்கும். இம்முட்கள் பல கூட்டங்களாகக் காணப்படும். அவற்றில் சில கிலுகிலுப்பை ஒலியை உண்டுபண்ணக் கூடியதாகவும் இருக்கும். முள்ளம்பன்றி எதிரிகளை சந்திக்கும்போது கிலுகிலுப்பையால் ஒலி எழுப்பி எச்சரிக்கும். எல்லை மீறும்போது, அது பின்னோக்கிச் சென்று எதிரியை தாக்கும். முட்கள் எதிரி விலங்கின் உடலினுள் ஆழமாக ஊடுருவி கடும் காயம் அல்லது மரணத்தைக் கூட உண்டாக்கிவிடும். புலிகள், சிறுத்தைகளால் கூட இதன் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாது.
2. எறும்புண்ணி (Pangolin): பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது இது. இதன் உடல் முழுவதும் பெரிய பெரிய செதில்களால் மூடப்பட்டிருக்கும். இதன் முன் கைகளில் வலுமிக்க நகங்கள் உண்டு. எதிரிகளால் தாக்கப்படும் சூழல் உருவாகும்போது இது இறுக்கமான ஒரு பந்தாக சுருண்டு கொள்ளும். பந்தை அவிழ்ப்பது எவருக்கும் சாத்தியமற்றது. ஏனெனில், செதில்களின் கூர்மையான விளிம்புகளை எந்த கொம்பனாலும் கையாள இயலாது. மேலும், அதன் கனமான வாலில் உள்ள செதில்களாலும் எதிரியை தாக்கிக் காயப்படுத்திவிடும்.
3. பிளாட்டிபஸ்: இது ஒரு முட்டையிட்டுப் பாலூட்டும் அசாதாரண விலங்கு. ஆண் பிளாட்டிபஸ்ஸின் ஒவ்வொரு பின்னங்கால்களிலும் கூர்மையான, உள்ளிழுக்கக்கூடிய ஒரு ஊசி உள்ளது. இது விஷ சுரப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எதிரிகளால் பிடிக்கப்படும்போது, பிளாட்டிபஸ் இந்த ஊசிகளால் உதைத்து விஷத்தை செலுத்துகிறது. இதைப் பிடிக்க வந்த எதிரி வலி தாங்காமல் விட்டு விட்டு ஓட இந்த காரணம் போதுமானது. இந்த விஷம் மனிதர்களுக்கு ஆபத்தானதல்ல என்று கூறப்படுகிறது.
4. ஆமைகள் (tortoise): இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை. அவற்றின் ஆயுள் 300 ஆண்டுகள் வரை கூட நீடிக்கும். ஆமைகளின் உடல் ஒரு கடினமான ஓட்டினால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆமை ஓடுகள் ஒரு அமைப்பைக் கொண்டவை கிடையாது. மாறாக, 60 எலும்புகளால் ஆனது. எதிரிகளை சந்திக்கும் ஆமை, தனது உடல், தலை, கால் என அனைத்தையும் ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளும். ஓட்டிற்குள் அதிக நேரம் மூச்சு விடாமல் கூட ஆமையால் இருக்க முடியும்.
5. முதலை (crocodile): முதலையின் உடலமைப்பு பிரத்யேகமானது. கடினமான தோலின் மீது, ஸ்க்யூட் எனப்படும் எலும்பு போன்ற தடிமனான செதில்களால் இதன் உடம்பு முழுவதும் போர்த்தப்பட்டுள்ளது. இதன் கடினமான உடலமைப்பே சிறந்த கவசமாக அமைந்து, இதை நீருக்குள்ளும் வெளியேயும் எதிரிகளிடமிருந்து காக்க உதவி புரிகின்றன.