
ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்புகளைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பின் விஷம் மனிதனின் நரம்பு மண்டலத்தை தாக்கி சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் என்பதால் பாம்பை கண்டு பயப்படாதவர்கள் மிகவும் குறைவு. எளிதாக ஊர்ந்து ஒளிந்து கொள்ளும் திறன் கொண்ட பாம்புகள் நம் வீட்டைச் சுற்றி இல்லாமல் இருக்க அகற்ற வேண்டிய ஐந்து பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. நீர்நிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள தாவரங்கள்: குளங்கள் மற்றும் சிறிய நீர் நிலைகள், பாம்புகளின் முக்கிய உணவாக இருக்கும் தவளைகள் மற்றும் பூச்சி இனங்களை ஈர்க்கின்றன. பாம்புகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் நீர்நிலைகள் மற்றும் அதற்கு அருகில் வளரும் லில்லி மற்றும் தாமரைகளின் மென்மையான தண்டுகளோடு பாம்புகள் வாழ விரும்புவதால் நீர்நிலைகளையும் அவற்றைச் சுற்றியுள்ள தாவரங்களுக்கு அருகிலும் கவனமாக இருப்பது பாம்பு பயத்திலிருந்து காப்பாற்ற உதவும்.
2. தரையில் அடர்த்தியாக படரும் செடிகள்: தரையில் அடர்த்தியாக வளரும் புற்களான இங்கிலீஷ் ஐவி அல்லது பெரிவிங்கிள் போன்றவை பாம்புகள் மற்றும் அவற்றின் உணவு, பூச்சிகளுக்கு நல்ல மறைவிடங்களை வழங்குகின்றன. பாம்புகளுக்கு பாதுகாப்பான குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழலை வழங்கும் இந்த அடர்த்தியான இலைகளுக்கு அருகில் கவனமாக இருக்க வேண்டும்.
3. அடர்த்தியான மரங்கள், புதர்கள்: விலங்குகளுக்கு உணவாக இருக்கும் சிறிய விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளை பெர்ரி புதர்கள் ஈர்க்கின்றன. பாம்புகளுக்கு சிறந்த தங்குமிடத்தை இந்த புதர்களின் அடர்த்தியான முட்கள் வழங்குகின்றன. உயரமான புல் உள்ள பகுதிகளில் எலிகள் காணப்படுகின்றன. இவை பாம்புகளுக்கு எளிதான இரையாக இருப்பதால், அத்தகைய புல்வெளிகளில் பாம்புகள் வாழ விரும்புகின்றன.
4. இலை குவியல்கள், அழுகும் பொருட்கள்: தோட்டங்களில் கரிம உரங்களுக்காக இலை குவியல்கள் பெரும்பாலும் குவிவதோடு, இலைகள் சிதைவதால் ஈரப்பதமாகின்றன. இந்த இடத்தில் எலிகள் உட்பட பல பூச்சிகள் அங்கு எளிதில் வந்து சேர்வதால், இந்த குவியல்கள் பாம்புகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருக்கின்றன. அழுகும் பொருட்கள் வெப்பத்தை உருவாக்குவதோடு பாம்புகளையும் இவை வெகுவாக ஈர்ப்பதால் இத்தகைய இடங்களிலும் பாம்புகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.
5. வலுவான மணம் கொண்ட பூச்செடிகள்: இனிமையான, வலுவான மணம் கொண்ட பூச்செடிகளான கிரிஸான்தமம், மல்லிகை, மணிப்பூ, ஹஸ்னுஹானா போன்ற பூச்செடிகள் பாம்புகளை ஈர்க்கும் தன்மை கொண்டது என்பதால் இத்தகைய இடங்களிலும் கவனம் தேவை.
எதிர்வரும் பருவ மழையை கருத்தில் கொண்டு பாம்புகள் வருவதை தடுக்க மேலே குறிப்பிட்ட பொருட்களை வீட்டை விட்டு விலக்கி வளர்ப்பது, தோட்டத்தை சுத்தமாக வைத்திருப்பது, நீண்ட புல்லை வெட்டுவது மற்றும் இலைகளின் குவியலை அகற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தடுக்கலாம்.