
மான்களைப் பார்க்கும்பொழுது அதன் கொம்புகளை ரசிக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு மானுக்கும் ஒவ்வொரு விதமாக அதன் கொம்பு இருக்கும். அப்படிப்பட்ட மான்கொம்புகளின் சிறப்பான தகவல்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
‘மம்மேலியா’ என்னும் பாலூட்டி விலங்குகளில், அங்குலேட்டா என்னும் குளம்புகளில், ஆர்ட்டியோ டாக்ட்டிலா என்றும் விரிகுளம்பு அல்லது இரட்டைக் குளம்பு உள்ளவற்றிலே அசைபோடுவன என்ற பிரிவில் கெட்டிக் கொம்புள்ள செர்விடீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் மான்கள் ஆகும். இந்த மான் வகைகளில் கஸ்தூரி மான், சீனத்து நீர்மான் ஆகியவை தவிர, மற்ற இனங்களில் எல்லாம் கிளைகள் உள்ள கலைக் கொம்புகள் உண்டு. இந்தக் கலை கொம்புகள் ஆண் மான்களுக்கே உண்டு. ரேய்ண்டியர் என்னும் பனி மானில் மட்டும் ஆண், பெண் என இரண்டிற்கும் கலைக் கொம்புகள் இருக்கும்.
மான்களுக்குரிய சிறப்பான இயல்புகள்: மான்களின் கண் குழிக்கு நேர் முன்னாக மண்டை ஓட்டில் ஒரு சிறிய பிளவு இருக்கும். மேல்தாடையில் கோரப்பற்கள் இருக்கும். அவை கலைக் கொம்புகள் இல்லாத இனங்களில் நன்றாகப் பெரியதாக வளர்ந்திருக்கும். கஸ்தூரி மான் தவிர மற்ற மான்களின் கல்லீரலில், பித்தப்பை இருப்பதில்லை.
சாதாரணமாக பெரியனவாக வளர்ந்திருக்கும் விரல்களையும், கால் குளம்புகளையும் அடுத்துள்ள பக்கக் குளம்புகள் மாடு, ஆடுகளில் மிகச் சிறியனவாகக் காணப்படும். ஆனால், எல்லா மான் வகைகளிலும் நான்கு கால்களிலும் சற்று பெரியனவாகவே வளர்ந்திருக்கும். வால் குட்டையாக இருக்கும். கால்கள் ஒல்லியாக சற்று நீளமாக வளர்ந்து இருக்கும். ஓடுவதற்கு வசதியாக இருக்க வேண்டாமா? அதற்குத்தான் இறைவனின் ஏற்பாடு இது.
மானிற்கு அழகு அதன் கொம்புகள்தான். மிகச் சிறப்பான உறுப்புகள். இவை. ஆடு, மாடு போன்ற ஆசை போடும் விலங்கினங்களுக்கு இருக்கும் கொம்பில் இருந்து பெரிதும் வேறுபட்டது இது. மேலும், இந்தக் கொம்புகள் ஆடு, மாடுகளுக்கு இருப்பது போல என்றும் நிலையாக இருப்பவை அல்ல. குறித்த ஒரு கால அளவுக்குள் இருந்து ஒரு பருவத்தில் உதிர்ந்து திரும்ப முளைக்கும் தன்மை உடையவை. இவை முற்றிலும் வளர்ந்துள்ளபோது வெறும் எலும்புப் பொருளால் அமைந்த திரல்களாகத்தான் இருக்கும். இவற்றின் மேல் எவ்விதப் போர்வையும் இராது.
ஆடு, மாடுகளில் கொம்பிலே கைட்டின் என்னும் கொம்புப் பொருள் போர்த்தி இருப்பதைக் காணலாம். மான் கொம்புகள் வெல்வெட்டு போன்ற முடிச்சுகளாகத் தோன்றி, மிக விரைவாக வளரும். கொம்பு இளையதாக இருக்கும்போது அதன் மேலே மென்மையான தோல் போர்த்தியிருக்கும். அது வெல்வெட்டு எனப்படும். இந்த தோலில் ரத்தக் குழாய்கள் மிகுதியாக இருக்கும். அதன் மேல் மென்மையான சிறு ரோமம் பரவினது போல வளர்ந்து இருக்கும்.
இந்த நிலையில் கலைக்கொம்பு மிக மிருதுவாகவும், உணர்ச்சி மிக்கதாகவும் இருக்கும். கொம்பின் வளர்ச்சி முற்றின காலத்தில் அதன் அடியில் ஒரு வளையம் போன்ற எலும்பு வரம்பு வளரும். இது தோலில் அழுத்தும். அதனால் தோலுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தம் ஓடாமல் போகவே வெல்வெட்டு தோல் சுருங்கி உலர்ந்து வெடித்து உரிந்து உதிரும்.
மான் அந்தக் கோடுகளை உராய்வதனால் தோல் முற்றிலும் இல்லாமல் போகும். புதிதாக முளைக்கும். பருவம் தோறும் கொம்புக்கு புதிய கிளைகள் தோன்றும். இவையே கலைகள். இப்படி கலை புதிது புதிதாக தோன்றி அந்த மான் இனத்திற்குரிய கொம்பின் அளவு வளர்ந்து விடும். மான் வயது அதிகரித்து முதுமை அடைய கொம்புகளின் வளர்ச்சி ஒவ்வொரு தடவையும் குன்றிக்கொண்டே போகும்.
மான்கள் தம்மைக் காத்துக் கொள்வதற்கும், பகை விலங்குகளை எதிர்த்து மோதுவதற்கும் தற்காப்பு மேற்கொள்ளலாகிய இரு முறைகளிலும் உதவும் போர் கருவியாக கலைக்கொம்புகள் பயன்படுகின்றன. இனப்பெருக்க பருவத்திலே ஆண் மான்கள் பெண்களுக்காக போரிடுவதுண்டு. மான் கொம்பு நன்றாக முதிர்வதற்கும் மான்கள் இணைகூடும் பருவம் வருவதற்கும் சரியாக இருக்கும்.
மான் குடும்பம் ஆசியா, ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்கா, வட தென் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் பரவி இருக்கின்றன. என்றாலும், இந்தியாவிலும் பலவிதமான மான் இனங்கள் இருக்கின்றன.