
டைனோசர் காலத்திற்கு பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சில வகை கடல்வாழ் உயிரினங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றைச் சுற்றியுள்ள கிரகம் (Planet) பல வகையான மாற்றங்களைச் சந்தித்து வந்தபோதும், அவற்றால் சிறிதளவும் பாதிக்கப்படாமல் இன்றும் இவை வாழ்ந்து கொண்டிருப்பது அதிசயிக்கத்தக்க உண்மை எனலாம். அவ்வாறான ஐந்து வகை உயிரினங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. நாட்டிலஸ் (Nautilus): இவை வெப்ப மண்டல இந்தோ-பசிபிக் கடற் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவை. வளைவுகளாலான ஓடுடுடைய நாட்டிலஸ், கடந்த அரை பில்லியன் ஆண்டுகளில் ஒரு சிறிய மாற்றம் மட்டுமே பெற்றுள்ளது. இது நீந்துவதற்கு ஜெட் உந்து விசையை (Jet Propulsion) பின்பற்றி வருகிறது. இதன் புதை வடிவங்கள் (Fossils), சுமார் 500 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே நாட்டிலஸ் வாழ்ந்து வந்திருப்பதையும், மிகப் பழைமை வாய்ந்த கடல்வாழ் உயிரினங்களின் குழுவில் இதுவும் ஒன்று என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
2. ஜெல்லி ஃபிஷ் (Jellyfish): சுமார் 500 மில்லியன் வருடங்களுக்கு முன்பே, பூமியின் பழம்பெரும் கடல்களின் மேற்பரப்பில் ஜெல்லி ஃபிஷ் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு உடலில் எலும்புகள் கிடையாது. மூளையும் கிடையாது. அப்படியிருந்தும், பூமியின் பல வகையான உயிரினங்கள் அடியோடு அழிவை சந்தித்தபோதும், ஜெல்லி ஃபிஷ் வகைகள் எந்த விதமான பாதிப்புமின்றி தொடர்ந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
3. ஸ்பான்ஞ்சஸ் (Sponges): கண்டுபிடிக்கப்பட்ட அனிமல் குழுவில் மிகப் பழைமை வாய்ந்தவை ஸ்பான்ஞ்சஸ் எனலாம். ஸ்பான்ஞ்சஸின் 600 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய புதை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. கடல்வாழ் உயிரினமான இந்த ஸ்பான்ஞ்சஸ் மிகச் சாதாரண உடலமைப்பைக் கொண்டுள்ளன. இதற்கு உறுப்புகள் எதுவும் கிடையாது. இருந்தபோதும் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துக் கடல்களிலும் இவை செழித்தோங்கி சிறப்பாக வாழ்ந்து வருகின்றன. அநேக உயிரினங்களின் வாழ்வு தொடங்கும் முன்பே ஸ்பான்ஞ்சஸ் கிளை பரப்ப ஆரம்பித்துவிட்டதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.
4. ஹார்ஸ்ஷூ க்ராப் (Horseshoe Crab): ஹார்ஸ்ஷூ க்ராபின் தோற்றம் சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. பல வகையான உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்ட பின்னும், ஹார்ஸ்ஷூ க்ராப் எந்தவித பாதிப்புமின்றி தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இதன் கடினமான ஓடு மற்றும் நீல நிற இரத்தம் ஆகியவையே காரணம் எனக் கூறப்படுகிறது.
5. கோலகாந்த்ஸ் (Coelacanths): கோலகாந்த்களும் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினமாகக் கருதப்படுகின்றன. 1938ம் ஆண்டு வரை இவை முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், புதை படிவ மீன் என்றும் மக்களால் நம்பப்பட்டு வந்தன. 1938ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உயிருள்ள ஒரு கோலகாந்த்ஸ் மீன் பிடிப்பட்டது. இது அதன் மூதாதையர்களின் புதை படிவத்தை ஒத்திருப்பதால் இதை மக்கள், ‘வாழும் புதை படிவம்’ என அழைத்து வருகின்றனர். ஆழ் கடலில் வாழும் இவ்வகை மீன் மடல் துடுப்பு (lobe finned) கொண்டது.
மேலே கூறிய உயிரினங்கள் சிறு கோள்கள் மற்றும் எரி கற்களின் தாக்கம், பூகம்ப அதிர்வு, கடுமையான வானிலை மாற்றம் போன்ற பேரதிர்ச்சிகளைத் தாக்குப்பிடித்து தொடர்ந்து உயிர் வாழ்வது அதிசயிக்கக்கூடிய நிகழ்வு என்றே கூறலாம்.